இலங்கை

நரம்புகளை வெட்டி உயிருக்கு அரசு ஆபத்தை ஏற்படுத்தலாம்;  அதனாலேயே கஸ்ஸப தேரர் வெளியேறினார்

நரம்புகளை வெட்டி மக்களை இந்த அரசாங்கம் கொலை செய்வதால், கஸ்ஸப தேரரின் உயிர்பாதுகாப்பை கருத்திற்கொண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து அவர் வெளியேறி, தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாக உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பிக்குகளால் கொழும்பில் விகாரமஹாதேவி பூங்கா பகுதியில் முன்னெடுக்கப்படும் சத்தியாக்கிரகப் போரட்டத்தில் கலந்துகொண்டுள்ள உலப்பனே சுமங்கல தேரர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பலங்கொட கஸ்ஸப தேரர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவர் தற்போதும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். முதலில் அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில். இரவு 12 மணி முதல் பொலிஸ் அதிகாரிகள் பலரும், வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்டோரும் அவர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்ற கோணத்தில் கூறுகின்றனர். ஆனால் தேரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவருக்கு வைத்தியசாலையில் இருந்து வெளியேற வேண்டாம் என்று கூறப்பட்டுள்ள போதும், உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவர் வைத்தியசாலையில் இருந்து விருப்பத்தின் பேரில் வெளியேறி தற்போது தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

தேசிய வைத்தியசாலை பணிப்பாளரோ அல்லது பொலிஸாரோ இதுகுறித்து உரிய முறையில் பொறுப்புடன் செயல்படவில்லை. எங்களுக்கு தேரரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. காரணம் உயிர் நரம்புகளை வெட்டி இந்த அரசாங்கம் மக்களை கொலை செய்கின்றது. இதனால் அவரின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அவரை நங்கள் வேறு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளோம். இந்த அரசாங்கம் பலங்கொட கஸ்ஸப தேரரின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்த வேண்டும். தேரரின் உயிரைக் காப்பாற்றவும், அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்கவும் வலியுறுத்தி நாங்கள் போராடி வருகிறோம்.

இதேவேளை நாங்கள் தற்போது முன்னெடுக்கும் போராட்டத்தை வெற்றி வரையில் கொண்டு செல்வோம். அதுவரையில் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *