முச்சந்தி

யாழ்., பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர் ஒன்றியங்களினதும் கூட்டு அறிக்கை!

எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் கடந்த 24, 25 ஆம் திகதிகளில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டமானது நான்கு அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து நடைபெற்றிருந்தது. தற்பொழுது ஒரு சில நிர்வாக மற்றும் அரசியல் நோக்கங்களிற்காக அது முழுமையாக திரிபுபடுத்தப்பட்டு போராட்டத்தின் நோக்கம் முழுமையாக திசை மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது.

போராட்டத்தின் நோக்கத்தினையும் சரியான புரிதலையும் வழங்கும் நோக்கத்துடன் இந்த ஊடக அறிக்கையினை வெளியிடுகின்றோம்.குறித்த உண்ணாவிரதப் போராட்டமானது பின்வரும் நான்கு அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து நடைபெற்றிருந்தது.

விதிகளிற்குப் புறம்பாக நடைபெறும் இநடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்துதல்

போராடுதல் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்தல்

விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய்தல்

மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்து மாணவர்களிற்கு உடனடி நிவாரணம் வழங்குதல்.

எமது பல்கலை மாணவர்கள் மீது விதிக்கப்பட்ட வகுப்புத்தடைகள் விதிமீறல்களுடனும் உரிய கால நீட்டிப்புக்களுடனும் நடைபெறவில்லை என்று 25.01.2025 அன்று நடைபெற்ற பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. கல்லாசனங்கள் அகற்றப்பட்ட விடயத்தில் கூட எவ்வித நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படாமலும், ஒப்புதல்கள் பெறப்படாமலும் பொதுச் சொத்தொன்று உடைத்துத் தகர்க்கப்பட்டுள்ள குற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளமையினையும் பேரவையானது கண்டறிந்துள்ளமை நோக்கத்தக்கது.

மேற்படி விதிமீறல்களுடன் நடைபெற்ற விடயங்கள் குற்றமெனக் கணிக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்த செயல்கள் யாவும் போதைப் பொருட்களிற்கு எதிரான நடவடிக்கையின் விளைவுகளாக சித்தரித்து திரிபுபடுத்தப்படுகின்றமை வேதனையானது. முதலாம் ஆண்டு மாணவர்களின் பாடத்தெரிவுச் சிக்கலில் உள்ள பிறழ்வுகளையும், குழுவில் கலந்துரையாடிய மாணவனுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டமையும் திட்டமிட்டு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிகார பீடங்கள் தங்களின் நலன்களிற்காக போராடும் வர்க்கங்களை பிரித்தாளும் வழமை யாவரும் அறிந்ததே! அவ்வாறு தான் ஒரு சில நிர்வாக ஒத்தோடிகளின் துணை கொண்டு புதிய புனைவுகள் எம்மத்தியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

மாணவர்கள் மீது நடைபெற்ற ஒழுக்காற்று விசாரணைகள் எவற்றிலும் கல்லாசனங்களோ, போதைப் பொருட்களோ நேரடியாகத் தொடர்புபடாத நிலையிலும் ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்துகின்றோம்.

மாணவர் சமூகமாக நாங்கள் ஒருபோதும் போதையை ஆதரித்ததுமில்லை, ஆதரிக்கப் போவதுமில்லை. மாறாக ‘காலில் புண் என்றால் காலினை வெட்டியெறிவதற்குப் பதில் அதனை ஆற்றுவதே சமூகப் பொறுப்பு’. அதாவது கல்லாசனங்களால் ஏதேனும் சிக்கல் நிலை இருப்பின் அதற்கான முற்காப்பு நடவடிக்கைகளினை மேற்கொள்ளுவதும், அதனை தடுத்து நிறுத்துவதுமே மாணவர் ஒழுக்கம் சார் தரப்பினரின் கடமையும் பொறுப்புமாகும்.

மாறாக பொதுச் சொத்தினை தகர்ப்பது என்பது பெருந்தவறு. அதனை நியாயப்படுத்தும் விதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகம் ஒரு நெறிபிறழ்ந்த சமூகம் எனும் காட்டிக் கொடுப்புக்கள் திட்டமிட்டு பல்கலைக்கழக மாண்பிற்கு களங்கமேற்படுத்தும் வகையில் ஒரு சில நிர்வாக ஒத்தோடிகளின் துணையுடன்; அரங்கேற்றப்படுகிறமை வேதனைக்குரியது.

மாணவர்களுடைய கருத்தாக சித்தரித்து ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்ட ஊடக சந்திப்பென்பது மாணவர்களுடைய கருத்தன்று! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்இ ஒன்றியப் பிரதிநிதிகள், பல்கலை நிர்வாகம் ஆகியவற்றை களங்கப்படுத்தும் வகையில் ஆதாரங்களேதுமற்ற திரிபுபடுத்தப்பட்ட பொய்யான செய்திகள் பொது வெளியில் பகிரப்பட்டு வருகின்றமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பழிவாங்கல்கள் மற்றும் கற்றல் உரிமைகளிற்காக அனைவராலும் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டமானது மாணவர்களின் அடிப்படை கற்றல், சனநாயக உரிமை சார்ந்தே முன்னெடுக்கப்பட்டது. எனினும் அது திட்டமிட்டு திரிபுபடுத்தப்படுவதோடு, பல்கலைக்கழகத்திற்கு களங்கமேற்படுத்துவதாக அமைந்துள்ளது. பல்கலைக்கழக பேரவையினையும் துணைவேந்தரையும் திட்டமிட்டு குற்றஞ்சாட்டும் நோக்கில் இவை பரப்பப்படுகின்றமையினையும் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button