இலங்கை

செம்மணிப் புதைகுழி எந்தக் காலத்துக்குரியது?; யாழ்.நீதிமன்றத்தில் சி.ஐ.டி.யினர் மனு

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் விசாரணை செய்வதற்கு மனித என்பு கூட்டு தொகுதிகளினுடைய காலத்தை அறிவதற்குப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தனர்.

இந்நிலையில் எவ்வாறான பரிசோதனை செய்வது தொடர்பாக முடிவெடுப்பதற்கு ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு அழைக்கப்படவிருக்கின்றது.

செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், மன்று 3 மணிக்கு இதில் அக்கறையுள்ளவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்திற்கு ஒரு சமர்ப்பணம் செய்யப்பட்டது. இந்த குற்றம் நடந்தது இன்னும் தெளிவாகவில்லை என்றும், நேற்று வரை 455 மனித என்புகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றும், இதனை விசாரணை செய்வதற்குத் தங்களுக்கு இதனுடைய காலத்தை அறிவதற்குப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் ஒரு அறிக்கையை அவர்கள் விண்ணப்பத்தை செய்திருந்தார்கள்.

இதேநேரம் காணாமல் போனோர் சார்பில், காணாமல் போனோர் குடும்பங்கள் சார்பில் நாங்களும், காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் ஆணையரும், மற்றும் யாழ் மாவட்ட நீதிமன்றச் சட்டத்தரணிகளும், நல்லூர் பிரதேச சபைச் சட்டத்தரணியும், பாதிக்கப்பட்டவர் சார்பில் சில சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்கள். அவர்களும் இதில் விண்ணப்பம் செய்திருந்தார்கள்.

இதுவரை எடுத்த புறப்பொருட்களுக்கான அறிக்கையை ராஜ் சோமதேவாவிடம் பெற்றுக்கொள்வதென்றும், தொடர்ந்து இது சம்பந்தமாக ஒரு குழுவொன்று அமைத்து, எதிர்காலத்தில் எவ்வாறான பரிசோதனை செய்வது தொடர்பாக முடிவெடுப்பதற்கு நிபுணர் குழுவும் சட்டத்தரணிகளும் இணைந்து வருகின்ற ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் அழைக்கப்படவிருக்கின்றது.

அத்தோடு, இதனைத் தொடர்ந்து என்னென்ன நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதும், இன்னும் வராமல் இருக்கின்ற மண் மாதிரிக்குரிய அறிக்கையைப் பெற்றுக்கொள்வதும், பல்கலைக்கழகத்திடமிருந்தும் ஒருசில அறிக்கைகள் கோரப்பட்டிருந்தது, அது சம்பந்தமான அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்காக கௌரவ மன்று இன்று கட்டளையாக்கியிருக்கின்றது.

ஏற்கனவே பேராசிரியர் ராஜ் சோமதேவா தொல்பொருள் திணைக்களத்தின் சார்பில் தொல்பொருள் பேராசிரியராக இருக்கின்றார். அதேநேரம் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் இருக்கின்றார். அதேநேரம் சிலசில காலத்திற்கு காலம் எங்களுக்குத் தேவையான அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சிலரை அணுகியிருக்கின்றோம். அதேநேரம் இதில் பங்குபற்றுகின்ற நிறுவனங்கள் இருக்கின்றன, மற்றது சட்டத்தரணிகள் இருக்கின்றார்கள். தேவைப்படின் வேறு நிறுவனங்களையும் அழைத்து இது சம்பந்தமான அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. அது தொடர்பாக மேலதிக நடவடிக்கைக்காகவும், அவர்களுடைய கருத்துக்களைக் கேட்பதற்காகவும் அடுத்த மாதம் 5ம் திகதி மீண்டும் திறந்த மன்றில் இந்த வழக்கு அழைக்கப்படவிருக்கின்றது – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button