முச்சந்தி

எழுத்தாளர் யூமா வாசுகிக்கு தமிழ் மொழிக்கான குழந்தை இலக்கிய விருது

இந்த ஆண்டின் குழந்தை இலக்கியத்துக்கான சாகித்ய அகாடமியின் ‘பால சாகித்ய புரஸ்கார்’ எழுத்தாளர் யூமா வாசுகிக்கும் ‘யுவ புரஸ்கார்’ விருது எழுத்தாளர் லோகேஷ் ரகுராமனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் குழந்தை இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது டெல்லியில் சனிக்கிழமை (ஜூன் 15) அறிவிக்கப்பட்டது.

இதில் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் யூமா வாசுகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் எழுதிய ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற நூலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் யூமா வாசுகி. இவரது இயற்பெயர் தி.மாரிமுத்து. மொழிபெயர்ப்பாளர், ஓவியர், எழுத்தாளர் என்ற பன்முகத்திறன் கொண்டவர்.

2017ஆம் ஆண்டு மலையாள எழுத்தாளர் ஓ.வி.விஜயன் எழுதிய ‘கசாக்கிண்ட இதிகாசம்’ என்ற நூலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ததற்காக இவருக்கு சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது.

லோகேஷ் ரகுராமனுக்கு ‘யுவ புரஸ்கார்’ விருது

இது தவிர, இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் சிறப்பாக எழுதி வரும் 35 வயதுக்குட்பட்ட இளம் இந்திய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் ‘யுவ புரஸ்கார்’ விருது வழங்கப்படுகிறது.

2024ஆம் ஆண்டின் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன் எழுதிய ‘விஷ்ணு வந்தார்’ என்ற சிறுகதைத் தொகுப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் ரகுராமன். பெங்களூருவில் கணினித் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிந்து வருபவர்.

‘விஷ்ணு வந்தார்’, ‘நீர் பதுமராகம்’, ‘அரோமா’, ‘அது நீ’ போன்ற இவரது பல்வேறு படைப்புகள் அதிகக் கவனம் பெற்றவை.

எழுத்தாளர்கள் யூமா வாசுகிக்கும், லோகேஷ் ரகுராமனுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button