அமெரிக்க அதிபர் தேர்தல்; டிரம்ப்பை முந்தும் கமலா

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தார்.

வயது முதிர்வு, பேச்சில் தடுமாற்றம், மந்தமான செயல்பாடு போன்ற காரணங்களால் ஜோ பைடன் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் இருந்து பைடன் விலக வேண்டுமென அவரது சொந்த கட்சியினரே வலியுறுத்தினர்.நெருக்கடி அதிகமானதால் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக கடந்த 21-ந் தேதி ஜோ பைடன் அறிவித்தார்.

மேலும் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை அவர் முன்மொழிந்தார்.அப்போது முதலே ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் கமலா ஹாரிசின் கை ஓங்கியது. இருப்பினும் 2 முறை ஜனாதிபதியாக இருந்த ஒபாமா, கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் “கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதியாக வருவார்” எனக் கூறி ஒபாமாவும் தனது ஆதரவை தெரிவித்துவிட்டார்.இதை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் ஆவணங்களில் கமலா ஹாரிஸ் நேற்று கையெழுத்திட்டார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான எனது வேட்புமனுவை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் படிவத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளேன். ஒவ்வொரு வாக்குகளையும் பெற கடுமையாக உழைப்பேன்.

நவம்பரில் நடைபெறவிருக்கும் தேர்தலில், எங்கள் மக்கள் இயக்க பிரசாரம் வெற்றி பெறும்\” எனத் தெரிவித்துள்ளார்.குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜனநாயக கட்சியில் கமலா ஹாரிசுக்கு பெரிய அளவில் எதிர்ப்புகள் இல்லாததால் விரைவில் அவரும் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் டிரம்பை விட கமலா ஹாரிசுக்கு ஆதரவு சற்று அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பில், கமலா ஹாரிசுக்கு 44 சதவீதம் பேரும் டிரம்புக்கு 42 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனா். அதாவது, டிரம்பை விட கமலா ஹாரிஸ் கூடுதலாக 2 சதவீத ஆதரவை பெற்றுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button