இனப் பிரச்சினை உள்ளிட்ட இலங்கை விவகாரம்; தமிழக முதல்வரிடம் சிலவற்றை கூறினோம்

இனப் பிரச்சினை தீர்வு உள்ளிட்ட இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சில விடயங்களை தாம் முன்வைத்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம் பெயர்ந்தோர் தினத்தின் இறுதித் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கண்காட்சிக்கு வருகை தந்திருந்த போதே தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளனர்.

இதன்போது தமிழக முதலமைச்சருடன் சிறிது நேரம் கலந்துரையாட தமக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் இவ்வேளையில் இலங்கை தமிழர்கள் தொடர்பாக சிலவிடயங்களை முதல்வரிடம் கூறியதாக சுமந்திரன் தினக்குரலுக்கு தெரிவித்தார்.

இதேவேளை தற்போது இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சியில் இருப்பதால் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் தாம் அவதானித்து வருவதாகவும், எவ்வாறாயினும் தமது நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதையும் தமிழக முதலமைச்சரிடம் குறிப்பிட்டதாகவும் சுமந்திரன் கூறினார்.

அத்துடன் இலங்கை விவகாரம் தொடர்பில் இன்னுமொரு நாளில் சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்வதாக தமிழக முதலமைச்சர் தரப்பில் தமக்கு கூறப்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை தமிழகத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள சென்றுள்ள தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தினக்குரலுக்கு கூறுகையில், நெருக்கடியான நிகழ்ச்சி நிரலால் இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழக முதலமைச்சருடன் சந்திப்புக்கு நேற்றைய தினத்தில் நேரம் கிடைக்கவில்லை என்றும், இன்னுமொரு நாளில் அதற்கான நேரம் ஒதுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *