கவிதைகள்

மனதை நீட்டுபவர்கள்… கவிதை… முருகானந்தம்

தெரிந்தோ தெரியாமலோ
நாம் கொஞ்சம் சில பேரிடம்
இறுகப்பற்றிக் கொள்கிறோம்
தெரிந்தோ தெரியாமலோ
வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்…

ஆனால்
அவர்கள்தான்
அவ்வளவு பிடித்தமானவர்களென்பது
அவ்வளவு தெரியும்…..

இறுகப்பற்றிக்கொள்ள
அவர்கள் அவ்வளவு மெனக்கெட்டு
கரங்களை நீட்டுவதில்லை
கண்களை நீட்டுகிறார்கள்
தோள்களை நீட்டுகிறார்கள்…

இன்னும்
சில எதிர்பார்க்காத தருணங்களில்
மனசை நீட்டுகிறார்கள்
கேள்விகள் இல்லாத இருளில் கூட
அவ்வளவு நட்சத்திர
பதில்களை ஒளிர விடுகிறார்கள்
இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால்
அச்சு அசலாய்
அவர்களும் மனிதர்கள் போலவே
இருக்கிறார் …..

புன்னகைக்கச் சொல்லி
வேடிக்கை பார்க்கிறார்கள்
பதிலுக்கு பதிலாகி
காதுகள் வரை
அவர்களே
சிரித்தும் கொள்கிறார்கள்….

ஒருமுறை கலைத்து விட்டு-
மறுபடியும் தலை கோதி விடுகிறார்கள்
ஒன்று மட்டும் அழகாய் படுகிறது
ஜெயிப்பதற்காக கூட இருப்பது வேறு
வாழ்வதற்காக கூட இருப்பது வேறு …….

முருகானந்தம்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *