தடுமாறுகின்றதா தமிழரசு கட்சி?; பொது வேட்பாளருக்கு ஆதரவாக மேடையேறிய மாவை

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

எனினும், இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, மாவை சேனாதிராஜா கிளிநொச்சியில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவை தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

தேர்தல் விஞ்ஞாபனங்களை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழரசு கட்சியின் ஆறு பேர் கொண்ட குழு நேற்று வவுனியாவில் கூடியது.

மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம், சிரேஷ்ட பிரதித் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மட்டக்களப்பு முன்னாள் மேயர் தியாகராஜா சரவணபவன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாவை சேனாதிராஜா பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் கட்சியின் மத்திய குழு தீர்மானத்தை வலியுறுத்தி, 21ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் அவருக்கு ஆதரவளிக்குமாறு வாக்காளர்களை வலியுறுத்தினார்.

சமூகம் எதிர்நோக்கும் அழுத்தமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வாக்காளர்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இருந்த போதிலும், மாவை சேனாதிராஜா கிளிநொச்சி கூட்டத்தில் கலந்துகொண்டார். இதன்போது தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

“நாங்கள் இலங்கையில் பல ஆண்டுகளாக இந்த விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். எங்களது எண்ணங்களும் தீர்மானங்களும் அர்ப்பணிப்புகளும் விடுதலைக்காகவே அமைந்திருக்கின்றன.

அரசியல் சூழலில் இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலும் எமது இனத்தின் விடுதலையை நாங்கள் மறந்து விட மாட்டோம். எங்களது உயிரை அர்ப்பணிப்பதற்கு எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கின்றோம்.” என்றார்.

எவ்வாறாயினும் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு எதிராக நாங்கள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

மேலும், அவரிடத்தில் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது. எங்கள் கூட்டங்களுக்கு அவர் வருவதற்கு நாங்கள் தடை விதித்திருக்கின்றோம்.

அவருடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடும் எங்கள் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றோம்.” எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button