முச்சந்தி

மகிந்தவின் பாதுகாப்பை நீக்க முயற்சி!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை இல்லாமல் செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு எந்த உரிமையும் உங்களுக்கு கிடையாது என்றும், அவ்வாறு முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு நீக்கப்படுமாக இருந்தால் தற்போதைய ஜனாதிபதி பயங்கரவாதிகளுக்கு உதவுபவராகவே இருக்க வேண்டும் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசமே இவ்வாறு கூறினார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ வசிக்கும் வீட்டின் வாடகை தொடர்பில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார். ஜனாதிபதிக்காக கோட்டையில் ஜனாதிபதி மாளிகை உள்ளது. அதில் நீங்கள் வசிக்கின்றீர்களா என்று தெரியாது. ஆனால் ஜனாதிபதி மாளிகை எவருக்கும் வாடகைக்கு கொடுக்கவில்லை. அப்படியென்றால் ஜனாதிபதியென்ற வகையில் நீங்கள் அங்கு வசிக்காவிட்டாலும் அதன் வாடகை எவ்வளவு என்பதனை கூறுங்கள். அத்துடன் பிரதமருக்காக அலரி மாளிகை உள்ளது. அதனையும் வாடகைக்கு வழங்கினால் அதன் பெறுமதி எவ்வளவு என்பதனையும் கூறுங்கள்.

எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்‌ஷ நாட்டை மீட்டெடுத்த தலைவராவார். யுத்தை முடிவுக்கு கொண்டு வந்து சவப் பெட்டிகள் ஊர்களுக்கு பேரணியாக வருவதை நிறுத்தியவர். நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டை அபிவிருத்தி செய்த தலைவராவார். இவரே இந்த நாட்டை புதிய யுகத்திற்கு கொண்டுவந்தவர். இவ்வாறான தலைவரின் பாதுகாப்பை இல்லாமல் செய்வதற்கு எந்த உரிமையும் உங்களுக்கு கிடையாது. நீங்கள் மகிந்த ராஜபக்‌ஷ மீது குரோதத்துடன் செயற்படுவீர்களாக இருந்தால் பயங்கரவாதத்திற்கு உதவுபவராக இருந்தாலே அதனை செய்ய முடியும். விடுதலைப் புலிகள் மகிந்த ராஜபக்‌ஷ மீது குரோதத்தை கொண்டிருந்தனர். இந்நிலையில் நீங்கள் பயங்காரவாத தலைவர் இல்லையென்றால் மகிந்த ராஜபக்‌ஷ மீது குரோதத்தை கொண்டிருக்க முடியாது.

நீங்கள் அரசியல் லாபத்திற்காகவோ அல்லது வேறு காரணத்திற்காவே இந்த நாட்டை மீட்டெடுத்த தலைவரின் பாதுகாப்பை நீக்கவும் அவரை பயங்கவாதிகளின் இரையாகவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இது யாரின் தேவைக்காக நடத்தப்படுகின்றது என்று தெரியவில்லை. உங்களிடம் 3 வீத வாக்குகளே உள்ளன. இந்த நாட்டை நேசிக்கும் மக்களே மிகுதி 45 வீத வாக்குகளை வழங்கியுள்ளனர். அவர்கள் ஒருபோதும் மகிந்த ராஜபக்‌ஷவே இந்த நாட்டை மீட்டவர் என்பதனை ஏற்றுக்கொள்வர். இவ்வாறான ஒருவரின் பாதுகாப்பை நீக்கி அவரை வீதிக்கு தள்ளி பயங்கரவாதிகளின் இரையாக மகிந்த ராஜபக்‌ஷவை சிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த விடயத்தை வேறு விடயமாகவே பார்க்கின்றோம். நாட்டுக்கு முக்கியமானவரை பாதுகாக்க வேண்டியது கடமையாகும். உலகக் கோப்பையை வென்ற கிரிக்கெட் அணியினருக்கு கொழும்பில் காணிகள் வழங்கப்பட்டன. அதேபோன்று ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளிலும் சாதனை புரிந்தவர்களுக்கு கொழும்பில் காணிகள் வழங்கப்பட்டதுடன், யுத்தத்தில் பங்களித்த இராணுவ வீரர்களுக்கும் கொழும்பில் காணிகள் வழங்கி வைக்கப்பட்டன. அவை அரச செலவிலேயே வழங்கப்பட்டன. ஆனால் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு அவ்வாறு வழங்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கு அமைச்சர்களுக்கென்ற வீடுகளில் ஒன்றில் உத்தியோகபூர்வமாக வசிக்க முடியும். இந்நிலையில் அவரை அந்த வீட்டை விட்டு வெளியேற்ற எடுக்க முயற்சிப்பது அரசியல் பழிவாங்கலாகவே இருக்கும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button