அதிரும் தமிழ்
துடிப்பான இசை வடிவம் என்பதால் ராப் (Rap ) இசையை துடியிசை என்று சொல்லலாம் . ராக் , ஜாஸ் இசை வடிவங்களில் உள்ள மெலடி ,ஹார்மணி போன்ற அழகியல் கூறுகளை சார்ந்து நிற்காத பரப்பிசை வடிவம் .தாளமும் துடிப்புமே இதன் அழகியல் . இதிலிருந்தே பிறக்கும் விசையே அதன் ஈர்ப்பு.
அமெரிக்காவில் 60 களில் எப்படி ஒரு எதிர்கலாச்சார இயக்கமாக ஹிப்பி இயக்கம் தோன்றியதோ அதே போல 80 /90 களில் கருப்பின மக்களின் எதிர்குரலாக ஹிப் ஹாப் இயக்கம் பிரபலமானது . உலகப்போர்களுக்கும் பின்னான – அமைதி, அன்பு , ‘நாமெல்லாம் அண்ணன் தம்பி’ மனநிலை ஹிப்பி இயக்கத்தின் அடித்தளம் என்றால் . கருப்பின மக்களின் எதிர்குரலாக , எழுச்சியாக , அவர்களின் அடையாளத்தின் வெளிப்பாடாக ஹிப் ஹாப் கலாச்சாரம் அமைந்தது .
ஹிப் ஹாப் கலாச்சாரத்தின் ஒரு பகுதி தான் துடியிசை.
அதன் நடன வடிவம் பிரேக் டான்ஸ் அல்லது ‘பிரேக்கிங்’ . ஒலிம்பிக்ஸில் ஒரு ‘ஆஸி அக்கா’ நானும் ஆடுவேன் என்று ஆடி வைரல் ஆனது நினைவிருக்கிறதா ,அந்த ஆட்டம்தான . துடியிசை அடிப்படையில் ஆப்பிரிக்க கதை சொல்லலின் வடிவம் .அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட கருப்பின மக்கள் அதையே அமெரிக்க சூழலில் தங்கள் எழுச்சி மற்றும் எதிர்ப்பின் கலையாக மாற்றிக்கொண்டார்கள்.
ஆவேசம் , எதிர்ப்பு , எசப்பாட்டு , வசை என்று மிகச்சரளமாக வந்து விழும் வார்த்தைகள் உருவாக்கும் வேகமும் அவை உருவாக்கும் உணர்வுகளும் காட்டாற்றின் விசை கொண்டவை . பெருவெள்ளம் போன்ற இந்த மொழிபு தான் தங்களுக்கான சுதந்திரம் வெளியை உருவாக்கிக்கொள்கிறார்கள் . இந்த இசை வடிவம் இளைஞர்களிடையே பிரபலமான காரணமும் இதுதான் .
தமிழில் இந்த வடிவம் முயலப்பட்டபோது , வேகமாக பாடுவது என்ற விஷயம் கவனிக்கப்பட்டது.ஆனால் சொற்கட்டு , சரளம் , விசை போன்ற விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தப்படவில்லை . அதே போல தாராளமான ஆங்கிலக்கலப்பும் தவிர்க்க முடியவில்லை.
மலையாளத்தில் பாடிவரும் ‘வேடன்’ என்ற ராப்பரை குறித்து முன்பு எழுதியிருக்கிறேன் . எமிநெம்மின் சாயல் கொண்டவர் . மலையாளம் தமிழைக் காட்டிலும் ‘கொழகொழா’ மொழி ஆனால் அதில் கூட துடியிசை வடிவத்தை வெற்றிகரமாக கையாண்டிருந்தார்கள் .தமிழில் எப்போ இப்படி வருமோ என்று எழுதியிருந்தேன் .
இப்போது வந்திருக்கிறது .இலங்கைத்தமிழர் ஒருவர் முழுதும் தமிழ் வரிகளை மட்டும் கொண்டு நல்ல துடியிசை வடிவத்தை தமிழில் உருவாக்கியிருக்கிறார். பெயர் . வாஹீசன் ராசய்யா (vaaheesan rasaiya ) , யாழ்பாணத்துக்காரர் . நண்பர் சத்யா மருதாணி அவர்கள் இந்த ராப் பாடலை பகிர்ந்திருந்தார் . அதே போல ‘சென்னை டே’ நிகழ்வில் இவர் பாடிய காணொளி பார்த்தேன்.
தமிழ் இவர் நாவில் வந்து விழும் சரளம் அபாரமானது . முக்கியமாக வசைகள் ஏதும் இல்லாமலே பாடலில் விசையை கொண்டு வந்திருக்கிறார் . Powerful Delivery .ராப் பாடலிலும் கம்பனையும் வள்ளுவனையும் கொண்டு வரமுடியும் என்பதை உறுதி செய்திருக்கிறார்.
ஒரு மொழி உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்றால் அது சமகாலத்தில் உள்ள எல்லா வெகுமக்கள் கலை வடிவங்களிலும் இடம் பெற்றிருக்க வேண்டும் .துடியிசை வடிவத்தில் தமிழ் இப்போது அந்த இடத்தில் அழகாக நுழைந்திருக்கிறது.
இளைய தலைமுறைக்கு தமிழை எப்படி கொண்டு செல்வது என்று பலர் விசனப்படுவதை பார்த்திருக்கிறேன் . எளிமையான வழி ஒன்றை வாஹீசன் திறந்து விட்டிருக்கிறார் .
![]()