நடுகைக்காரி!…. 54 ….. ஏலையா க.முருகதாசன்.


அடுப்படியை நோக்கி தாய்க்குப் பின்னால் போன புஸ்பகலா தனது கல்லூரிக்குப் பக்கத்தில் இருக்கும் சக வகுப்புத் தோழி மங்களேஸ்வரி சுகமில்லாமல் இருக்கிறாள் அவளைப் பார்க்கப் போகப் போறன்,போகிற போது கொர்லிக்ஸ் கொண்டு போய்க் குடுக்க வேணும் என்று தாயிடம் கேட்டிருந்தாள்.தாயும் தருவதாகச் சம்மதிச்சிருந்தாள்.
தாய்க்குப் பொய் சொல்கிறேன் என்று புஸ்பகலாவின் மனம் உறுத்தினாலும் காதலர்கள் பொய் சொல்வதை ஒரு குற்றமாகக் கருதுவதில்லை.
ஞானம் மருந்து உரசிக் குடிச்ச வெறும் சிரட்டையை வீட்டுக்கு கொண்டு வந்து அதை குப்பையில் வீசி எறிந்ததால் தாய்க்கு ஏற்பட்ட மனக்குழப்பம் அவரின் முகத்தில் கலவரமாகவே தெரிஞ்சது.
வயித்தைச் சுத்தப்படுத்தவென்று குடுக்கப்படும் பேதி மருந்தை உரசிக் குடுக்கும் போது அதன் மணம் வீடு முழுக்க மணக்கும்.
ஏதோ ஒரு எண்ணத்தில்; ஞானம் மருந்து உரசிக் குடிச்ச சிரட்டையை பேப்பரால் சுற்றிக் கொண்டு வந்து அதைப் புஸ்பகலா குப்பையில் எறிய மருந்தின் மணத்துடன் குப்பையில் கிடந்த சிரட்டையைக் கண்ட புஸ்பகலாவின் தாய் எதையெல்லாமோ யோசிக்கத் தொடங்கினார்.
பருவ வயதில் மிதந்து கொண்டிருந்த குமர்ப்பிள்ளையான தனது மகளையும் மருந்து மணத்த சிரட்டையையும் தொடர்புபடுத்தி அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என அவரின் மனம் அலைபாயத் தொடங்கியது.
தானும் மகளின் வயதைக் கடந்து வந்தவள்தான்.பொம்பிளைப் பிள்ளைகளுக்கு பருவ வயதில் ஏற்படும் பாலுணர்வுக் கிளர்ச்சிகள் தனக்கும் எற்பட்டதுதான்,பெற்றோர் உறவினர் சமூகம் என எல்லாக் கட்டுப்பாடுகளுக்குள்ளும் இயைந்து போனதுடன் கலாச்சாரக் கட்டுப்பாடுகளும் திருமணம் செய்து கணவனுடன் உடலுறவை அனுபவிக்கும் காலம் வரை கட்டுப்பாட்டையே ஒரு கலாச்சாரமாகக் கொண்டு தாங்கள் வாழ்ந்த காலம் போல இன்றில்லை என்பது என்னவோ உண்மைதான், ஆனால் தனது மகள் சபலத்துக்குள் ஆட்படமாட்டாள் என நினைத்தார்.
பொம்பிளைப் பிள்ளைகளை வைச்சுக் கொண்டிருக்கும் தாய் தகப்பன் அவர்களுக்கு கல்யாணம் செய்து கொடுக்கும் வரை ஒரு எச்சரிக்கையுடன்தானிருப்பார்கள்.
தங்கடை பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிச்சுக் கொண்டேயிருப்பார்கள்.என்னதான் தங்கடை பிள்ளைகள் வழிதவறிப் போக மாட்டார்கள் எனஇறு நம்பினாலும் அவர்களின் வளர்ச்சியாலும் உருவத்தினாலும் பொடியங்கள் கண் வைச்சுவிடுவாங்குளோ என்ற பயமும் கலந்திருக்கும்.
தான் கேள்விப்பட்ட கேள்விப்பட்டுக் கொணடிருக்கும் சில கதைகளால் புஸ்பகலாவின் தாயின் கற்பனைகள் கிளைவிடத் தொடங்கின.
