’கிழக்கில் தமிழர்கள் அழிந்து போகும் ஆபத்து’

கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தமிழ் மக்கள் 15 ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாது அழிந்து போகக் கூடிய ஆபத்து இருக்கிறது ஆகவே இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால் தமிழர் தேசம் ஒன்று அங்கீகரிக்கப்பட்ட தீர்வு எட்டப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார்.

தமிழர்களுடைய தலை நகரமான திருகோணமலை இன்று தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் முழுவதும் கபளீகரம் செய்யப்பட்டு, 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 32 விகாரைகள் அமைக்கப்பட்டு மிகப் பெரிய பௌத்த மயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞாயிற்றுக்கிழமை (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகவும் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராகவும் அனுரா குமார திசாநாயக்க வலிமையான ஒரு எதிரணியின் உடைய கட்சி தலைவராகவும் பாராளுமன்றத்தில் இருந்து கொண்டிருக்கும் போது தான் இந்த பௌத்தமயமாக்கல் இடம்பெற்றுக் கொண்டி ருக்கின்றது.

அதேபோல் மட்டக்களப்பு எல்லைப் பகுதியான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையில் 3 லட்சம் மாடுகள் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டு 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பேரினவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு அபகரிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது இவை எல்லாம் நடைபெறுகிறது சஜித்தோ, அனுரவோ, ரணிலோ இதனை தடுப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

இன்று அம்பாறை மாவட்டம் முற்றாக பறிபோய்விட்டது அதேபோல் திருகோணமலை மாவட்டமும் கிட்டத்தட்ட மிகப் பெயரளவில் பறிபோய்விட்டது. மட்டக்களப்பு மாவட்டம் பறிபோக தொடங்கிவிட்டது இந்த நிலையில் கிழக்குடன் வடக்கு இணைந்தால் மாத்திரம் தான் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் வடக்கிலுள்ள தமிழ் மக்களுடன் இணையும்போது தங்களுடைய இருப்பை உறுதி செய்யக் கூடியதாக இருக்கும் என்றார்.

இந்த இணைவு நடை பெறவில்லை என்றால் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தமிழ் மக்கள் 15 ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாது அழிந்து போகக் கூடிய ஆபத்து இருக்கிறது.
ஆகவே, இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமாக இருந்தால் இந்த இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தமிழர் தேசம் ஒன்று அங்கீகரிக்கப்பட்ட தீர்வு எட்டப்பட வேண்டும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button