27 ஆம் திகதி வரை சீன குடியரசின் ‘மிதக்கும் மருத்துவமனை’ கொழும்பில்
சீன மக்கள் குடியரசின் இராணுவ கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான ‘பீஸ் ஆர்க்’ இலங்கைக்கு சம்பிரதாயபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்த ‘பீஸ் ஆர்க்’ கப்பல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நிற்கும் அதேவேளை, இலங்கை மக்களுக்கு மருத்துவ சேவையும் வழங்கப்பட்டு வருகிறது.
மிதக்கும் மருத்துவமனையாக விளங்கும் ‘பீஸ் ஆர்க்’ கப்பலில் தங்கியிருக்கும் வைத்தியர்கள் கடந்த 22 ஆம் திகதி முதல் இலங்கையில் உள்ள சீன தூதரகத்துடன் இணைந்து மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கிளினிக்குகளை கப்பலுக்குள் நடத்திவருவதுடன், இச்சேவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது.
178 மீ. நீளமுள்ள ‘பீஸ் ஆர்க்’ மருத்துவமனைக் கப்பலில், கப்டன் டெங் கியாங்கின் தலைமையில் 310 பணியாளர்கள் கடமையில் இருக்கிறார்கள். பீஸ் ஆர்க் கப்பல் இலங்கைக்கு விஜயம் செய்வது இது இரண்டாவது தடவையாகும். இதற்கு முன்னர் 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
‘பீஸ் ஆர்க்’ மருத்துவமனைக் கப்பல் தன்னுடைய உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பிலிருந்து புறப்படவிருக்கிறது.
இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த கப்பலை நேரடியாக பார்வையிடுவதற்காக பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கீ ஷென்கொங் ஆகியோர் விஜயம் செய்திருந்தனர்.
![]()