தான் குமர்ப்பிள்ளையாக இருந்த போது கேள்விப்பட்ட விடயங்களை மருந்துச் சிரட்டையோடு பொருத்திப் பார்த்து தனது மகளும் ஏதோ பிழை விட்டிருப்பாளோ எனத் தவியாய்த் தவித்தாள்.
தனது பருவ வயதுக் காலத்திலும் காதல் இருந்தது.அப்படிக் காதலிப்பவர்கள் தமது கட்டுப்பாட்டை இழப்பதும் உண்டு.ஒரு முறையில் அது ஒன்றும் நடக்காது என்று காதலன் கொடுக்கும் வாக்குறுதிகளை நம்பி தன்னை காதலனிடம் இழக்கும் காதலிகள் கருவுறுவதும்,அதனைக் கேள்விப்படும் தாய் தகப்பன்,குடியைக் கெடுக்க வந்தவளே இந்த வயசிலா உனக்கு அது தேவைப்பட்டது செத்துப் போடி,அவனுக்கென்ன அவன் ஆம்பிளையடி சேறு கண்ட இடத்திலை விழக்கித் தண்ணி கண்ட இடத்திலை கழுவுவதுதானே ஆம்பிளையளின்ரை குணம் என்பார்கள்.
அடுத்த வீட்டுக்குத் தெரியாமல் வாயிலும் வயித்திலும் அடிச்சுப் புலம்பிக் கடைசியிலை கடுக்காய்ப் பேதியைக் குடுத்தாவது வயித்திலை வாங்கிவந்ததை அழிக்கலாம் என்று முயற்சி செய்து அது சரிவராது போனால் இதற்கான மருந்தைச் செய்வதில் பேர் போன பரியாரியிடம் இரகசியமாக இதற்கான மருந்தை வாங்கிக் கொண்டு வந்து குடுப்பதும் உண்டு.எல்லாப் பரியாரிமாரும் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள்.
தனது காலத்தைப் போல இன்று இல்லை.இன்டைக்கு இருக்கிற பொம்பிளைப் பிளளைகளும் ஆம்பிளைப் பிள்ளைகளும் பல முகங்களுடன் திரிகிறார்கள்,தனது மகள் ஏடாகூடமாக நடக்க மாட்டாள் என்று நம்பினாலும் தன் வீட்டு நெருப்பும் சுடுந்தானே என பதற்றமானாள்.
தனது அயலில் தன்னொத்:த வயதில் உள்ள பெண்கள் சொல்லும் செய்திகள் புதிய விசயங்களை அவளுக்கு அறியச் செய்தது.
என்ன கருமமோ ஏதோ ஆணுறையாம் அதைப் போட்டால் கருத்தரிக்காமல் விடுமாம்,வர வர ஊர் உலகம் ஒழுக்கமில்லாமல் போய்விட்டது என்ற கதை அவர்களுக்குள் இரகசியமாகக் கதைக்கபட்டுக் கொண்டுதானிருந்தது.
ஏதோ பிரீதியாம் அதை அதுக்குப் பாவிக்கிறதாம்.தெல்லிப்பழைச் சந்தியில் இருக்கின்ற இரங்கநாதற்றை கடையிலை விக்கினமாம் என்ற செய்தி இரகசிச் செய்தியாக ஊருக்குள் பரவே செய்தது.
உந்த மனசனுக்கேன் உந்த வியாபாரம் காசு வருதென்டதற்காக கண்டதையெல்லாம் விற்கிறதா,எல்லாம் கலிகாலம் என்று பெருமூச்சுவிட்டுக் கதைக்கும் பெண்களுக்குள் புஸ்பகலாவின தாயும் சங்கமமாகினாள்.
கணவரிடம் தயங்கித் தயங்கி,என்னவோ பிரீதியாம் ஆணுறையாம் அதென்னப்பா என்று தான் அறிஞ்சு வைச்சிருந்ததை இன்னும் விளங்கிக் கொள்வதற்காக கேட்ட போது கணவன் அது ஒன்றும் பாரதூரமான விசயம் அல்ல என்று விளக்கமாகச் சொன்ன போது தாய் பிழை விடுற ஆம்பிளைப் பிள்ளையள் பொம்பிளைப் பிள்ளையளுக்கு இது வசதியாகிப் போய்விடுமோ என திகைச்சுப் போனாள்.
பொம்பிளைப் பிள்ளையள் வழிதவறிப் பிழை விட்டாள் தகப்பன்மார் நீ வீட்டிலைதானே இருந்தனி மோள் என்ன செய்கிறாள் எங்கை போறாள்
வாறாள் என்றதைக் கவனிக்கிறதில்லையா ஊர்ப் பெண்டுகளோடை சேர்ந்து ஊர்ப்பூராயம் கதைக்கிறதுதானே உன்னுடைய வேலை என்று மனைவியைத் திட்டும் கணவனும் உண்டு.
ஒரு சிரட்டையிலிருந்து வந்த மருந்தின்ரை மணம் புஸ்பகலாவின் தாயின் மனதைக் குழப்போ குழப்ப,குழம்பிய மனதுடன் அடுப்படிக்குள் நுழைந்து மகளுக்கு அவித்து வைச்ச புட்டையும் சூடைமீன் குழம்பையும் முட்டைப் பொரியலையும் போட்டுக் கொடுக்க,அடுப்படிக்குள் மேசை கதிரை இருந்தும் கீழை ஒருக்களித்து உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினாள் புஸ்பகலா.
புஸ்பகலா தகப்பனைப் போல நல்ல வளர்த்தியாகவும் கால் கைகள் நேர்த்தியாகவும் இருந்தன.வாயில் இரண்டுபுறமும் இருந்த தொற்றுப் பற்கள் இன்னும் அவளுக்கு அழகு சேர்த்தன.
மகளின் துடைகளையும் சொண்டையும் பார்த்த அவள் இந்தக் கவர்ச்சியும் அழகுந்தான் அவள்மீது பொடியங்கள் ஆசைப்படக் காரணமாகிவிடுமோ எனப் பயந்தாள்.
ஒரு பெண்ணை விரும்புவதற்கு மனதுடனான காதல் மட்டுமல்ல அந்தப் பெண்ணிடம் உள்ள உடலழகு காமத்தைத் தூண்டுவதாயும் அமைந்துவிடுவதால் காதலில் காமமும் இரண்டறக் கலந்திருப்பதை தாய் உணர்ந்திருந்தாள்.
புஸ்பா ஆருக்கு கொர்லிக்ஸ் கொண்டு போய் குடுக்க வேண்டுமென்று சொன்னனி என்று தாய் கேட்க,அம்மா எனn;னாடு படிக்கிற மங்களேஸ்வரி நல்ல காய்ச்சலிலை கிடக்கிறாள்;,அவளின்ரை வீடு எங்கடை கொலிஜ்யுக்குப் பக்கத்திலைதான்,மத்தியானச் சாப்பாட்டு நேரம் அவளைப் போய்ப் பார்க்கப் போறன் என்று பொய் சொல்லுகிறாள் புஸ்பகலா.
ஆனால் தாய்க்கோ குப்பையிலை கிடந்த மருந்துரைச்ச சிரட்டையும்,நேற்று இல்லாட்டில் இன்று சுகமில்லாமல் உனக்கு வரவேணுமே வந்திட்டுதா என்று தாய் கொஞ்ச நேரத்துக்கு முன் கேட்க இல்லையம்மா ஒருநாள் இரண்டு நாள் பிந்தும் முந்துதந்தானேயம்மா என்று சொன்னதில் திருப்தியடையாதவளாக குழும்பிப் போயிருந்தாள்.
அடுத்த நாள் தாய் குடுத்த கொர்லிக்ஸ் போத்தலை வாங்கி சைக்கிள் காண்டிலில் முன்பக்கமாக கொழுவியிருந்த பிரம்புக்கூடைக்குள் புத்தகம் கொப்பிகளுடன் வைச்சபடி கல்லூரிக்குப் போய்க்: கொண்டிருந்தாள்.
இதுவரையில் எந்த மனச்சங்கடமும் இல்லாதிருந்த புஸ்பகலாவின் தாய் கல்லூரிக்குப போகும் மகளை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
(தொடரும்)
![]()