சந்திரயான்-1 திட்ட இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ஹெக்டே காலமானார்
நிலவில் நீர் மூலக்கூறுகளைக் கண்டறிந்த இந்தியாவின் முதல் சந்திரப் பயணமான சந்திரயான்-1 இன் இயக்குநராக இருந்த இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் ஹெக்டே (71) காலமானார்.
உடல்நலக் குறைவால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
1978 முதல் 2014 வரை இஸ்ரோவுடன் நீண்ட தொழில் வாழ்க்கையைக் ஸ்ரீனிவாஸ் ஹெக்டே கொண்டிருந்தார்.
மேலும் UR ராவ் செயற்கைக்கோள் மையம் (URSC) அல்லது முந்தைய இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் (Isac) ஒரு பகுதியாக விண்வெளிப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
எவ்வாறாயினும், ஹெக்டே சிறுநீரகம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் ஏற்பட்ட மாரடைப்பை தொடர்ந்து ஜெயநகரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், இன்று மதியம் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவில் தனது 36 ஆண்டு கால பணியின் போது, வடிவமைப்பு, பகுப்பாய்வு மற்றும் திட்டமிடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பல திட்டங்களில் அவர் ஈடுப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()