பழமையான பொருட்களை மீட்டெடுத்தல் – இந்தியா – அமெரிக்கா இடையேயான கலாச்சார சொத்து ஒப்பந்தம் கைத்சாத்து!

பழமையான பொருட்களை மீட்டெடுப்பது தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையேயான கலாச்சார சொத்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும், 46 ஆவது யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழு கூட்டத்திலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து பழமையான பொருட்கள், கலைச் சிற்பங்கள், கலைப் பொக்கிஷங்களை அமெரிக்காவுக்குக் கடத்திச் செல்வதைத் தடுக்க இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசின் கலாச்சாரத்துறை செயலர் கோவிந்த் மோகன், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

கலாச்சாரப் பொருட்கள், பொக்கிஷங்கள், சொத்துகளை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு சட்டவிரோதமாக கடத்துவது நீண்ட நாட்களாக உள்ளக பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கைச்சாத்திடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் இதுபோன்ற கலைப் பொக்கிஷங்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவது தடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திரத்துக்கு முன்னதாகவும், அதற்குப் பின்பும் இந்தியாவிலிருந்து பல்வேறு விலைமதிக்க முடியாத பழங்காலப் பொருட்கள்,கலைச் சிற்பங்கள் வெளிநாடுகளுக்குக் கடத்திச் செல்லப்பட்டன.

இந்த அரிய பொக்கிஷங்கள் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளின் அருங்காட்சியங்கள், நிறுவனங்கள், தனிநபர்களின் பாதுகாப்பில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

1970 இல் நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டிலிருந்து பழங்கால பொருட்கள், பொக்கிஷங்களை கடத்திச் செல்வது தடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பொக்கிஷங்களில் 358 கலைப்பொருட்கள் திரும்ப இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதில் 345 கலைப்பொருட்கள் 2014 க்குப் பின்னர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவிலிருந்து மீட்டு இந்தியாவுக்கு எடுத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button