யாழ்.குருநகரில் மினி சூறாவளி; தேவாலயம், 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.45 மணியளவில் மழையுடனான காலநிலையால் வீசிய திடீர் மினி சூறாவளி காரணமாக கிறிஸ்தவ தேவாலயமொன்றும், முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்துள்ளன.
மினி சூறாவளியால் கொலை விலக்கி மாதா ஆலயத்தின் திருப்பண்ட அறைகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. சில படகுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதனால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்புக்கள் குறித்து அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் விபரங்களைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோர் நிலைமைகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் மீளக் குடியேறும் நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படுமெனவும், தேவையான உதவிகள் பூரணமாக வழங்கப்படுமெனவும் இதன்போது உறுதியளித்தனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக 10 ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்கப்படுவதுடன் முழுமையான சேத விபரங்கள் கணக்கிடப்பட்ட பின்னர் முழுமையான நஷ்டஈடு வழங்கப்படுமெனவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
![]()