முச்சந்தி

2025 ஆரம்பத்தில் பழைய முறைப்படி மாகாண சபைத் தேர்தல்

மாகாண சபைத் தேர்தலைக் கூட நடத்த முடியாத தலைவர்கள் 13 ஆவது திருத்தம் குறித்து எவ்வாறு பேசுவார்கள் ?எனக்கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடமாகாணத்திற்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் நல்லிணக்கம், சகோதரத்துவம், பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்புணர்ச்சி அவசியம் என்றபடியால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அடுத்த வருடம் முதல் காலாண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் எனவும் உறுதியளித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 228 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, கொட்டாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு வழங் கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற போது அதில் பேசுகையிலேயே உறுதியளித்த அவர் மேலும் பேசுகையில்,

பல்வேறு தலைவர்கள் யாழ்ப்பாண மக்களை அரசியல் சங்கீத கதிரை விளையாட்டிற்கு உட்படுத்தியுள்ளனர். அவர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வந்து வெவ்வேறு இடங்களில் பல்வேறு விடயங்களை செய்கிறார்கள். 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் என்பது விசித்திரமான ஒன்றல்ல, அது எமது நாட்டின் சட்டப் புத்தகத்தில் உள்ள விடயம். யார் அது குறித்து என்ன கதை சொன்னாலும், 13 ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அனைத்து மாகாண சபைகளும் தற்போது செயலிழந்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முன்னைய தேர்தல் முறையிலேயே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும்.

தற்போது மாகாண சபைகள் இயங்காவிட்டாலும் மாகாண சபைத் தவிசாளருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. பெயருக்கு மாகாண சபைகள் இருந்தாலும், மக்கள் பிரதிநிதிகள் மூலம் மக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய சேவைகள் முன்னெடுக்கப்படவில்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து சட்ட ரீதியிலான ஏற்பாடுகளையும் செய்து, மாகாண சபைக் கட்டமைப்பின் ஊடாக சேவையை நாடும் அனைவருக்கும் நீதி நியாயத்தை பெற்றுத் தருவோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button