கன்னியா விவகாரம்; நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பகுதியில், திருகோணமலை மேல் நீதிமன்ற வழக்கு தீர்ப்புக்கு முரணாக,தொல்பொருள் திணைக்களம், நேற்று (22) கட்டுமானப் பணிகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டு, கன்னியா பிள்ளையார் ஆலய ஆதீனகர்த்தா கோகிலரமணியினால், நேற்று (23) திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2019 ஆண்டு மேற்படி விடயம் தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கை (எச்.சீ.ரி./ரைட்/590/2019) அடிப்படையாகக் கொண்டு முறைப்பாட்டாளர் திருமதி.கோகிலரமணியின் சார்பில்,வழக்கறிஞர் பிரசாந்தினி உதயகுமார் குறித்த வழக்கை நகர்த்தல் பத்திரம் மற்றும் சத்தியக்கடதாசி மூலம் திருகோணமலை மேல் நீதிமன்றில் முன்வைத்தார்.
இதனை ஆராய்ந்த நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லா, குறித்த வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டுள்ள தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகிய தரப்பினர்களுக்கு நீதிமன்ற அழைப்பு அறிவித்தலை அனுப்புமாறு நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டதுடன் இந்த வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.
கன்னியா பிள்ளையார் கோவில் தொடர்பில் 2019 இல் அந்த கோவிலின் உரிமையாளரும், ஆதீனகர்த்தாவும் ஆன திருமதி.கோகிலரமணியினால் தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்,
இந்த கோவில் இருந்த இடத்தில் புதிதாக எந்த ஒரு சமய அல்லது வேறு ஏதும் கட்டுமானங்கள் யாராலும் அமைக்கப்படக் கூடாது என்றும், அங்குள்ள புராதன கட்டுமான சிதைவுகள் உள்ளவாறே தொடந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இடைக்கால கட்டளையும், பின்னர் நீதிமன்ற தீர்ப்பும் அப்போதைய மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் வழங்கப்பட்டிருந்தது.
![]()