கவிதைகள்
ஆறுதல் சொல்லும் நண்பர்கள்… கவிதை… முல்லைஅமுதன்

ஒவ்வொரு ஆண்டும்
அருகில் வந்து ஆறுதல்
சொல்லும் நண்பர்கள்
ஒவ்வொரு ஆண்டின் இதே நாட்களில்
விலகிச் சென்றிருக்கிறார்கள்.
புத்தாண்டில் எல்லாம் சரியாக நிகழும் என்றவர்கள்
மௌனமாகிப்போனார்கள்.
தந்தையை,தாயை…
ஒவ்வொன்றாய் உறவுகளை…
முதல் வருடம் நண்பர்களில் ஒருவன்
காணாமல் போனான்.
இன்னொருவன்
வெடித்துச் சிதறினான்.
எதிரியுடன் மோதுகிறேன்
என்றவன் பிடிபட்டுப்போனான்.
ஐரோப்பிய நாடொன்றில்
அகதியாய்
எல்லை கடக்கும் போது
இறந்துபோனான்…
ஒட்டுமொத்தமாய் இறந்துவிடும் நிலை வந்தபோது
தன்னை இழந்து எங்களைக்
காப்பாற்றியதும் இதே நாளில் தான்..
எஞ்சி நிற்கும்
நண்பனே இந்த நாளில்
எதிர்காலம் குறித்த நம்பிக்கையை தந்துவிடாதே..
எங்கும் இருளாய்த் தானே தெரிகிறது..
முல்லைஅமுதன்
31/12/2024
![]()