தைவான் நீரிணையின் எல்லையைக் கடந்த 10 சீன விமானங்கள்….எச்சரிக்க விமானங்களை அனுப்பிய தைவான்
தைவான் நீரிணையின் எல்லைக்கோட்டை 10 சீன விமானங்கள் கடந்திருப்பதாகத் தைவானின் தற்காப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.
அது இருதரப்புக்கும் இடையிலான அதிகாரபூர்வமற்ற எல்லை.
தைவானுக்கு அருகே பெய்ச்சிங் அதன் ராணுவ நடவடிக்கைகளைத் தொடரும் வேளையில் அந்தத் தகவல் வந்துள்ளது.
சீனாவின் 9 போர்விமானங்களும் ஒரு ராணுவ ஆளில்லா வானூர்தியும் எல்லைக்கோட்டைக் கடந்ததாக அமைச்சு கூறியது.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 6 மணி வரையிலான 24 மணி நேரக் காலக்கட்டத்தில் அவை அங்கு பறந்ததாக தைவான் சொல்லிற்று.
அங்கிருந்து சென்றுவிடும்படி சீன விமானங்களை எச்சரிக்கத் தைவான் அதன் விமானங்களை அனுப்பியது.
ஏவுகணைக் கட்டமைப்புகளும் அவற்றைக் கண்காணித்ததாகத் தைவானின் தற்காப்பு அமைச்சு கூறியது.
சீன ஆகாயப்படை அண்மை ஆண்டுகளில் தைவானுக்கு அருகே கிட்டத்தட்டத் தினசரி விமானங்களை அனுப்புவதாகத் தைப்பே குற்றஞ்சாட்டியுள்ளது.
பெரும்பாலும் தனது ஆகாயத் தற்காப்பு வட்டாரத்தின் தென்மேற்குப் பகுதியில் அந்த ஊடுருவல் நிகழ்வதாக அது கூறுகிறது.
தைவான் அதிபர் அதிபர் சாய் இங்-வன் (Tsai Ing Wen) வரும் வாரத்தில் அமெரிக்க மக்களவை நாயகர் கெவின் மெக்கார்தியைச் (Kevin McCarthy) சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தச் சந்திப்பு நடந்தால் பதிலடி கொடுக்கப்படும் என்று சீனா எச்சரித்துள்ளது.
![]()