இஸ்ரேல் – காஸா போர் நிறுத்தம்: ஐ.நா பாதுகாப்பு சபை ஆதரவு

அமெரிக்கா பரிந்துரைத்துள்ள இஸ்ரேல்-காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் (ஐநா) பாதுகாப்பு மன்றம் வாக்களித்துள்ளது.

முழுமையாகப் போரை நிறுத்துவது, ஹமாஸ் வைத்திருக்கும் பிணைக்கைதிகளை விடுவிப்பது, மாண்ட பிணைக்கைதிகளின் உடல்களைத் திரும்பத் தருவது உள்ளிட்டவற்றுக்கான நிபந்தனைகளை அமெரிக்காவின் போர் நிறுத்தப் பரிந்துரை கொண்டுள்ளது. ஐநா பாதுகாப்பு மன்றத்தின் 15 உறுப்பினர்களில் 14 பேர் அதற்குச் சாதகமாக வாக்களித்தனர். ர‌ஷ்யா வாக்களிக்கவில்லை.

இஸ்ரேல் அந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான பரிந்துரையை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஹமாஸ் அமைப்பும் அதை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மூன்று அங்கங்கள் கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தப் பரிந்துரையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த மே மாதம் 31ஆம் தேதியன்று வெளியிட்டார். அதற்கு ஜி7 அமைப்பு உறுப்பு நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளின் அரசாங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன.

இப்போது ஐநா பாதுகாப்பு மன்றமும் அவற்றுடன் சேர்ந்துள்ளது. இதற்கிடையே, இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில்  கொந்தளிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பழமைவாதக் கொள்கைகளைப் பின்பற்றும் மாணவர்களைக் கட்டாய தேசிய சேவை மேற்கொள்ள வைக்கும் மசோதாவை சட்டமாக்கும் முயற்சியில் இஸ்ரேல் இறங்கியதையடுத்து இந்நிலை உருவானது. மசோதா நடைமுறைப்படுத்தப்பட்டால் அது மிகவும் பழமைவாதக் கொள்கைகளைப் பின்பற்றும் யூதர்களை இராணுவத்தில் சேர்க்க வழிவகுக்கும்.

பழமைவாத யூதர்கள் பொதுவாக ராணுவத்தில் சேர்வதைத் தவிர்த்து வந்துள்ளனர்.

இராணுவ சேர்க்கை மசோதாவை சட்டமாக்க அது நாடாளுமன்றத்தில் இன்னும் பல கட்டங்களைத் தாண்ட வேண்டும். மிகவும் பழமைவாதக் கொள்கைகளைப் பின்பற்றுவோரை இராணுவத்தில் சேர்த்துக்கொள்வதற்கு இஸ்ரேலில் பல ஆண்டுக் காலமாக மாறுபட்ட கருத்துகள் இருந்து வந்துள்ளன. பலரை உள்ளடக்கும் இராணுவ சேவை, இஸ்ரேலின் பாதுகாப்புக்கான முக்கிய அம்சங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

சமய சார்பற்ற இஸ்ரேலியர்கள் பலர் இராணுவத்தில் சேர்வதை விரும்புவதில்லை. எனினும், குறைந்தது 600 இஸ்ரேலிய ராணுவ வீரர்களைப் பலிவாங்கிய காஸா போர் தொடங்கியதிலிருந்து இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பும் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button