புட்டினுடன் சந்திப்பு சாத்தியமா?… டிரம்ப் – நேட்டோ உறவில் முறுகல்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

ரஷ்ய ஜனாதிபதி புட்டின், டொனால்ட் டிரம்ப் உட்பட சர்வதேசத் தலைவர்களுடன் ஈடுபடுவதற்கான தனது திறந்த தன்மையை தொடர்ந்து கூறியுள்ளார் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அண்மையில் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவில் பேச்சுவார்த்தைத் திறனை பலவீனப்படுத்தும் அபாயம் அதிகம் உள்ளது என்றும், சமாதானத்தை நிலைநிறுத்த புட்டினை நேரடியாகத் தொடர்பு கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். ஆயினும் சந்திப்புக்கான திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
நேட்டோ உறவில் முறுகல் :
நேட்டோ உறுப்பு நாடுகள் தங்கள் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று டிரம்ப் நீண்டகாலமாக கூறி வருகிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உட்பட 32 நாடுகளை உள்ளடக்கிய வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) டிரம்பின் பொருளாதர வெறுப்புக்குரிய விஷயங்களில் ஒன்றாகும்.
அதிபராக தனது முதல் பதவிக் காலத்தின் போது, மற்ற உறுப்பு நாடுகள் ‘தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட வேண்டும்’ என்ற ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கை அடையத் தவறினால், நேட்டோவிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதாக அவர் அப்போது அச்சுறுத்தினார்.
மேலும் தனது பங்கை செலுத்தாத ஒரு உறுப்பு நாடு தாக்கப்பட்டால், அமெரிக்கா அதை பாதுகாக்காது என்றும் டிரம்ப் கூறியது பலத்த சர்ச்சையை ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்தியது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க முன்னர், ஜனவரியின் 2025 தொடக்கத்தில், நேட்டோவின் ஐரோப்பிய உறுப்பு நாடுகள் தங்கள் தேசிய வருமானத்தில் 5% (முந்தைய இலக்கை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாக) இதற்காக செலவழிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
நேட்டோவின் நோக்கம் மற்றும் பணியை ‘அடிப்படையில் இருந்தே மறு மதிப்பீடு செய்வது’ தான் டிரம்பின் குறிக்கோள் என்று அவரது அரசியல் பிரசார வலைத்தளம் விவரிக்கிறது.
ஆயினும் நேட்டோ கூட்டணியில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் அவரது கட்சிக்கு உள்ளயே நிலவுகிறது.
ஆனால் நேட்டோவில் இருந்து வெளியேறாமல் கூட இந்தக் கூட்டணியை பலவீனப்படுத்த அவருக்கு இன்னும் வழிகள் உள்ளன என்று இராணுவ அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் அதனை அவரால் சாதிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
டிரம்ப் ரஷ்ய ஆதரவு போக்கு:
ரஷ்யாவின் வாசலில் யாரோ நிற்கிறார்கள். அதைப் பற்றிய அவர்களின் உணர்வை என்னால்
புரிந்து கொள்ள முடிகிறது எனும் ரஷ்யாவிக்கு ஆதரவான டொனால்ட் டிரம்ப் கருத்துகள் உக்ரைனை கொதிப்படைய வைத்துள்ளது.
போர் 2022இல் தொடங்குவதற்கு முன்பு, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கலாம். உக்ரைனை நேட்டோவில் சேர்க்காமல் விலக்கி வைக்க டிரம்ப் ஒப்புக் கொண்டிருப்பார். மேலும் ஜோ பைடன் விரும்பத்தகாத பிற சலுகைகளையும் ரஷ்யாவிற்கு வழங்கியிருப்பார் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் ரஷ்யா-உக்ரைன் போரை நூறு நாட்களில் முடிவுக்குக் கொண்டு வரும் திட்டம் இருப்பதாக அறிவித்துள்ளார்.
இன்னமும் இத்திட்டம் பற்றிய அதிகாரப்பூர்வ முழுமையான விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் டொனால்ட் டிரம்பின் குழு ஏப்ரல் மாதத்திற்குள் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குடியரசுக் கட்சித் தலைவரும் அதிபருமான டொனால்ட் டிரம்ப் மாஸ்கோவிற்கு வழங்கிய நிபந்தனைகள் பற்றியும் தெளிவாக விளக்கப்படவில்லை.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் கடந்த திங்களன்று ஜனவரி 20இல் பதவியேற்ற நாளில் பல நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது அவரது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும். உக்ரைனுக்கான டிரம்பின் சிறப்புத் தூதர் ஓய்வுபெற்ற அமெரிக்க ஜெனரல் கீத் கெல்லாக் இது குறித்து கூறுகையில் “இராஜாங்க தொழில்முறை மட்டத்தில் ஒரு இலக்கை நிர்ணயிக்க விரும்புகிறேம், அதை நூறு நாட்களில் நிர்ணயிப்போம்” என்றும் கூறினார்.
அடுத்த மாதம் இப்போரின் மூன்றாவது ஆண்டு நிறைவு அடைய உள்ளது. ஆனால் டிரம்பின் உக்ரைன் நூறு நாள் போர் நிறுத்த திட்டம் எவ்வளவு நம்பிக்கையுடன் தோன்றினாலும், நூறு நாட்கள் என்பது மிகவும் கடினமான ஒன்றாகும் என கூறப்படுகிறது.
உக்ரேன் நிதி நிறுத்தம்:
உக்ரேனுக்கான நிதி உதவியை நிறுத்தப் போவதாக டிரம்ப் அடிக்கடி மிரட்டல் விடுத்திருந்தார். அவருடைய தேர்தல் பிரசாரத்தின் போது, ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போரை ‘ஒரே நாளில்’ முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று டிரம்ப் பலமுறை கூறினார். ஆனால், அதுகுறித்த கூடுதல் விவரங்களை அவர் இதுவரை அளிக்கவில்லை.
2022ஆம் ஆண்டில் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து,
உக்ரேனுக்கு வழங்கப்பட்ட பில்லியன்கணக்கான டாலர்மதிப்பிலான அமெரிக்க ராணுவ உதவி குறித்து டிரம்ப் நீண்டகாலமாக விமர்சித்து வருகிறார்.
இதனால், போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யாவுடன் சமரசம் செய்யுமாறு உக்ரேனை டிரம்ப் நிர்பந்திப்பார் என்ற அச்சம் உக்ரேன் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் உக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கான டிரம்பின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட கீத் கெல்லாக் என்பவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஜனவரியின் தொடக்கத்தில், ஊடகங்களிடம் பேசிய கெல்லாக், ‘100 நாட்களுக்குள் இந்த விவகாரத்தில் ஒரு தீர்வை எட்டுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகக்’ கூறினார்.
மேலும் ரஷ்யாவுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க உக்ரேன் ஒப்புக் கொண்டால் மட்டுமே, அந்நாடு அமெரிக்காவின் உதவியைப் பெற முடியும் என்று கெல்லாக் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு ஆய்வறிக்கையில் முன்மொழிந்தார்.
அத்துடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தன்னைச் சந்திக்க விரும்புவதாகவும், தனது குழுவினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளமை உக்ரைனிய அரசுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![]()