இலங்கை

பல ஏக்கரில் மனிதப் புதைகுழிகள்; மூடப்பட்ட கிணறுகளிலும் எலும்புக் கூடுகள்!;  பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டும் இன்றுவரை சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்படவில்லை

அரியாலை சித்துப்பாத்தி மயானத்தினுடைய நான்கு சுவர்களுக்குள்தான் செம்மணி அகழ்வுப் பணி நடக்கிறது. அந்தச் சுவர்கள் கட்டப்பட்டது மிக அண்மையில. ஆகவே குற்றம் நடந்த காலப்பகுதியில் அந்தச் சுவர் இருக்கவில்லை. சுவருக்கு வெளியிலும் பல ஏக்கர்களுக்குப் புதைகுழிகள் இருக்கின்றது. அந்தப் புதைகுழிகள் உங்களுடைய பகுதியிலே இருக்கின்ற மூடப்பட்ட கிணறுகள் வரை நீளுகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார்.

அருட்பணி ஜிம்பிறவுண் அடிகளார் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்த நினைவு நாள் அல்லைப்பிட்டியில் அனுஷ்டிக்கப்பட்டபோதே சுகாஷ் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த பிரதேசத்திலே பல கிணறுகள் மூடப்பட்டிருப்பது பலருக்கும் தெரியும். அந்த கிணறுகளுக்குள்ளே எங்களுடைய பல உறவுகள் சத்தமில்லாமல் சட்ட விரோதமாக உறங்கிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும். அந்த கிணறுகள் தோண்டப்படாமல் இருப்பதும் உங்களுக்குத் தெரியும். அவை தோண்டப்பட வேண்டும்.

ஜிம் பிரவுண் அடிகளார் ஒரு இனத்தின் குறியீடு மாத்திரமல்ல, மதத்தின் குறியீடு மாத்திரமல்ல, அவர் நீதியின் குறியீடு. காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான ஒரு குறியீடாக இருக்கிறார்.

வெறும் 8,000 பேர் படுகொலை செய்யப்பட்ட செப்ரெனிக்கா படுகொலை, ஐ.நா.வினுடைய சர்வதேச விசாரணை மூலம் விசாரிக்கப்பட்டு இனப்படுகொலை என்று தீர்ப்பு வந்துவிட்டது. மியான்மாரிலே 47,000 ரோஹிங்கிய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட படுகொலையும் சர்வதேச விசாரணை மூலம் விசாரிக்கப்பட்டு இனப்படுகொலை என்று தீர்க்கப்பட்டுவிட்டது.

ஆனால் எங்களுடைய மண்ணிலே யுத்தத்தினுடைய இறுதிக்கட்டத்தில் மாத்திரம் 1,47,000-க்கும் அதிகமானவர்கள் காணாமலாக்கப்பட்டார்கள் அல்லது முள்ளிவாய்க்காலிலே கொன்றொழிக்கப்பட்டார்கள். 1956-களிலிருந்து இன்றுவரை பல லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இன்றுவரை சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்படவில்லை.

நாங்கள் சிந்திக்க வேண்டிய இடத்திலே இருக்கிறோம். 8,000 பேர் படுகொலை செய்யப்பட்ட செப்ரெனிக்கா படுகொலை இனப்படுகொலை என்றால், 47,000 ரோஹிங்கிய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட ரோஹிங்கிய படுகொலை இனப்படுகொலை என்றால், யுத்தத்தினுடைய இறுதிக்கட்டத்தில் மாத்திரம்—கடைசி நாட்களில் மாத்திரம்—1,47,600-க்கும் அதிகமான தமிழர்கள் காணாமலாக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டும் உள்ள முள்ளிவாய்க்கால் படுகொலை, ஈழப் படுகொலை ஏன் இனப்படுகொலை ஆகாது?

அப்படியென்றால் எங்கோ தவறு நடக்கிறது. அதை ஜிம் பிரவுண் அடிகளாருடைய இந்த 20-வது ஆண்டு காணாமலாக்கப்பட்ட நாளிலே நாங்கள் தீர்க்கமாக சிந்திக்க வேண்டும். எங்கோ தவறு நடந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்குக் கூட செம்மணியிலே, சித்துப்பாத்தி மயானத்திலே அகழ்வுகள் நடந்து 581 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு விடயத்தை நாங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். அந்த சித்துப்பாத்தி மயானத்தினுடைய நான்கு சுவர்களுக்குள்தான் அகழ்வுப் பணி நடக்கிறது. அந்தச் சுவர்கள் கட்டப்பட்டது மிக அண்மையில் தான்.

ஆகவே குற்றம் நடந்த காலப்பகுதியில் அந்தச் சுவர் இருக்கவில்லை. சுவருக்கு வெளியிலும் பல ஏக்கர்களுக்குப் புதைகுழிகள் இருக்கின்றன. அந்தப் புதைகுழிகள் உங்களுடைய பகுதியிலே இருக்கின்ற மூடப்பட்ட கிணறுகள் வரை நீளுகிறது. புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற விகாரைகளுக்குள் கூட புதைகுழிகள் இருக்கிறதே! புதிதாக முளைக்கின்ற இராணுவ முகாம்களுக்குக் கீழேயும் புதைகுழிகள் இருக்கிறது!

இவற்றை நாங்கள் பார்த்துக்கொண்டு மௌனமாக இருந்துவிடக் கூடாது என்பதை மரியாதைக்குரிய ஜிம் பிரவுண் அடிகளாருடைய இந்த 20-வது ஆண்டு காணாமலாக்கப்பட்ட தினத்திலே ஒரு செய்தியாகச் சொல்லி,இயேசு கிறிஸ்துவினுடைய அந்த போதனைகளை தன்னுடைய வாழ்நாளில் செயலிலே காட்டிய அந்த மாமனிதர் ஜிம் பிரவுண் அடிகளாருக்கு நாங்கள் செய்யக்கூடிய உண்மையான நன்றிக்கடன், அவர் நடந்த பாதையில் நடந்து இனத்திற்கான, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான, சர்வதேச விசாரணைக்கான நீதி கோருகின்ற அந்த கேள்வியை உரத்துக் கேட்போம் – என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button