தமிழக கடற்றொழில் அமைச்சரை வடக்கிற்கு வருமாறு 50000 குடும்பங்கள் சார்பாக அழைப்பு

தமிழ்நாட்டு மக்களுடன் ஒன்றுபட்டு வாழ விட்டுக் கொடுப்புகளை செய்வோம். ஆனாலும் சட்டவிரோத இழுவைமடி தொழிலுக்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஆனால் அண்ணன் ,தம்பி உறவு என்று சொல்லிக்கொண்டு எமது வாழ்வாதாரத்தை அழிப்பதை அனுமதிக்க முடியாது என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அ. அன்னராசா தெரிவித்தார்.
பருத்தித்துறையில் உள்ள யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை.இந்திய மீனவர் பிரச்சினையில் தமிழ்நாட்டு அரசாங்கம் கூடுதல் அக்கறை எடுக்க வேண்டும். அண்மையில் இடம்பெற்ற அயலவர் தின நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடற் றொழில் அமைச்சர் இது தொடர்பில் கலந்துரையாடியதாக ஊடகங்கள் மூலமாக அறிந்து கொண்டோம் இதற்கு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வடக்கு மாகாண கடற் தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் தமிழ்நாட்டு அமைச்சருடன் பேச வேண்டும் எனவும் மீனவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்றும் நேரம் கேட்டிருப்பதாக அறிந்துள்ளோம்.
தமிழ்நாட்டு மீனவர்களினால் வடக்கு மீனவர்கள் நாளாந்தம் பாதிக்கப்படுகின்றார்கள். இது சம்பந்தமாக காலம் தாழ்த்தாது மிக விரைவில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோருடன்டன் கலந்துரையாடி அடுத்த கட்டம் கொண்டு செல்ல பாராளுமன்ற உறுப்பினர் கவனம் செலுத்த வேண்டும். எமது கடற்றொழில் அமைச்சரும் அடுத்தகட்ட மீனவர் பிரச்சினை தொடர்பில் அரசமட்ட பேச்சுவார்த்தை நடத்தி குறிப்பிட்ட கால அவகாசத்தில் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு சமூகமாக தீர்வு காண விரைந்து செயல்பட வேண்டும்.
அதே போன்று தமிழ்நாட்டு கடற்றொழில்அமைச்சர் அனுராதா இராதாகிருஷ்ணனும் தமிழ்நாட்டு மீனவர்களோடு இணைந்து வடமாகாண மீனவர்கள் படும் துயரத்துக்கு சமூகமான தீர்வை காண வடக்குக்கு வர வேண்டும் . எமது மக்கள் படும் துன்பதுயரத்தை பார்த்து கரிசனை கொள்ள வேண்டும். எனவே வடக்குக்கு வருமாறு உங்களை இரண்டு இலட்சம் மக்கள் சார்பாகவும் 50,000 குடும்பம் சார்பாகவும் அழைக்கின்றோம். எமது அழைப்பையேற்று வந்து இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு தயவாகக் கொள்கின்றோம் என்றார்
![]()