35 ஆண்டுகளாகத் தந்தையைத் தேடும் மகளின் ஏக்கம்

பிரிட்டனைச் சேர்ந்த பார்பரா ஓங் ஜேன்செக்கிற்கு வயது 79. தான் இதுவரை தந்தையர் தினத்தைக் கொண்டாடியதே இல்லை என்கிறார் இவர்.
1920களில் பிறந்த இவரது தந்தை ஜான் ஓங் சீன இனத்தவர். தாயார் ஐலீன் ஹிங் யுரேஷிய இனத்தவர். இவர்கள் இருவரும் 1943ஆம் ஆண்டு பிரிட்டனின் லிவர்பூல் நகரில் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணப் பதிவுச் சான்றிதழில் ஜேன்செக்கின் தாத்தா லிங்சாய் ஓங், தேயிலை வர்த்தகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் 1946ஆம் ஆண்டு திரு ஓங் சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக நம்பப்படுகிறது.
உயிருடன் இருந்தால் இப்போது அவருக்கு 104 வயது நிரம்பியிருக்கும்.
பார்பரா ஓங் தற்போது கனடாவில் வசிக்கிறார். கடந்த 35 ஆண்டுகளாக ஜான் ஓங் என்ற பெயருடைய பலரைத் தான் தொடர்புகொண்டதாக இவர் கூறுகிறார்.
தன் தந்தை தரமான ஆங்கிலம் பேசுபவர் என்றும் வயலின், பியானோ வாசிப்பவர், மோட்டார்சைக்கிள் ஓட்டுபவர் என்றும் தாயாரிடம் மிகவும் கனிவாக நடந்துகொண்டவர் என்றும் பார்பரா கூறினார்.
தாயார் தன் தம்பியைக் கருவுற்றிருந்தபோது தந்தை காணாமற்போனதாகக் கூறிய இவர், கசப்பான இறந்த காலத்தைக் கடந்துசெல்வதே சிறந்தது என்று சகோதரர்கள் இருவரும் கூறினாலும் தன்னால் அது இயலவில்லை என்கிறார்.
19 வயதில் கனடா சென்று, தன்னைவிட 18 ஆண்டுகள் மூத்தவரை மணந்துகொண்ட இவர் கணவரிடத்திலும் தந்தையின் அன்பைத் தேடியதாகக் கூறுகிறார்.
இந்த தந்தையர் தினத்தில் தந்தைக்குத் தன் அளவற்ற அன்பையும் அவரது மகளாக இருப்பதற்கு நன்றியையும் தெரிவிக்க விரும்புவதாகக் கூறிய திருமதி ஜேன்செக் (பார்பரா), “அடுத்து ஒரு பிறவி இருந்தால் அப்போதும் என் தந்தை மீது அன்பு செலுத்துவேன்,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
![]()