கதைகள்

எண் வலிச் சாலை (வரலாற்றுப் புனைவு) சிறுகதை – 11 – அண்டனூர் சுரா

சுத்தம்! சுத்தம்!

மாமன்னர் மார்த்தாண்ட வர்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் பிறகுஅரண்மனை வளாகம், மாமணிமண்டபம், கோட்டை, கொத்தளம், வாயில்கள்,.. யாவும் கூட்டிப்பெருக்கி ஒரு தூசியோ துரும்போ இல்லாத துடைத்தெடுத்த சுத்தத்தில் இருந்தது.இதைவிடவும் படுசுத்தமாக இருந்தது சமஸ்தானத்தின் கஜானாதான்!

கிடங்கிலிருக்கும் தானிய இருப்பைக் கூட்டியள்ளினால் பதக்குத் தேறாது. ஒரு வாரகாலம் கொண்டாடு, கொண்டாடெனக் கொண்டாடித் தீர்த்த மன்னரின் பிறந்த நாள்கொண்டாட்டத்தில் கொடுக்க, வழங்க, வாறியிறைத்ததில் கஜானா படுசுத்தம்!கஜானாவை மீண்டும் நிரப்ப வேண்டிய பொறுப்பு சமஸ்தானத்தின் திவான் டி.ஆர்.பார்த்தசாரதி அய்யங்கார் தலையில் வந்து விழுந்திருந்தது. திவான், மார்பின் குறுக்கேஓடிக்கிடந்த பூணூலை விரல்களால் நீவி விட்டுக்கொண்டு குடுமியை அள்ளி முடிந்துகொண்டுகஜானா குறித்தும் அதை எப்படி நிரப்பலாமென்றும் சிந்திக்கலானார். ஒன்றைக் குறித்துபலவாறு பலகோணத்தில் சிந்திப்பது அவருக்குப் பிடித்தமான ஒன்று. சிந்தித்தலும் சிந்தித்தல்நிமித்தமுமே அவரது தொழில், பணி எல்லாம். மன்னர் பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்து,உல்லாசப் பயணமாகக் குளிர்தேசம் சென்றிருக்கிறார். அவர் தேசம் திரும்புவதற்குள்கஜானாவை நிரப்பியாக வேண்டிய அவசரகதிக்கு வந்திருந்தார்.

மன்னரின் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு யாரையும் எங்கேயும் எப்பொழுதும்சந்தித்து விட முடியும் என்கிற அதிகாரக்குவிவு அவரிடமிருந்தது. இந்த அதிகாரத்தைப்பயன்படுத்தி வைஸ்ராயையோ, மைசூர் மகாராஜாவையோ மரியாதை நிமித்தமாகச் சந்தித்துகடன் கோரலாமென நினைத்தார். ஆனால் இதற்கும் முன்பு அவர்களிடம் வாங்கிய கடன்,கடனுக்கு வட்டிகட்டாத சுமை அவர் நினைத்து வைத்திருந்த யோசனையை மடை மாற்றியது.வேறென்ன செய்யலாமென யோசிக்கையில்தான் இருவழிப் பாதையை எட்டுவழிப் பாதையாகமாற்றலாம் என்கிற யோசனை அவருக்குத் துளிர்த்தது.‘திருவிதாங்கூர் சமஸ்தான அரண்மனைக்கும் – பத்மநாபர் கோவிலுக்கும் இடையிலானபாதையை அகலப்படுத்தி எண்வழிப் பாதையாக மாற்றப்படும்…’ என்கிற கருத்துருவைஅமைச்சரவையில் சொன்னதும் அவை சச்சரவில் அமிழ்ந்தது.

‘இதற்கான தேவை என்ன வந்தது? அதுவும் நான்கு வழிப் பாதையாகக் கூடஇல்லாமல், எட்டுவழிப் பாதை?’ அனந்தராமன்தான் இதை முதலில் கேட்டார். மூத்தஅமைச்சர் என்பதால் அல்ல. மக்களின் மீதிருந்த நெருக்கத்தால் அவர் அப்படியாகக்கேட்டிருந்தார். திவான் பாதையை அகலப்படுத்தும் கருதுகோளை முன்மொழிந்ததும்அனந்தராமனுக்கு மக்களின் பீழையுடன் சேர்ந்து வழியும் கண்ணீரின் சுரந்தமுகம் கண்முன்னேநிழலாடியது.

