இளைஞர்களை குட்டிச்சுவராக்கும் ஐ.பி.எல்.,

அண்டை நாடான சீன பிரதமர், லி கியாங் இந்தியா வந்தபோது, தனியார், ‘டிவி’ நிருபர் ஒருவர் சம்பந்தமில்லாத கேள்வி ஒன்றை அவரிடம் கேட்டார்… ‘சீனாவில் இனியாவது, கிரிக்கெட் விளையாடப்படுமா?’ என்பது தான் அந்தக் கேள்வி.

அதற்கு லி கியாங், ‘அதற்கு ஒரு போதும் வாய்ப்பில்லை; நாங்கள் ஒரு நாளில், சிறு பகுதியை தான் விளையாட்டுக்கு எடுத்துக் கொள்வோமே தவிர, ஒரு நாளையே விளையாட்டுக்காக எடுத்துக் கொள்வதில்லை. மாதக் கணக்கில் கிரிக்கெட் ஆடுவதையும், அதற்காக கோடிக்கணக்கான இளைஞர்கள், தங்கள் நேரத்தை அர்ப்பணிப்பதையும் பார்த்தால், எனக்கு ஆச்சரியமும், பரிதாபமும் தான் ஏற்படுகிறது’ என, பதிலளித்தார்.

சீனா – இந்தியா இடையேயான பொருளாதார வளர்ச்சி விகித வித்தியாசத்தை கணக்கிட்டால், ‘நம்மால் சீனாவை எட்டிப் பிடிக்க முடியாது’ என்பதே நிபுணர்களின் கருத்து. ஒரு வேளை சீன பிரதமர் லி கியாங் போன்ற தெளிவான சிந்தனை உடைய, சீன தலைவர்கள் அதற்கு காரணமாக இருக்கலாம்.

சிக்சர்களுக்காக எழுந்த, இந்திய இளைஞர்களின் கைத்தட்டல் மற்றும் விசில்களின் ஓசையில், லி கியாங் சொன்ன பதில் ஒரு வேளை, இந்திய ஊடகங்களில் அமிழ்ந்து போயிருக்கலாம். ஆனால், ஐ.பி.எல்.,லின் நிஜம், அவ்வப்போது வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது.

ஐ.பி.எல்., தொடரை பொறுத்தவரை, கலாசார சீரழிவு, ஆபாச நடனம், ‘மேட்ச் பிக்சிங், ஸ்பாட் பிக்சிங்’ போன்ற அப்பட்டமான விளைவுகளை மட்டுமே நாம் அறிகிறோம்; ஐ.பி.எல்., ஏற்படுத்தும் மறைமுக எதிர்வினைகள் பற்றி, நாம் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை.

ஐ.பி.எல்., நடக்கும் இரு மாத காலங்களில், ஈயடிக்கும் வணிக நிறுவனங்கள் ஏராளம். வணிக வளாகங்கள், கண்காட்சிகள், ‘தீம்’ பார்க்குகள், நுாலகங்கள், அறிவியல் கருத்தரங்குகள் என எல்லாவற்றிலும், ஆட்களின் வருகை குறைந்து போய் விடுகிறது.

கோடைகால விடுமுறையை, மாணவர்களை பயனுள்ள வகையில் கழிக்க விடாமல் செய்யும், ஐ.பி.எல்., தொடர், இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான இளைஞர்களின் ஆக்கப்பூர்வமான நேரத்தை கபளீகரம் செய்கிறது.

மேலும், பின்னிரவு வரை நடக்கும் கிரிக்கெட் ஆட்டத்தால், மக்களின் மறுநாளைய பணிகள் சீர்குலைகின்றன. ஒரு சிலர் கோடி கோடியாக சம்பாதிப்பதற்காக, ஒட்டு மொத்த நாட்டு மக்களையே ஆண்டுதோறும், இரு மாத காலம் ஐ.பி.எல்.,லுக்கு அடிமையாக்கி சுரண்டுவது, அதர்மம் மட்டுமல்ல, சட்ட விரோதமானதாகும்.

சினிமா மற்றும் ‘டாஸ்மாக்’ போதையில் சிக்காத வெகு சில இளைஞர்கள் கூட, ஐ.பி.எல்., போதைக்குள் அகப்பட்டுக் கொண்டிருப்பது நாட்டுக்கு நல்லதல்ல. சுவாமி விவேகானந்தரும், டாக்டர் அப்துல் கலாமும் பெருமதிப்பு வைத்திருந்த இந்திய இளைஞர்களை குட்டிச்சுவராக்கும் கிரிக்கெட் உள்ளிட்ட எந்த போதையையும், நாம் அனுமதிக்கக்கூடாது!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button