மொசக்குட்டி – அண்டனூர் சுரா…!சிறுகதை – 16

சடையன் எப்பொழுது கொல்லைக்காட்டிற்குச் சென்றாலும் திரும்பி வருகையில் ஏதேனும் ஒன்றைஇழுத்து வரவே செய்வார். நரி, கொக்கு, பாம்பு,.. இப்படி ஏதேனும் ஒன்று அவரது கையில் செத்து காலும்,வாலும் தரையில் இழுபட்டுக்கொண்டு வரும். சில நேரம் அவர் ஏதேனும் ஒன்றை உயிருடன் பிடித்துவருவதும் உண்டு.
“வவ்…வவ்…” தெரு நாய்கள் அவரைக்கண்டு ஆலவட்டமடிக்கும். தொண்டைத் தண்ணீர் வற்றக்குரைக்கும். நாய்கள் ஊரையே கூட்டுவதைப் போல குரைத்துக்கொண்டிருந்தால் சடையன் வீடு திரும்புகிறார்என்று அர்த்தம். அவரது பேரன் அருணும் பேத்தி வினுவும் வாசல் வரைக்குமாக ஓடி வந்து எட்டிப்பார்ப்பார்கள். ஒரு நாள் அவர் ஒரு நரியை உயிருடன் பிடித்து கழுத்தைக் கால்களுடன் சேர்த்து இறுகக்கட்டித் தூக்கி வந்திருந்தார். ஊரும், தெருவும் வீடு வரைக்கும் வந்து நெற்றி சுருங்கப் பார்த்துச் சென்றது.இன்னொரு நாள், ஆளுயர சாரைப் பாம்பை அடித்து வால்பகுதியைப் பீச்சாங்கையால் பிடித்துஇழுத்துகொண்டு வந்தார். தெருவே நாலாபுறமும் தெறித்து ஓடியது. இப்படியாக சடையன் பிடித்து வரும்பறவைப்பட்சிகள் ஊரைத் திரட்டவும் சில நேரம் விரட்டவும் செய்யும். அவரது கைக்கு ஒன்றும்பிடிபடாவிட்டால் இருக்கவே இருக்கின்றன பட்டமரங்கள். வேரோடு பெயர்த்து இழுத்துகொண்டு வருவார்.
அன்றைய தினம் அவர் பிடித்து வந்திருந்தது ஒரு முயல். உயிர் முயல் அது. இரண்டு கைகளால்கச்சிதமாகப் பொத்தித் தூக்கும் அளவிற்கு அடக்கமாக இருந்தது. கொழுகொழுவென உடம்பு. வால் சிறுத்து,வயிறு பெருத்து, சாம்பல் நிறத்தில் அத்தனை அழகாக இருந்தது.![]()
தூரத்தில் சடையன் வரும்போதே அதை வினு பார்த்துவிட்டாள். ‘ அய்…’ என்று துள்ளிக் குதித்தாள்.“என்ன வினு…?” என்று கேட்டான் அருண்.
“ அப்புச்சி மொச கொண்டுக்கிட்டு வருது…”
முயலின் கால்கள் அசைவது தெரிந்தது. இருவரும் கார் ஓட்டுவதைப் போல வளைந்து, நெளிந்துஉதடுகளைப் பிதுக்கி “டர்ர்ர்ர்…..” என்று ஒலி எழுப்பியவாறு அவரை நோக்கி ஓடினார்கள். அருண்தான்முதலில் முயலைத் தொட்டான். வாலின் பெரும்பகுதி சாம்பல் நிறத்திலிருந்தது. மிருதுவான தோல். அதன்காதுகள் மடல் போல் விரிந்திருந்தன.
ஒரு செவ்வாழைத் தாரினை அதன் தண்டைப் பிடித்துத் தூக்கி வருவதைப் போல, முயலின்காதுகளைப் பிடித்து தூக்கிவந்திருந்தார். அம்முயலை ஒருவன் விலைக்குக் கேட்டான். சடையன் ஒரு கணம்நின்று முயலைக் கேட்டிருந்தவரின் முகத்தின் முன் தூக்கி அப்படியும், இப்படியுமாகத் திருப்பி, ரெண்டுகிலோ தேறும் என்றார். அவர் ஒரு விலை சொல்ல, கேட்டிருந்தவர் இன்னொரு விலை சொல்ல,…சடையன்நடக்கத் தொடங்கினார்.
