கறுப்பு நிறம் அழகில்லையா?: வெண்மையாக்கி க்ரீம்களால் அதிகரிக்கும் சிறுநீரக பாதிப்பு

கறுப்பாக இருப்பவர்களின் சருமத்திற்கு ஒரு தனி வசீகரம் இருக்கும். வெள்ளை நிறம் தான் அழகு. கறுப்பு நிறம் அழகில்லை என ஏதோ அது ஒரு பெரிய குறை போன்று இந்த க்ரீம் தடவுங்கள் அந்த க்ரீம் தடவுங்கள் என நொடிக்கு நொடி விளம்பரம் போட்டு எல்லோரையும் நம்ப வைக்கின்றார்கள்.
இந்த நிற பிரச்சனை ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. இதனால் தான் பெரும்பாலும் பெண்கள் ஏனையவர்கள் முன்னிலையில் கவர்ச்சியாகவும் அழகாகவும் தெரியவேண்டும் என்பதற்காக பல வகையான வெண்மையாக்கி கிரீம்களை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், சுவரிலிருந்து வண்ணப்பூச்சை நீக்கும் இரசாயனம் போன்று செயல்படும் தோலை வெண்மையாக்கும் கிரீம்களை (களிம்பு) பயன்படுத்துவதில் நுகர்வோர் கவனமாக இருக்க வேண்டுமென்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் சரும வெண்மையாக்கிகள்
சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான க்ரீம்களால் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
நேற்று புதன்கிழமை சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் இந்திரா கஹவிட்ட மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த க்ரீம் பாவனையால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் தோல் சிகிச்சை நிபுணர் வைத்தியர் இந்திரா கஹவிட்ட சுட்டிக்காட்டினார்.
ஒருவரை மதிப்பீடு செய்யும்போது அவரின் குணத்தை வைத்து மதிப்பிடுங்கள். நிறத்தை வைத்து அல்ல. நிறத்தை பற்றி பேசுவதால் கூட சமூகத்தில் இந்த மாற்ம் அதிகரித்திருக்கலாம்.
மேலும் கறுப்பாக இருப்பதால் கவலைப்படாதீர்கள். சமூக ஊடகங்களில் காண்பிக்கப்படும் விளம்பரங்களை நம்பி ஏமாறவேண்டாம். ஒரு பொருளை விற்பனை செய்வதற்காக அவர்கள் மேற்கொள்ளும் யுக்திகள் உங்களை நோயாளியாக மாற்றக்கூடும்.
அப்படி ஒருவரை நீங்கள் நிறத்தை வைத்து மதிப்பீடு செய்தீர்களானால் அது உங்களுடைய அறியாமையையே காட்டுகிறது எனவும் மனிதாபமான அடிப்படையில் பல கருத்துக்களை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
![]()