திவான், அதிகம் பேசுபவர் அல்ல. நான் முன்மொழிவதை வழிமொழிவது ஒன்றேஉங்கள் வேலை எனச் சொல்வதைப்போல அவரது வீற்றிருத்தல் இருந்தது. அவரதுகேள்விக்குத் திவான்தான் பதில் சொல்லவில்லையே தவிர அவருக்குப் பதிலாக மற்றஅமைச்சர்கள் அவரது குரலில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

‘ பயணத்தை இலகுவாக்க…’

‘ யாருடைய பயணத்தை?’

‘ மன்னரின் பயணத்தை…’

எளிதில் அவிழ்க்க முடிந்த கேள்விக்கு மன்னர் என்கிற பதத்தை இலகுவாகப்பயன்படுத்திவிடுபவர் திவான். மன்னர், விதி இவ்விரு சொற்களும் அவரை எந்தவொரு சதுரபிரச்சனையிலிருந்தும் பல நேரம் விடுவித்திருக்கின்றன. திவானின் பதிலில் மன்னர் என்கிறபதம் சேர்ந்ததும் அனந்தராமன் பக்கமாக நின்றிருந்த ஓரிருவர் திவான் பக்கமாகச் சாய்ந்ததைக்கண்டு பலரும் சிரித்தார்கள். சற்றுமுன் கேள்விகளாகத் திறந்திருந்த பலரின் வாய்அவர்களையும் அறியாமல் மூடிக்கொண்டது. மேல் உதட்டிற்குள் கீழுதடு பூட்டாகபூட்டிக்கொண்டது.

அமைச்சு சொற்படி ஆட, அசைய வேண்டிய இந்தத் திருவிதாங்கூர் சமஸ்தானம்திவான் விரல்படி அசைவதைப் பார்க்கையில் அனந்தராமனுக்கு நாசியும் காதுகளும் ஒரு சேரவிடைத்தன.‘ அத்தனை இலேசு காரியமா இது?’‘ அபசகுணமாகக் காரியமென்று சொல்லாதீர்கள். வேலையென்று சொல்லுங்கள்’

‘ சரி, இலேசான வேலையா இது?’

‘ மன்னரின் உத்தரவை அமல்படுத்துவது ஒன்றே நம் வேலை’

‘ வேலை மட்டுமல்ல, கடமையும் கூட’ திவானின் பதிலுக்கு ஒருவர் ஒத்தூதினார்.

‘ இதனால் மக்களின் கதி?’

‘ அதை மன்னர் பார்த்துக்கொள்வார்…’

நீள வேண்டிய விவாதம் மறுபடியும் தொண்டைக்குள் சுருண்டு படுத்துக்கொண்டது.மன்னர், அரண்மனைக்குள் உலா வருகையில் மக்களின் பாடு கொண்டாடும் படியாகஇருக்கிறது. வெளிதேசம் சென்றுவிட்டால் வேலைகளும் சில காரியங்களும் அதிரடியாகநடந்தேறுகின்றன. இது நேற்று இன்றில்லை. காலம் காலமாக நடந்தேறி வரும் நிகழ்வு.

மக்கள் குறித்த பிரச்சனையை இதயத்திலிருந்து எடுத்தாள வேண்டும். இதயம் எதையும்தெளிந்தெரிந்து பார்க்கும். ஆனால் திவான் மூளையிலிருந்து எடுத்தாண்டார்.அனந்தராமன் மனதிற்குள் தற்போதிருக்கும் இருவழிப் பாதையையும் இருபுறமிருக்கும்கட்டிடங்களையும் வேளாண்மை நிலங்களையும் தராசு கொண்டு பார்த்தார். எத்தனை மாடமாளிகைகள், மணிவாய்ச்சுவர்கள். மரங்களென்ன, செடி, கொடிகளென்ன,.. இத்தனையும்தவிடுபொடியாகப் போவதை நினைக்க நெஞ்சு கனகனத்தது.

‘ அதையும் மன்னர் பார்த்துக்கொள்வார்…’

‘ எதையும் மன்னர் பார்த்துக்கொள்வார்…?’

‘ இப்பொழுது எதையோ மனதிற்குள் நினைத்தீரே, முகம் சுழித்தீரே, அதைத்தான்சொல்கிறேன்…’ திவான் சொன்னது வேடிக்கையாகவும் விரோதமாகவும் இருந்தது.‘ எல்லாவற்றையும் மன்னரே பார்த்துக்கொள்வார் என்றால் இதற்கு ஏன் இந்த கூடுகை,அவை, ஆலோசனை எல்லாம்…?’

‘ முன் மொழிந்தேன், வழி மொழிய வேண்டாமா?’

‘ தூக்குக்கயிறுக்கு முத்தமிடச் சொல்கிறீர்கள்…’

அனந்தராமன் கேள்விக்குத் திவானால் ஒரு பதிலும் சொல்ல முடிந்திருக்கவில்லை.அமைதியே உருவமென வீற்றிருந்தார். ஆனால் அவர் கொண்டிருந்த உறுதிபாட்டில் சற்றும்தளர்வு இருந்திருக்கவில்லை.எப்படி இவரால் இப்படியான முடிவை எடுக்க முடிகிறது? அவரது இதயமென்னஇரும்போ! அவர் மண்டையில் சுரக்கும் சுரப்பு ஏன் இதயத்தில் சுரக்கவில்லை? பெரியமூளைக்காரன்! சிறிய இதயக்காரன்!. இமைகளைச் சுருக்கி உதட்டைச் சுழித்தார்.‘பத்மநாபர் கோவிலுக்கும் திருவிதாங்கூர் அரண்மனைக்கும் இடையிலான இருவழிப்பாதையை அகலப்படுத்தப் போகிறார்களாம்,..’ செய்தி காற்றில் வெடித்து அரளி விதையெனமக்களின் காதுகளில் விழுந்தது.

கோவிலும் அரண்மனையும் என்னே அழகு! அக்கோவிலின் தேரடிப் பாதை எத்தனைபேரழகு!. அழகு மாடங்கள், வணிக வளாகங்கள், சத்திர வாயில்கள்,…யாவும் பார்க்கக்கண்கொள்ளாது. பேரழகை இடித்து அழகாக்குவதா? இடித்து அகலப்படுத்தினால் இந்த வீதிஎப்படி இருக்கும்? ஆம், கிழவி உதட்டுச்சாயம் பூசியதைப் போலிருக்கும்! அவருக்குச் சிரிப்புவந்தது. கூட கோபமும் வந்தது.

கடைகள் எத்தனை? கண்ணிகள் எத்தனை? குடியும் வாசலும் அரங்கும் கூடமும்

எத்தனை எத்தனை? இவ்வளவையும் தூளாக்கி, கூழாக்கி தரைமட்டமாக்குவதா? இதைமக்களால் ஏற்க முடியுமா? காதுகொண்டு கேட்கும் எனக்கே இப்படி!, கண்கொண்டு பார்க்கும்அவர்களுக்கு? உடை, ஆகார ஆதாரங்களை இழந்து நிற்பவர்களுக்கு? வாழ்வாதாரத்தைத்தொலைத்து நிற்பவர்களுக்கு? அனந்தராமன் யோசிக்க அவருக்கு மூளை வியர்த்தது.

திவான் எந்தவொரு விமர்சனத்தையும் உள்வாங்கிக்கொள்ளாமல் அடுத்தகட்டவேலையில் இறங்கினார். தண்டோராக்காரனை அழைத்து செய்தியை எட்டுத்திக்கும்அறிவிக்கச் சொன்னார்.

‘ இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் இராஜாதிராஜ ராஜகம்பீர மாமன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உத்தரவின்படி, அரண்மனைக்கும் பத்பநாபர்கோவிலுக்கும் இடையிலான பாதையை அகலப்படுத்த – இருபுற கடைகளும் இடிக்கப்படுமெனஅறிவிக்கப்படுகிறது..’

தண்டோராக்காரனின் அறிவிப்பு செவிடன் காதிலும் தீப்பழமென விழுந்தது. கோடைவெயில், அமில மழை, பிணங்கள் பிளக்கும் படியாக பொங்கும் பூகம்பம் இத்தனையும் ஒருசேர நிகழும் துக்கக்கணத்தை விடவும் அந்த ஓர் அறிவிப்பு துயரக்கனலாக இருந்தது. புற்றைஇழந்த எறுப்புகளைப் போல மக்களின் மொய்ப்பு. கொய்யோ, மொய்யோ…வெனக் கரைதல்.தேரடித் தெரு சுடுநீரும் மென்பாதமென இருந்தது. மரங்கள், செடி, கொடிகள் ஆடாதுஅசையாது அச்சமுற்று நின்றுகொண்டிருந்தன.

‘மூடர் யோசனை, முரட்டுச் சிந்தனை!’ அனந்தராமன் திவானை நினைத்துதொண்டைக்குள் புழுங்கினார்.ஒரு வழிப்போக்கன் தன் பெண்டு, தன் பிள்ளையென அவன் போக்கில்நடந்துகொண்டிருந்தான். அவனை வழி மறித்துக் கேட்டார் அனந்தராமன் ‘ இருவழிப் பாதைஎட்டு வழிப்பாதையாகப் போகிறதாமே…’

‘ என்னே அப்படியா! மன்னர் என்னவோ செய்துவிட்டுப் போகிறார். நமக்கென்ன..’ இதைஎத்தனை வேகமாகச் சொன்னானோ, அத்தனை வேகமாக அவனது கால்கள் நடை கட்டின.அவனை நினைக்கையில் அனந்தராமனுக்கு மூக்கு வியர்த்து பற்கள் வியர்த்தன. என்னேவேடிக்கை மனிதனடா இவன்!.

‘ தெரியுமா செய்தி, எட்டுவழிப் பாதையாமே…’

‘அப்படியென்றால் ராஜவீதியில் எட்டுத்தேர்கள் ஒரு சேர வரப்போகிறது எனச்

சொல்லுங்கள். அழகே அழகுதான். பார்க்கும் கண்களுக்கும் வியர்க்கும்..’

இவன் சரியான கேலி மனிதனாக இருப்பான் போலும்!

‘ கேட்டீரா சேதி….’

‘ நல்ல செய்திதானே, மதராஸப் பட்டினத்தைப் பார்த்தீரா, பிரிட்டிஷார்எப்படியெல்லாமோ பாதையை அகலப்படுத்தியிருக்கான். அழகுப்படுத்தியிருக்கான். நம்ம தேசம்

அப்படியாக வேண்டாமா?’

‘ நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’

 

‘மன்னர் செய்யும் எதுவும் சரியாகவே இருக்கும்…’ சொன்னவன் நிற்கவில்லை.திரும்பிப் பார்க்கவில்லை. நமக்கு ஏன் வம்பு, பெரிய இடத்து வீம்பென பாதையிலிருந்து விலகிஅவனொரு பாதையில் நடந்தான்.

அனந்தராமன் எத்தனை பேரிடமோ கேட்டுவிட்டார். திவான் வாக்கு ஒன்றே சித்தன்வாக்கென இருந்தது. அவரால் பாம்பாட்டிச் சித்தரை நினைக்காமல் இருக்கமுடியவில்லை.‘உளியால் செய்த சிற்பத்திற்கு உணர்ச்சியென்று ஒன்றில்லை ஆடு பாம்பே, நீ ஆடுபாம்பே!’நாக்கு தொண்டை வரைக்கும் முணங்கினாலும் கோபம் இமைகள் தாண்டி காது வரைக்கும்நீண்டது.

திவானுக்கு மன்னன் மீது குருபுத்தி. மக்கள் மீது குறுக்குப்புத்தி! பற்களைக்கடித்துக்கொண்ட அனந்தராமன் சாலையின் விளிம்பில் வேரறுகப் போகும் ஒரு மரத்தடியின்கீழ் அமர்ந்தார்.

அவரை நோக்கி வந்திருந்தார் ஒரு வயோதிகர். , ‘ அன்ந்தராமன், நான்தான் தெரியாமல்கேட்கிறேன்; என்றைக்கு டி.ஆர்.பார்த்தசாரதி அய்யங்கார் திருவிதாங்கூர் சமஸ்தான திவானாகஉட்கார்ந்தாரோ அன்றைய தினமே நிதியிருப்பு அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது.

கஜானாவைக் கூட்டி அள்ளினால் கைப்பிடித் தேறாது. கையில் இருப்பில்லை. கஜானாவில்நெல் இல்லை. பிரிட்டிஷாரிடம் வாங்கிய கடனுக்கு வட்டிகட்ட ஒரு வழியில்லை. எதிலும்எல்லாவற்றிலும் வரி, வரி மேல் வரி, வரிக்கு வரி, முலைக்கு வரி, தீட்டுத் துணிக்கு வரி,மீசை மயித்துக்கும் வரி,… இத்தனை வரியிலும் சமஸ்தானத்தின் கஜானா வயிறு துவைத்துக்காய்கிறது. இந்த நிதிச்சுமையில் சாலையை அகலப்படுத்தத்தான் வேண்டுமா…?’

அவரது கேள்வி அனந்தராமனுக்கு இதமாக இருந்தது. தான் எத்தனையோ பேரிடம்கேட்டுத் திரிந்தக் கேள்வியை அவரைப் பார்த்து ஒருவர் கேட்டிருந்தார்.

‘ மன்னர் பார்த்துக்கொள்வாராம்…’

‘ கூகை மனிதர்கள்’

‘ மன்னரையா சொல்கிறீர்கள்?’

‘ மன்னருக்கு ஊர்ச்சுற்றவே நேரமில்லை. இதைப் பற்றியெல்லாம் யோசிக்க அவருக்குஏது நேரம், திவானைச் சொல்கிறேன்…’

‘ மனிதர்கள் என்றீரே’

‘ அவருக்குக் காது குடைந்து விடும் மந்திரிகளையும் சேர்த்துச் சொல்கிறேன்…’அனந்தராமன் தொண்டைக்குள் மன்னனும் திவானும் ஒரு சேர உருண்டார்கள்.அச்சாலையில்தான் எத்தனை கடைகள்! கோயிலின் அழகை வரைந்து செல்லும்கைவினைப் பொருட்களின் கடை, வெங்கலக்கடை, பாத்திரக் கடை, சில்வர், தட்டுமுட்டுச்சாமான்கள், தேங்காய் சூடம் பத்தி பூக்கடைகள், வாடகை வேட்டிக் கடைகள், ஜவுளிக்கடை,

அகல் விளக்கு, குத்துவிளக்கு கடைகள், நெய், வெண்ணெய்க் கடை, வெற்றிலைக் கடை,அடுக்கடுக்காக அடைசலான கடைகள்…இது தவிர சாலையோர நடைபாதை கடைகள் வேறு.ஒரு பாட்டி ஒரு மூங்கில் கூடையில் பூக்களை வைத்துக்கொண்டு முழத்தால்அளந்துகொண்டிருந்தாள். ஒரு கிழவர் விசிறி மட்டைகளை நட்சத்திரமாக விரித்து கூப்பாடுபோட்டுக்கொண்டிருந்தார். ஒரு இளைஞன் கற்கண்டு விற்றான். மற்றொருவன் பானகம்விற்றான். சிறுவர் சிறுமிகள் நெய், வெண்ணைய் விற்றுக்கொண்டிருந்தார்கள்.சாலையின் ஒதுக்குப் புறமாக நின்று கொண்டு ஒரு கிழவி மோர்விற்றுக்கொண்டிருந்தாள்.இன்னொரு கிழவி அதையே தானமாகக் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

நவதானியம் கடையொன்று இருந்தது. அதற்கும் அருகில் மண்பானைக் கடை, மரப்பாச்சிபொம்மைக் கடை. ஒருவன் சாலையின் விளிம்பில் துண்டை விரித்து கிருஷ்ணஅவதாரத்தை பென்சிலால் வரைந்துகொண்டிருந்தான். மற்றொருவன் அதை எடுத்து கூவிவிற்றுக்கொண்டிருந்தான். யானைக்கான தீனிக்கடை அச்சாலையில் ஒரு பக்கக் கடையாகஇருந்தது. அதே கடையில் குதிரைக்கான கொள்ளும் இருந்தது.எள்ளுக்கென்றே தனிக்கடை. நெல் ,அரிசி, குருணை, தவிடு என ஒவ்வொன்றுக்கும்ஒவ்வொரு கடை இருந்தது. இத்தனைக்குமிடையில் பெரிய்ய்ய கடையொன்று இருந்தது.அக்கடை, ஒரு வீட்டின் திண்ணைக் கடையாக இருந்தது. எங்கும் சுற்றிலும் வீதியெங்கும்கடைகள், கடைகள், கடைகடையாய் கடைகள்.

அன்றைய தினம், கோவில் திறக்கப்படாத நாள் என்பதால் கோவிலின் தேரடிப் பாதைமக்கள் நடை உடையில்லாமல் துடைத்துக் காய்ந்துகொண்டிருந்தது. அந்நாளில்தான்நான்கைந்து பேர் நிலம் அளக்கும் கண்ணியால் குறுக்கும் நெடுக்குமான தெருவைஅளந்துகொண்டிருந்தார்கள். அளவைகள் இரு பக்க திண்ணையைத் தாண்டி, முற்றத்தைத்தாண்டி எல்லையைத் தாண்டி குறிகளாக உள்ளே வெளியே விழுந்துகொண்டிருந்தன.குழந்தையின் முகத்தில் விழும் கிழட்டுச் சுருக்கம் போல அக்குறியீடுகள் அத்தெருவிற்குசற்றும் பொருத்தமில்லாமல் இருந்தன. மக்கள் தடுக்க வேண்டிய கையை வாயிலும்தலையிலும் வைத்துக்கொண்டு துக்கப் பார்வையால் பார்க்கவும் வெறிக்கவுமிருந்தார்கள்.

அங்கே, இங்கேயென சுண்ணாம்புக் கட்டியினாலான குறிகள் விழுவதாக இருந்தன.முன்னிட்ட குறி அழிய, அடுத்தக் குறி அதன் உள்ளே நுழைந்து குறியிடுவதாக இருந்தன.கடையைத்தாண்டி திண்ணைக்குள், வீட்டிற்குள், வீடு தாண்டி, வாசலென,..எங்கும் அளவீடுகள்.கன்னி அளவை சங்கிலிக்கு மாறியது. சங்கிலியின் அளவு அகலக்கால் அளவானது. கால்அளவை, கண் அளவை மிரட்டல் அளவையில் வந்து நின்றது.

‘அய்யோ! என் வீடு. அய்யகோ! என் கூடு..’.

‘என் வாசல் போகிறதே, என் வாயிலும் போகிறதே…’ மக்களின் மனக்கொதியில்

அமிலக் கொதிப்பு.

‘ வியர்வையில் பூத்த கட்டிடம் இது. எங்களை விட்டு கை கழுவ நிற்கிறதே..’‘ பத்மநாபா, நீயே எல்லாத்தையும் எடுத்துக்கோ, என் உயிரையும் சேர்த்து எடுத்துக்கோ.இதோ என் கணவன், இதோ என் பிள்ளைகள், எல்லா உயிரையும் சேர்த்து எடுத்துக்கோ…’தலைவிரிகோலமாக கோவிலை நோக்கி ஓடினார்கள்.

துன்பத்துள் துன்பம்! ‘கடவுளே, இது உனக்கே அடுக்குமா’ தலையில்அடித்துக்கொண்டார்கள். சுவரில் மோதிக் கொண்டார்கள். வாய் பேச வேண்டியதைக் கண்கள்பேசுகின்றன. கண்கள் பார்க்க வேண்டியதை கண்ணீர்த்துளிகள் பார்க்கின்றன.இத்தனை ஆண்டுகாலம் கட்டிக்காத்த இத்தெருவும் வீடும் கடையும் இயந்திரத்தின்கோரப் பிடிக்கு உள்ளாகப் போகிறதே, தகதகக்கும் தவிப்பு. பதபதவெனப் பதைப்பு. கைகள்கைகளைப் பிசைகின்றன. கால்கள் கால்களை மிதிக்கின்றன.

‘மக்களின் வயிற்றில் உங்கள் கால்கள் படத்தான் வேண்டுமா, மன்னன் கால்கள் என்னஅத்தனை புனிதமா?. அரண்மனை மேயவும் குடிசைகள் செரிக்கவுமா?’ மக்கள் மனதில் காந்தல்வலி. ஒவ்வொருவரின் முகத்திலும் மின்வெட்டுக் கோபம். கோபம் நல்லதுதான்,ஒன்றுதிரண்டால்? ஒன்றுதிரள வேண்டுமே! ஆனால் அவர்களின் கோபம் நாலாபுறமும்சிதறின.

‘ பின்னே, சாலையை விரிவாக்க வேண்டாமா, மக்கள் பெருக வீதி பெருக்க

வேணாமா?, சரியான முடமூளைகள்..’

‘ யாரைச் சொன்னாய் முடமென்று?’

‘ எட்டுவழிச்சாலையை எதிர்ப்பவர்களைச் சொல்கிறேன்…’

‘ என் வீடு அஸ்தியாய் கரையவும், உன் வீடு அஸ்திவாரங்கொண்டு நிற்கவுமா?’‘ நம் சமஸ்தானத்திற்காக, நம் மன்னருக்காக உன் வீட்டை விட்டுக்கொடுத்தால்என்னவாம்..?’‘என்ன சொன்னாய், என்னே சொன்னாய், என்னையா சொன்னாய்…’ கோபம் அவளைநோக்கித் திரும்பியது. தலையில் தலையில் அடித்துக்கொண்டாள். வாயிலும் வயிற்றிலும்குத்திக்கொண்டாள். மக்கள் முகத்தில் துக்கக்காடு. தூக்கணாங்குருவிக் கூட்டை குரங்குபிய்த்துவிட்டதைப் போல கையறு நிலையில் நின்று, நிற்க முடியாமல் நடந்து, நடக்கமுடியாமல் அமர்ந்து….‘ நாட்டிற்காகத்தானே இந்த எட்டு வழிச் சாலை…’

‘ என்ன சொல்கிறீர்கள்?’

‘ ஆமாம், சாலை அமைத்தால் நிதி கூடும்..’

‘ சாலைக்கும் நிதிக்கும் என்ன இருக்கிறது…?’

‘ நிறைய இருக்கிறது…’

சாலையை அளக்க வந்தவர்கள் வானத்தையும் சேர்த்து அளக்கிறார்கள். ஒவ்வொருஅளவையிலும் மக்களின் கனவு சரிகிறது. அளவைக் கண்டு ஒரு தாய் வெடித்தழுகிறாள்.

அவளைக் கண்டு ஒரு குழந்தை அலறுகிறான். ஆம்பளைகள் என்ன செய்வதென்றுதெரியாமல் நெஞ்சுக்குள் புழுங்கி, குமுறி கவலையில் தேய்கிறார்கள்.

‘எட்டு வழிப்பாதை கூடாது..’.

‘சாலை விரிவாக்கம் கூடாது….’

அவரவர் சேலையை உருவி சாலையில் கிடத்தி உட்காரும் படலம் நடந்தேறியது.வீட்டுக்குள் அடைந்து கிடந்த பெண்கள், சிறுமிகள் அலறியடித்து வீதிக்கு வருகிறார்கள்.மக்களின் ஓட்டம் ஊசலாட்டமாக இருக்கிறது.சாலையின் இருபக்கக் குடியிருப்புகளையும் அதிரடியாக இடிக்கும் நிலைக்கு வந்துநின்றது சமஸ்தானம். திவானின் இதயம் துருஇரும்பானது. மூளைக்குள் சிலந்தி வலைபின்னியது. இயந்திரத்தை விடவும் கொடூரமாக முகத்தை வைத்துக்கொண்டிருந்தஆயுதபாணிகள் வீதியில் குவிந்தார்கள். வெட்ட, இடிக்க, அழிக்க, தோண்ட,அகலப்படுத்த,…எனக் கண், காதற்ற கருவிகள் குவிந்தன.

‘ ஒரே ஒரு இரவு அவகாசம் தாருங்கள்…’ மக்கள் ஓடிபோய் திவானின் கால்களில்விழுந்தார்கள். கண்ணீர் வடித்துக் கெஞ்சினார்கள்.திவான் முதலில் பதுங்கினார். பின்னர் பணிந்தார். ‘ ஒரே ஒரு இரவு. சரி தருகிறேன்…’மறுநாள் பொழுது விடிந்தது,அரண்மனைக்குள் குவியல் குவியலாக தங்க நகைகள். வெள்ளிக் குன்றுகள். மக்கள்வெளியே இலையுதிர்க் காடாக நின்றார்கள். வாய் உடைந்த பானையாக, மூக்கு உடைந்தசிற்பமாக,.. அவர்களின் காது, மூக்கு, கழுத்துகள் மூளியாகியிருந்தன.எத்தனை ஆண்டுகால சேமிப்போ; எத்தனை தலைமுறை உழைப்போ; அவர்களின் கை,கால், கழுத்தில் கிடந்த நகைகள் அரண்மனைக்குள் வந்து விழுந்திருந்தன. ஏணியில் ஏற்றிவைத்தது; பரணியில் பத்திரப்படுத்தி வைத்தது; சுருக்குப் பைக்குள், உப்புப்பானைக்குள், நகைநட்டு நாணயங்கள் சில்லறையாக; முடிச்சுகளாக; கொத்துகளாக; சரம் சரமாக; அணிஅணியாக,…அரண்மனைக்குள் கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.

சாட்டை சலசலங்க, சதுரமணிகள் கிணிகிணுங்க ரதத்தில் வந்திறங்கினார் திவான்.அவரால் அரண்மனைக்குள் நுழைய முடியவில்லை. நகைகள், பவளங்கள், பட்டுகள்,முத்துகள்,.. ஆங்காங்கே சிதற, உருள, தெறித்துக்கிடந்தன. பூக்கள் மீது உருள வேண்டியவண்டிச் சக்கரங்கள் நகைகள் மீது உருண்டன. பொன் உடைந்து, நசுங்கி சக்கரத்தின்விளிம்பில் பிதுங்கின. மூச்சு நிற்கப்போகும் பெருநோயாளியின் நாசியைப் போல வண்டியின்பேரரவம்.

ஒரு தாய் ஓடி வந்தாள். ‘இதோ இது என் தாலி, என்னிடமிருக்கிறது இது ஒன்றுதான்!படக்கென அறுத்து அரண்மனைக்குள் எறிந்தவள் கண்ணீர் மல்கச் சொன்னாள் ‘எனக்கு என்குடிசை வேணும்..’.மற்றொரு தாய், ‘இது என் பேரனின் அருணாக்கொடி, எனக்கு என் குடில் இடிபடாமல்வேணும்’.‘ இது பிறக்கப்போகும் என் பிள்ளைக்கு வாங்கிய தாயத்து’, ‘இது எனது மெட்டி..’, ‘ இதுஎன் காதலன் எனக்கு அணிவித்த கணையாழி..’

அறுபடும் சத்தமும், விட்டெறியும் சத்தமும் ஒரு சேரக் கேட்டன. பொன்குன்றுமெல்ல வளர்ந்து மலையாகிறது. மலையில் தாலிகள், பொட்டுக்காசுகள் விழ மலை சரிந்துஓடையாக ஓடுகிறது.அரண்மனை, வாசல், முற்றமென…எங்கும் பொற்குவியல்கள். நகைகள் மின்ன, மினுங்க,அணியாக, சரமாக ஒழுகி ஓடுவதாக இருந்தன. திவான், தன் மூளையை மெச்சிக்கொண்டார்.அடுத்தக் கொண்டாட்டத்திற்குத் தயாராக தன் உடம்பைச் சாக்குமூட்டையைப் போலக்குலுக்கிக் கொண்டார்.

‘ திவான்’

உயிரை நனைத்த ஒரு கரகரப்புக் குரல்.அழைப்பு வந்த திசையை நோக்கிப் பார்வையைத் திருப்பினார் திவான். அவர் முன்னேஒரு வயோதி நின்றுகொண்டிருந்தாள். அவளது இரு காதுகளிலும் தோள் வரைக்குமாகத்தண்டட்டிகள் தொங்கிக்கிடந்தன. அதை வெடுக்கெனப் பறித்து குறி பார்த்து எறிந்தாள். அவள்எறிந்த நேருக்குத் திவானின் புருவ நுனிகளின் கூடுவாயில் இருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *