அன்னையர் தினம்: தலைவர்கள் வாழ்த்து

அன்னையர் தினத்தை முன்னிட்டு, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தன் பெற்ற பிள்ளைகள் மீது தாய் அளவிற்கு, இந்த உலகத்தில் மற்றவர்கள் எவரும் அன்பும் செலுத்த முடியாது என்பதே உண்மையான ஒன்றாகும்.

கவர்னர் ரவி:

தன் நலனை விட பிள்ளைகள் முன்னேற்றத்துக்காக எத்தகைய தியாகத்தையும் செய்வதே தாய்மை குணம். அன்பில் சமரசமில்லாதது தாய்மை பண்பு. ஒரு நல்ல குடிமகனை உருவாக்கிய தாய் பெருமிதம் கொள்வதுபோல், நல்ல தேசமாக உலகில் முன்னிலை பெற்று வரும் நம் பாரதத்தை கண்டு பாரத மாதா பெருமிதம் கொள்கிறார்.

உலகில் தாய்மைக்கு மதிப்பு கொடுக்கும் நாடு நமது பாரத நாடு, பூமா தேவி பாரத மாதா என பூமிக்கும், நம் தேசத்துக்கும் அன்னையையே முன்னிலைப்படுத்துகிறோம். அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்

உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் வாழ்த்துகள். அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம் எனக் கூறினார்.

தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை:

தாயின் அன்பையும் தாய்மையின் பெருமையையும் போற்றும் அன்னையர் தினமான இன்று, குடும்பத்தில் அனைவரையும் இணைக்கும் மையப்புள்ளியாக விளங்கும் தாயின் கடின உழைப்பு, தியாகங்கள், நம் வாழ்வில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கினை போற்றுவோம். இனிய அன்னையர் தின வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

எல்லா உயிர்களிடத்தும் நிபந்தனையற்ற அன்பை வாரி வழங்கும் உலகம் முழுவதும் உள்ள அன்னையர்களுக்கு என் நெஞ்சார்ந்த அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்றைய அவசரகால டிஜிட்டல் யுகத்தில் வீடு, அலுவலகம் என அனைத்தையும் கவனிக்க வேண்டிய நெருக்கடியான காலகட்டத்திலும் அனைவரிடத்திலும் அன்பு செலுத்த அன்னையர்கள் என்றுமே தவறுவதில்லை எனக் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம்:

தனித்துவம் பெற்ற அன்பை, யாருடனும் ஒப்பிட முடியாத, அளவிட முடியாத அன்பை, கற்பனை செய்ய முடியாத பாசத்தை அள்ளித் தரும் தாயின் தன்னலமற்ற தியாகத்தைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினமான இன்று அனைத்து தாய்மார்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button