“ மொச எனக்குதே…”
“ ம்கூம் எனக்குதே…”
அருணும் வினுவும் போட்டாப் போட்டி போட்டார்கள். வினு கைதட்டிக்கொண்டே உற்சாகமாகக்குதித்தாள். முயல் அவள் பக்கமாகத் தலையைத் திருப்பிப் பார்த்தது. கண்களை உருட்டித் திரட்டி விழித்தது.முயலைப் போலவே அவளும் விழித்தாள். கண்களைச் சிமிட்டினாள். அவளது செய்கை பலரையும் சிரிக்கவைத்தது.
முயல் வீடு வந்து சேர்ந்தது.
முயலைப் பார்த்ததும் சிவப்பாயிக்கு வேலை புரியவில்லை. “ இந்த மனுசன் ஏன் இத இழுத்துக்கிட்டுவரணுமாம்…” என்று வாய்விட்டே கேட்டாள்.
“ அடியே, கறியிலே நல்ல ருசியான கறி முயல்கறிதான்டி. இது தெரியாம பேசுறீயே…” என்றபடிமுயலைத் தூக்கிப்பிடித்தார் சடையன்.
சிவப்பாயி கையில் ஒரு பிடி விறகு இருந்தது. விறகைத் தோளில் சாய்த்துக்கொண்டு குனிந்துமுயலின் முகத்தைப் பார்த்தார். “ என்னடி இப்டி பார்க்கே, மூஞ்சுற பார்க்கிற மாதிரி. இது மொசடி. மான்கறிக்கு அடுத்து உசத்தியான கறி மொசக்கறித்தான். ஆக்கி வைச்சா ஆறுறதுக்குள்ள தின்னுப்புடலாம்…”என்றார் சடையன்.
“ ஆக்கி வச்சா யாருதான் தின்ன மாட்டாக. கொன்னு, உரிச்சி, கொத்தி அள்ளி வராம, உசிரோடகொண்டுக்கிட்டு வாறியளே. இத எப்படிச் சமைக்கிறதாம்…?”.
“ கோழிய கழுத்தத் திருகிக் கொல்லுற மாதிரி இதையும் கொன்னுபுடு புள்ள..”
“ இந்த உசிரக் கொல்ல யாருக்கு மனசு வரும். என்னால முடியாதுங்க…” என்ற சிவப்பாயி, முயலின்கண்களைத் துழாவிப் பார்த்தார். “அது பார்க்கிறத பாரு. கொழந்த மாதிரி. என்னால இந்த உசிர கொல்லமுடியாது. எங்கேயாச்சும் குடுத்துக் கொன்னு எடுத்துட்டு வந்தா ஆக்கி வக்கிறே..” என்று சொல்லிவிட்டுஅடுப்பாங்கரைக்குச் சென்றுவிட்டாள்.
சடையன் பின்வாசலுக்கு அருகில் ஒரு பிரம்புக் கூடைக்குள் முயலை வைத்தார். அதன் மீதுஇன்னொரு கூடையை வைத்து மூடினார். அருணும் வினுவும் கூடைக்கு வெளியே தலையை வைத்துநெடுவாக்கில் படுத்து அதன் அழகைப் பார்த்தார்கள். குட்டியான கண்கள், குவிந்த உதடுகள், ஏறி இறங்கியநெற்றி. எடுத்துக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது இருவருக்கும்.
சடையன் வீட்டிற்குளிலிருந்து இரண்டு கேரட்டும் கொஞ்சம் கோஸ் இலைகளையும் எடுத்து வந்தார்.கூடையை ஒரு பக்கமாகத் தூக்கி அவற்றைக் கூடைக்குள் எறிந்தார். முயல் இரண்டையும் ஒரு முறைநுகர்ந்து மட்டும் பார்த்தது.
மீண்டும் அருணும் வினுவும் போட்டிப் போடத் தொடங்கினார்கள்.
“எனக்குதே இந்த மொச..” என்றாள் வினு.
“இல்ல, எனக்குதே…” என்றான் அருண்.
“இந்த மொசல வச்சி நீ என்ன செய்வ…?”
“வெளையாடுவேன். நீ என்ன செய்வே…?”
“நா குளிப்பாட்டி, பொட்டு வச்சி, அதோட கழுத்தில மணி கட்டிவிடுவேன்…”
“அய்யே, அது என்ன பாப்பாவா, பொட்டெல்லாம் வக்கணுங்கிறே….?”
“பாப்பா மாதிரிதானே இருக்கு. அண்ணே, கால்கள்ள வளையல் போட்டா அழகா இருக்கும்ல. அண்ணேஅதோட வாலப் பாறேன். தாத்தா மீச மாதிரி இருக்கு…” அவள் அப்படிச் சொன்னதும் அவனுக்குச் சிரிப்புவந்தது. இருவரும் முயலைப் பார்க்க, சிரிக்கவென இருந்தார்கள்.
