பசு, பன்றி வளர்ப்புக்கு வரி; டென்மார்க்கில் புதிய சட்டம்
காற்று மாசை குறைக்கும் வகையில் ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் பசு, பன்றி உள்ளிட்ட கால்நடைகளுக்கு கார்பன் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுமுதல் இந்த வரி அமலுக்கு வர உள்ளதுடன், உலகிலேயே முதல் முறையாக இவ்வாறான வரி விதிக்கப்பட்ட உள்ளது.
பருவநிலை மாறுபாடு என்பது உலகளாவிய மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம், காற்று மாசுபடுவதாகும். கார்பன் டை ஆக்சைடு அதிகளவில் உமிழப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, அது, பருவநிலை மாறுபாடு பிரச்சினையாக வளர்கிறது.
கார்பன் டை ஆக்சைடு எனப்படும் கரியமில வாயு தொடர்பாகவே உலகெங்கும் பெரிதாக பேசப்படுகிறது. அதே நேரத்தில், மீத்தேன் உள்ளிட்ட கிரீன் ஹவுஸ் வாயுக்கள் எனப்படும் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் வாயுக்களும் இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளன.
அமெரிக்க தேசிய கடலியல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பின் கணிப்பின்படி, கடந்த, 20 ஆண்டுகளில் மீத்தேன், வெப்பத்தை ஈர்ப்பது, 87 மடங்கு அதிகரித்துள்ளது. அதனால், மீத்தேன் தற்போது முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான டென்மார்க் 1990ல் இருந்த அளவில் இருந்து கிரீன் ஹவுஸ் வாயு வெளியீட்டை 2030க்குள் 70 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக, கால்நடை வளர்ப்பை முக்கியத் தொழிலாக கொண்ட அந்த நாட்டில் பசு, பன்றி உள்ளிட்ட கால்நடைகளுக்கு 2030ம் ஆண்டில் இருந்து கார்பன் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகிலேயே கால்நடைகளுக்கு வரி விதிக்கும் நடைமுறையை முதலில் அறிமுகம் செய்யும் நாடாக டென்மார்க் விளங்க உள்ளது. நியூயார்க்கில், இதுபோன்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆனால், கடந்தாண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்தால் அந்த சட்டம் அங்கு திரும்பப் பெறப்பட்டது.
![]()