ரூ. 2 ஆயிரம் நோட்டு அதிகம் வைச்சுருக்கீங்களா?: இதை படியுங்க.
புழக்கத்தில் உள்ள, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவதாக, மத்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்தது. அதேநேரம், மக்கள் தங்கள் வசம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள, வரும் 23ம் தேதி முதல் செப்., 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் நோட்டு அதிகம் வைச்சுருக்கீங்களா?. நீங்கள் என்ன செய்ய வேண்டும்.
சில கேள்விகளும் பதில்களும்:
1. ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் ஏன் திரும்பப் பெறப்படுகின்றன?.
பதில்: ரிசர்வ் வங்கியின் கிளீன் நோட் பாலி்சியின் படி பொதுமக்களுக்கு உரிய ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உறுதிப்படுத்தும் விதமாக ரூ. 2ஆயிரம் நோட்டுகள் திரும்ப பெறப்படுகிறது.
2. கிளீன் நோட் பாலிசி(Clean Note Policy) என்றால் என்ன?.
பதில்: பொதுமக்களுக்கு நல்ல தரமான ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது தான் கிளீன் நோட் பாலிசி.
3. ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் சட்டபூர்வ நிலை நீடிக்குமா?
பதில்: ஆமாம். ரூ.2ஆயிரம் நோட்டின் சட்டப்பூர்வ நிலை தொடரும்.
4. ரூ.2 ஆயிரம் நோட்டுகளை சாதாரண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாமா?
பதில்: ஆம். பொதுமக்கள் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு ரூ. 2ஆயிரம் நோட்டுகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். அவற்றைப் பணமாக பெறலாம். இருப்பினும், வரும் செப்டம்பர் 30ம் தேதிக்கு முன், டெபாசிட் செய்ய வேண்டும். அல்லது வங்கிகளில் ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற வேண்டும்.
5. ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இருந்தால் அதை மக்கள் என்ன செய்ய வேண்டும்?
பதில்: பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டும். 2 ஆயிரம் பணத்தை மாற்ற வங்கி கிளைகளை அணுக வேண்டும். வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்து ரூ,2ஆயிரம் நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை அனைத்து வங்கிகளிலும் நடைபெறும்.
6. ரூ.2ஆயிரம் நோட்டுகளை ஒரு முறையில் வங்கிகளில் எவ்வளவு வரை மாற்றலாம்?
பதில்: பொதுமக்கள் ரூ.2ஆயிரம் நோட்டுகளை ஒரே நேரத்தில் ரூ.20 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம்.
7. வணிக பரிவர்த்தனைகள் மூலம் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற முடியுமா?
பதில்: ஆம், கணக்கு வைத்திருப்பவருக்கு ஒரு நாளைக்கு ரூ.4ஆயிரம் வரை பரிவர்த்தனை செய்து ரூ.2ஆயிரம் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
8. எந்த தேதியிலிருந்து பரிமாற்ற வசதி ஆரம்பிக்கும்?
பதில்: பொதுமக்கள் வங்கிக் கிளைகளையோ அல்லது ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களையோ மே 23ம் தேதி முதல் அணுகி பரிமாற்ற வசதியைப் பெறலாம்.
9. வங்கியின் கிளைகளில் இருந்து ரூ.2ஆயிரம் நோட்டுகளை மாற்ற வங்கியின் வாடிக்கையாளராக இருப்பது அவசியமா?
பதில்: வங்கிக் கணக்கு எண் வைத்திருப்பவர் அல்லாதவர், எந்த வங்கிக் கிளையிலும் ஒரே நேரத்தில் ரூ.20ஆயிரம் வரையிலான ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
10.ஒருவருக்கு வணிகம் அல்லது பிற தேவைக்களுக்காக ரூ.20 ஆயிரத்திற்கு மேல் பணம் தேவை என்றால் என்ன செய்வது?
பதில்: வங்கிகளில் வணிக கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் டெபாசிட் செய்யலாம். ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை டெபாசிட் செய்து, அதன் மதிப்பு ஏற்ப, ரூபாய் நோட்டுக்களை பெறலாம்.
11. பரிமாற்ற வசதிக்கு ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா?
பதில்: இல்லை. இது முற்றிலும் இலவசம்.
12. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கான பரிவர்த்தனை மற்றும் டெபாசிட் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமா?
பதில்: ரூ.2ஆயிரம் நோட்டுகளை மாற்ற அல்லது டெபாசிட் செய்ய முற்படும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
13. ஒருவரால் உடனடியாக ரூ.2 ஆயிரம் நோட்டை டெபாசிட் செய்யவோ மாற்றவோ முடியாவிட்டால் என்ன நடக்கும்?
பதில்: பொதுமக்களுக்கு எளிதாகவும் வசதியாகவும் செய்ய, ரூ.2ஆயிரம் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும் அல்லது மாற்றுவதற்கும் நான்கு மாதங்களுக்கும் மேலான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
14. ரூ.2 ஆயிரம் நோட்டை மாற்ற அல்லது டெபாசிட் செய்ய வங்கியில் மறுத்தால் என்ன செய்ய வேண்டும்?
பதில்: குறைகளை நிவர்த்தி செய்ய, புகார் தாரர் அல்லது பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் முதலில் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரை அணுகலாம். புகார் அளித்த 30 நாட்களுக்குள் வங்கி பதிலளிக்கவில்லை என்றாலோ அல்லது வங்கி அளித்த பதில் திருப்தி அடையவில்லை என்றாலோ, புகார் தாரர் ரிசர்வ் வங்கி – ஒருங்கிணைந்த மத்தியஸ்தர் திட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். புகார் மேலாண்மை அமைப்பு இணையதளமான cms.rbi.org.in என்ற முகவரியில் தெரிவிக்கலாம்.
![]()