தமிழரசுக் கட்சி மத்திய குழுவிலிருந்து இதுவரை கடிதங்கள் கிடைக்கவில்லை
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் இருந்து சிலர் நீக்கப்பட்டதாகவும் சிலரிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை கட்சியிலிருந்து எவ்வித கடிதங்களும் கிடைக்கப்பெறவில்லை என அவ்வாறான தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 18 ஆம் திகதி திருகோணமலையில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இடம் பெறவுள்ளது.மத்தியகுழுவில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுவதற்கு முன்பாக கோரப்படும் விளக்கக் கடிதங்கள் இதுவரை அனுப்பப்படவோ சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிதம் கிடைக்கவோ இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் வேறு கட்சிகள், சுயேச்சைக்குழுக்கள் ஊடாக போட்டியிட்டவர்கள் மற்றும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறப்படும் பலரும் இம்முறை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த கடிதங்கள் கட்சியின் செயலாளரினால் இதுவரை அனுப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கத்தை தொடர்புகொண்டு கேட்டபோது,
மாவட்ட கிளைகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட சிலருக்கும் கடிதம் அனுப்பி வைத்துள்ளோம்.
அத்துடன் மாவட்ட கிளைகள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியவர்கள் தொடர்பான விபரங்களை அனுப்பிய பின்னரே நாம் கட்சியினூடக உத்தியோகபூர்வ கடிதங்களை அனுப்புவோம். அதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன . அத்துடன் மாவட்ட கிளைகளில் இருந்து தரப்பட்ட விபரத்தின் அடிப்படையில் சிலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
![]()