அங்கு வந்த சடையன் “பார்க்க மட்டும் செய்யணும். தொறந்து விட்டுறக் கூடாது, என்ன…?”அதட்டுவதைப்போல சொல்லிவிட்டு முயலைக் கொன்று உரிக்க ஆள் அழைத்துவரச் சென்றிருந்தார்.
இருவரும் முயலைச் சுற்றிச்சுற்றி வந்தார்கள். வெளியில் ஓடி புல் பிடுங்கி வந்தார்கள். முயல் பின்கால்களை உட்புறமாக மடக்கி, முன்னங்கால்களை மெல்லத் தாங்கி உட்கார்ந்திருந்தது.
“நாம ரெண்டு பேரும் புல்லைப் போடுவோம். யாரோட புல்லைத் திங்குதுனு பார்ப்போம்…”,
“சரிண்ணே, சூப்பர் விளையாட்டு…”
“யாரோட புல்லத் தின்னுதோ, அவங்களுக்குதே மொச. நான்தான் ஃபர்ஸ்ட்டு போடுவேனாம்…”என்றான் அருண். அவள் கண்களைக் கசக்கினாள்.
“என்னாச்சு வினு…..?”
“புல்ல நீ மொதல்ல போட்டா ஓம் புல்லதானே ஃபர்ஸ்ட்டு திங்கும்…”
“சரி ரெண்டு பேரும் போடுவோம்…”
இருவரும் மேல் கூடையைத் திறந்து முயலுக்குப் புல்லைக் கொடுத்தார்கள். முயல்எழுந்திருக்கவில்லை, நுகர்ந்து பார்க்கவில்லை. காது மடல்களைக்கூட ஆட்டாமல் உட்கார்ந்தபடியேஇருந்தது.
“என்னாச்சுண்ணே மொசலுக்கு..?”
அவள் முயலின் முகத்துப் பக்கமாகச் சென்று பார்த்தாள். முயல் கண்களை மூடி அழுவதைப்போலிருந்தது. தலை தொங்கிப்போய் காது மடல்கள் தளர்ந்துபோயிருந்தன. “ அண்ணே, மொச சாகப்போகுதுண்ணே…” அவளது உதடுகள் துடித்தன.
இருவரும் கூடையிலிருந்து சற்று விலகி நின்றார்கள். கைகளைத் தட்டி “ உச்சூ…உச்சூ…” என்றார்கள்.முயல் கண்களைத் திறக்கவில்லை. அருண் ஒரு குச்சியை எடுத்து முயலின் காதிற்குள் கிச்சுக்கீச்சுமூட்டினான். முயல் காதுகளை ஆட்டவில்லை. முதுகை மெல்லத் தட்டினான். முதுகைக் குலுக்காமல்ஆடாது, அசையாது உட்கார்ந்திருந்தது..
“அண்ணே மொச செத்துதானே போகப்போவுது…” வினுவுக்கு அழுகை வந்தது. தரையோடுபடுத்துவிட்டிருந்தாள்.
முயல் இறுக மூடியிருந்த கண்களை மெல்லத் திறந்தது. அதன் கண்கள் கலங்கிப்போய், பார்க்கசிவப்பாக இருந்தன. கண்களிலிருந்து கண்ணீர் வடிவது போல் இருந்தது. அதன் உடம்பு விடைப்பதைப்போலவும், வயிறு மெல்ல ஊதி, மெலிவதைப் போலவும் இருந்தது. வினு கையிலிருந்த குச்சியால் கேரட்டைஅதன் வாயருகே தள்ளினாள். முயல் திரும்பவில்லை.
வீட்டிற்குள் ஓடினான் அருண். “ அப்பாயி, மொசல வந்து பாரேன்…”
அவர் அம்மியில் மிளகாய் மல்லி அரைத்துக்கொண்டிருந்தாள். ஒரு காலை அம்மிக்கட்டுக்குக்கொடுத்து மறுகாலை பின்பக்கமாக நீட்டி கைகளை முன்னே, பின்னே நீட்டி இழுத்து அரைத்த மல்லியைவழித்து, அம்மியின் மையத்தில் வைத்து குழவியை ஒரு பக்கமாகத் தூக்கி அழுத்திஅரைத்துகொண்டிருந்தாள்.
“ அப்பாயி, மொச பாவம். சாவப்போவுது”
“ சாவாது கண்ணு, தூங்கியிருக்கும்…”
“ வந்து பாரு அப்பாயி..”
“ தோ வர்ரேன் கண்ணு”
சிவப்பாயி பேரனைத் திரும்பிப் பார்க்கவில்லை. நெற்றியில் வழிந்த வியர்வையைக் கூட வழிக்காமல்மல்லியை அரைத்து , வழித்துவிட்டு, ஒரு தேங்காய்த் துண்டை அம்மியின் மையத்தில் வைத்து நைத்து‘வேகு, வேகு’ என இழுத்தாள்.
அருண் ஓடி வந்தான். முயலைப் பார்த்தான். முயல் முன்னே விடவும் சோர்ந்துபோயிருந்தது. கண்கள்இமைகளுக்குள்ளாக இடுங்கிப் போயிருந்தன. வாய் ஆ…வெனத் திறந்தபடியே இருந்தது. முகம் களையிழந்து,செத்துவிட்டதைப் போலிருந்தது.
“ அண்ணே, அதுக்கு தண்ணீ வப்போம்ண்ணே…” என்றவள் அவளே ஓடிச்சென்று ஒரு தட்டில் தண்ணீர்கொண்டு வந்தாள்.
“ எப்படிண்ணே வக்கிறது…?”
“ கூடையைத் திறக்கலாம்,…”
“ ஓடிட்டா…?”,
“ பிடிச்சிடலாம்..”
“ அண்ணே, மொசலுக்கு என்னமோதாண்ணே ஆச்சு…”,
“ ஆமாம் வினு. தண்ணீ குடிக்க மாட்டேங்குது, புல்ல தின்ன மாட்டேங்குது,..”![]()
வினுவிற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு செத்துப்போன ஆட்டுக்குட்டி நினைவுக்குவந்தது. அந்த ஆட்டுக்குட்டி இப்படித்தான். வாயைத் திறந்து வைத்துகொண்டு, மூச்சை விட முடியாமல்விட்டுக்கொண்டு, கண்கள் இமைக்குள் சொருகிப்போய், காது, கால்களை அசைக்காமல் செத்திருந்தது.
“ அண்ணே, நம்ம ஆட்டுக்குட்டியும் சாகிறதுக்கு முன்னாடி இப்படிதானே பண்ணுனுச்சு…”
“ அப்படிச் சொல்லாதே வினு. அப்றம் மொச நெஜமாவே செத்துப் போயிடும்…”
அவள் நாக்கைக் கடித்துகொண்டாள். தலையில் கொட்டிக்கொண்டாள்.
“ ஓடிப்போயி அப்புச்சிய கூப்பிட்டு வரலாமா?” என பரபரத்தான் அருண்.
“ சரிண்ணே…”
இருவரும் ஓடினார்கள். எங்கு தேடியும் அப்புச்சியைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஏமாற்றத்துடன்திரும்பிவந்தார்கள். இந்நேரத்திற்கு முயல் செத்துப்போயிருக்கும். வெள்ளை முழி வெளியே தள்ள, வயிறுஉப்பிப்போய், செத்துப்போன ஆட்டுக்குட்டியைப் போலவே செத்துப் போயிருக்கும்… அதை நினைக்க நினைக்கவினுவுக்கு அழுகை வந்தது.
இருவரும் வீட்டை நோக்கி ஓடி வந்தார்கள். அப்புச்சி தலையைச் சொறிந்து கொண்டும், அப்பாயிஇடுப்புக்குக் கையைக் கொடுத்தும் நின்றுகொண்டிருந்தார்கள்.
“ என்னாச்சு?”
அருணும் வினுவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே மெல்ல நடந்து முயல் அருகேவந்தார்கள்.
“ அய்…” என்று கத்தினாள் வினு.
முயல் இரண்டு குட்டிகள் ஈன்றிருந்தது. காது மடல்களை தாழம்பூ மடல்களைப் போலத்தூக்கிக்கொண்டு தலையைத் திருப்பி வினுவைப் பார்த்தது. அது ஈன்ற இரண்டு குட்டிகளும் பொம்மையைப்போல இருந்தன. அருண் ஓடிச்சென்று ஒரு குட்டியைத் தூக்கினான். குட்டியூண்டு கால்கள். பூவைப்போலமிருதுவான சருமம்,…
வினு, தாய் முயலைத் தூக்கி முதுகைத் தடவிக்கொடுத்தாள். அதன் பின்பகுதி இரத்தத்தால்தோய்ந்துபோயிருந்தது.
![]()