வன்முறைகளுக்காக சூழ்ச்சித் திட்டங்கள்; சந்தேகம் எழுப்பும் அநுர
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நிலையில் வன்முறைகளை உருவாக்கும் வகையில் சூழ்ச்சிகளேதும் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகங்கள் தமக்கு எழுந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் அரசியல் நிகழ்ச்சியொன்றிலேயே அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஆட்சியை பெற்றுக்கொள்வதே இந்தத் தேர்தலில் எங்களின் இலக்காக இருக்கின்றது. வெற்றிப்பெற முடியுமாக இருக்கும். அரசாங்கம் மற்றும் சஜித் தரப்பில் இருந்து எங்கள் மீது விமர்சனங்கள் மற்றும் செயற்படுத்தக் கூடிய சூழ்ச்சிகள் தொடர்பில் மக்களுக்கு கூற வேண்டியுள்ளது.
தேர்தல் செயற்பாடுகள் இவ்வாறு இருந்தாலும் எதிர்பார்க்க முடியாத சம்பவங்கள் நடக்கலாம். ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியொருவர் இரு சந்தர்ப்பங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் ஜயவர்தனபுல பல்கலைக்கழகத்தில் சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் சூழ்ச்சிகரமாக வன்முறைகளை உருவாக்கும் எண்ணங்கள் அவர்களிடையே இருக்கலாம். இதனால் இது தொடர்பில் வெளிப்படுத்தவும், அவ்வாறான சம்பவங்களில் எந்த வகையிலும் எமது உறுப்பினர்கள் தொடர்புபடாது இருப்பதற்கும் அதேபோன்று மோதல் ஏற்படுமாக இருந்தால் பொலிஸார் மற்றும் முப்படைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய அவ்வாறான சம்பவங்கள் ஏற்படாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
![]()