வடக்கில் முக்கிய துறைமுகத்தை கையகப்படுத்த இந்தியா முயற்சி?

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்காக 62 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் குறித்த துறைமுகத்தை 30 வருடங்களுக்கு செயற்படுத்த இந்திய முயற்சித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில், காங்கேசன்துறை துறைமுகத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இந்திய அரசாங்கம் கடன் வழங்க எண்ணியது.

எனினும், தற்போதைய பொருளாதார நிலை காரணமாக இலங்கையில் திட்டங்களை முன்னெடுப்பதில் இந்தியா தனது கவனத்தை மாற்றியுள்ளது.

எவ்வாறாயினும், இந்தியாவின் மானிய உதவியின் கீழ் குறித்த துறைமுக அபிவிருத்திக்கான முன்மொழிவுக்கு இலங்கை அண்மையில் அனுமதி வழங்கியது.

ஆரம்பகால முன்மொழிவுகளின்படி ஒரு இந்திய கட்டமைப்பாளர் ஒருவர் குறித்த திட்டத்தை நிறைவேற்றுவார் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.டி. எஸ். ருவன்சந்திரா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர், இந்தியா 30 ஆண்டுகளுக்கு அதன் வணிகச் செயற்பாடுகளை முன்னெடுக்க முயன்றதாக குறிப்பிட்டுள்ளார்.

“எவ்வாறாயினும், குறித்த விடயம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காங்கேசன்துறை துறைமுகம், சுமார் 16 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 56 கடல் மைல் தொலைவில் இந்த துறைமுகம் அமைந்துள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபையின் கூற்றுப்படி, வளமான மற்றும் நீண்ட வரலாற்றைக் கொண்ட காங்கேசன்துறை துறைமுகம், 1950ஆம் ஆண்டு காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலை நிறுவப்பட்டதுடன் வர்த்தக துறைமுகமாக தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது.

இலங்கையில் மூலோபாய முதலீடுகளுக்காக இந்தியாவும் சீனாவும் போட்டியிடுகின்றன, சீனா ஏற்கனவே 99 வருட குத்தகைக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button