கதைகள்

வித்யாவுக்கு மூன்று அப்பாக்கள்!…. சிறுகதை – 4 …. அண்டனூர் சுரா.

இரண்டாவது அப்பா பற்றிய கதையைச் சொல்லிக்கொண்டிருந்தாள் சுகந்தி. இருவரில் எனக்கு பிடித்தது முதல் அப்பாதான் எனச் சொல்கையில் வித்யா சொன்னவளின் முகத்தை நின்று திரும்பிப் பார்த்தாள். இதைச் சொல்ல இவளுக்கேன் வெட்கமில்லை, என அலப்புறுவதைப் போல அவளது பார்வை இருந்தது.

வித்யாவின் முகம் அவளையும் அறியாமல் சுழிந்தது. அவளது முகச்சுழிப்பைச் சுகந்தி கவனித்திருக்கவில்லை. கவனித்திருந்தால், அனிச்சம் போல முகம் வாடியிருப்பாள். “ஏனடி முகம் சுழிச்சே?”, எனக் கேட்டு சண்டை பிடித்திருப்பாள்.

சுகந்தி சொன்ன இரண்டு அப்பாக்கள் குறித்து நினைக்கையில், வித்யாவுக்குச் சிரிப்பு வந்தது. அவளைச் சிரிக்கவிட்டால், சித்தி சீரியலில் டைட்டில் பாடலுக்குப் பின்னே சிரிக்கும் குழந்தையைப்போல சிரிக்கிறவள். முன் பல்வரிசை மொருதைக்குள் முட்டிய சிரிப்பை உதட்டுக்குள் அதக்கி தொண்டைக்குள் சிரித்தாள்.

“நெசமாவே ஒனக்கு ரெண்டு அப்பாவா..?” இரைக்கொத்தும் காக்கையைப் போல தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு கேட்டாள் வித்யா. அவளது முதுகில் ஒரு பக்கமாகப் புத்தகப்பை அணைந்து கிடந்தது.

சுகந்தி கையில் கூர்ப்பி வைத்திருந்தாள். அதற்குள் பென்சிலை நுழைத்து இரு விரல்களால் திருகியபடி நடையை நிறுத்தி கூர்ப்பியிலிருந்து பென்சிலை எடுத்து அதன் முனையைத் தடவிப் பார்த்தாள். கூர்ப்பு முறிந்திருந்தது.

“அதிகக் கூர்ம மழுங்கல், ஏ தாத்தா அடிக்கடி சொல்லும்” என்றாள் வித்யா. அவள் சொன்ன பழமொழியைக் கேட்டு சுகந்தியின் இமை நெற்றிக்கு ஏறியது. “ இதையே என் பாட்டி வேற மாதிரி சொல்லும்”

“ எப்படி?” சுகந்தி, கூர்ப்பிக்குள் பென்சிலை நுழைத்து எடுத்து வைத்தக் காலை அப்படியே நிறுத்தியவளாகக் கேட்டாள்.

“ ரொம்ப யோசிக்காதேடி, மூளைக் குழம்பிரும் “ இதைக் கேட்டதும் சுகந்தியின் புருவம் சுழிய முன் உதடுகள் சிரித்தன.

சுகந்தி பள்ளி முடிந்து வீடு திரும்புகையில் வெறுங்கை வீசி நடப்பவள் அல்ல. அவளது கையில் பென்சில், சார்ட், பரீச்சை அட்டை எதாவது இருக்கும். அன்றைய தினம், நடந்துகொண்டே பென்சிலைச் சீவியதில் கூர்ப்பு முறிந்து பென்சில் சித்திரக் குள்ளன் உருவத்திற்கு வந்திருந்தது.

“ இந்தப் பென்சிலை வாங்கிக் கொடுத்தது யார்?”

“ யார் வாங்கிக்கொடுப்பா, என் அப்பாதான்”

“எந்த அப்பா?”

இக்கேள்வியைக் கேட்ட வித்யா சுகந்தியின் முகத்தைப் பார்க்கவில்லை. முதுகில் ஒட்டிக்கிடந்த புத்தகப் பையை இறக்கி, அதற்குளிருந்த ஜாமன்டரி பாக்ஸைத் திறந்து, அவளது கூர்ப்பியை எடுத்து, சுகந்தியிடம் நீட்டினாள். “ இதுல சீவடி, கூர்ப்பு முறியாது”

சுகந்தி அதை வாங்கிக்கொள்ளவில்லை. குள்ளமாகியிருந்த பென்சிலை அவளது காது மடலில் சொருகிக்கொண்டவள் காதோர கதுப்பு முடிகளைக் காது மடலுக்கும் கீழாக இழுத்துவிட்டபடி இத்தனை

நேரம் நடந்திருந்த நடையின் வேகத்தைச் சற்றே கூட்டினாள். வித்யா உள்ளூர். அவளது வீடு கூப்பிடும் தூரத்தில் இருந்தது. சுகந்தி இரண்டு மைல் தூரத்திற்கு நடந்தாக வேண்டும்.

“ கேட்டேன், பதிலே சொல்லல”

“ என்னடி கேட்ட?”

“ இந்தப் பென்சில் எந்த அப்பா வாங்கிக் கொடுத்ததுனு கேட்டேனே?”

சுகந்தி, சற்றே யோசிக்கலானாள். பென்சிலின் கூர்ப்பு முறிந்துப்போனதை நினைக்கையில் அவளுக்கு இரண்டாவது அப்பா நினைவுக்கு வந்தார்.

“ ரெண்டு அப்பால்ல எந்தப்பா உனக்கு எல்லாம் வாங்கித் தருவாங்க?”

“ ரெண்டு அப்பாவுமேதான். ஆனா முதல் அப்பா வாங்கித்தருவது நல்லதா இருக்கும். இப்படியெல்லாம் கூர்ப்பு முறியாது”

இந்த முறை வித்யாவால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. பல் மொருதைக்குள் முட்டிய சிரிப்பை மறைக்க மேல் உதட்டை உட்புறமாகக் மடித்து கடித்துக்கொண்டாள். அப்படியும் அவளுக்கு இருமல் வருவதைப் போல சிரிப்பு வந்தது. காலடியில் முளைத்திருந்த திருநீற்றுப்பச்சிலையை துளசி என நினைத்துப் பறித்து வாய்க்குள் திணித்துக்கொண்டவள் முன் பற்களால் நறுக்,புறுக்கென கடித்தாள். சாறு மெல்ல தொண்டைக்குள் இறங்க துவர்க்க வேண்டியது கசக்கிறதேயென “இத்தூ” எனத் துப்பினாள். அவளது சிரிப்பைக் காணாது கடந்திருந்த சுகந்தி, துப்பியதைக் கவனிக்கச் செய்தாள்.

“ ஏனடி துப்பினே…?” சுகந்தியின் நாசித் துவாரங்களுடன் காது மடல்கள் விடைத்தன.

“ கசக்குதடி…”

“ சிரிச்சீயே….?”

வித்யாவின் இமைகள் விரிய விழிகள் உருண்டன. நாவால் உதடுகளை நீவிக்கொண்டவள், “ நீ சொல்றதக் கேட்டா, சிரிக்காம வேறென்ன செய்வா?” என்றாள்.

சுகந்திக்குக் கபம் கபமாக கோபம் வந்தது. வித்யாவை வெறிகொண்டு பார்த்தாள். “ உனக்கும் கூடதே ரெண்டு அப்பா, நானென்ன சிரிக்கவா செய்றேன்…”

வித்யாவின் பற்கள் நறநறத்தன. நாசியின் கோபம் உச்சந்தலைக்கு ஏறியது. எல்லாவற்றையும் எரிக்கக் கூடிய ‘வைச்வாநரம்’ நெருப்பைப்போல சுகந்தியை வெறிக்கப் பார்த்தாள். அவளது முகம் இருண்டு, கறுவுகொண்டெழுந்தது. “ எ..எ..என்னடி சொன்னே….?” அவளது விரல் நகங்கள் சுகந்தியின் கழுத்தை நோக்கிச் சென்றன.

“ ஆமாம், உனக்கும் கூடதான் ரெண்டு அப்பா “

வித்யா கோலும் கொடுக்குமாக வெறித்தாள். கோலோ, குச்சியோ எடுத்து அவளை விளாச வேண்டும் போலிருந்தது. அவளை அடிக்க காலிடத்தில் முளைத்திருந்த நித்தியக்கல்யாணி செடியை வேரொடு பிடுங்க முயன்றாள். எப்படி முயன்றும் அச்செடி கையோடு வருவதாக இல்லை. வேரிட மண்ணை அள்ளி, சுகந்தி மீது சாபமிடுவதைப் போல எறிந்தாள்.

“ என்னடி சொன்னே, என்னே சொன்னே…” அவளது இரு சடைகளையும் கொத்தாகப் பிடித்திழுத்து, மடக்கி, தலையில் நான்கைந்து கொட்டுகள் வைத்தாள். அவள் மீது பெரும்தாக்குதல் நடத்தியதன் பிறகு அதே இடத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்து, தலையை மடிக்குள் புதைத்து உடல் குலுங்கினாள்.

வித்யாவின் தாக்குதலுக்குப் பிறகு சுகந்தியின் முகம் பிரம்மைப் பிடித்திருந்தது. ஒன்றும் புரியாதவளாய் சற்றுநேரம் திகைத்து நின்றாள். வித்யாவைச் சாந்தப்படுத்த, அவளது தோளினைக் குலுக்கி, முகத்தைக் குனிந்து பார்த்தாள். அவளது கூந்தல் கலைந்து நெற்றியில் சரிந்து கிடந்தது. முகவாய்க்கு ஒரு

கையைக் கொடுத்து நிமிர்த்தினாள். அவளது இரு கண்களிலும் கண்ணீர் இறங்கிக்கொண்டிருந்தது. அவளது அழுகையை யாரேனும் பார்த்துவிடுவார்களோ எனச் சுற்றும்முற்றும் பார்த்தாள். அவளைக் குலுக்கியவளாக “சாரிடி, சாரி, சாரி..” என்றாள்.

வித்யாவின் அம்மாவை நினைக்கையில், சுகந்திக்குப் பயமாக இருந்தது. ஒரு முறை பள்ளிக்கு வந்திருந்த அவள், “ஏன் டீச்சர் என் புள்ளயத் திட்டுனீங்க” என ஹெச்எம் டீச்சரை உண்டு இல்லையென செய்துவிட்டவள் அவள். வித்யா அழுதது, அவளது தாய்க்குத் தெரிந்தது, அவ்வளவேதான்! என் வீட்டுக்கே வந்து ஊர்த்தெருவே பார்க்கும்படியாகத் திட்டி கூட்டியள்ளி கொட்டிவிடுவாள். அவள் மீதான பயம் தொண்டைக்கும், நெஞ்சுக்குமாக ஓடியது.

வித்யாவின் அழுகை ஒரு புள்ளியில் வந்து நின்றது. கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தவள், கீழே கிடந்த புத்தகப்பையை முதுகில் கிடத்திக் கொண்டு நடந்தாள். அவள் பின்னே நிழலைப்போல ஓடி அவளைச் சமாதானம் செய்யும் பொருட்டு கெஞ்சினாள். எப்படிக் கெஞ்சியும் வித்யா அவளது முகத்தை ஏறிட்டுப் பார்க்கவில்லை.

 

வேப்பங்காயோ குறிஞ்சாக்கீரையோ இவள் உறவால் கசந்தவளென சுகந்தியிடம் அவள் நெருங்குவதாக இல்லை. இருவரும் பேசிக்கொள்ளாதது வகுப்பைக் கடந்து பள்ளி அளவில் பேசும் பொருளானது.

இரண்டு நாட்கள் கழித்து சுகந்தியின் அப்பா பள்ளிக்கு வந்திருந்தார். தரநிலை பதிவேட்டில் கையெழுத்திடுவதற்காக வந்திருந்த அவர், எட்டாம் வகுப்பிற்குள் நுழைந்து ஒரு சுற்றுப் பார்த்தார். “ ஏய் சுகந்தி உங்க அப்பா” எனக் கீழே குனிந்து, எழுதிக்கொண்டிருந்த சுகந்தியைத் தட்டி எழுப்பினார்கள். இருக்கையிலிருந்து எழுந்தவள், “ அப்பா, நான் இங்கே இருக்கேன்” என்றாள். மகளைப் பார்த்த முத்தாய்ப்பில், அவரது பற்கள் உதடுகளுடன் சேர்ந்து சிரித்தன. அவரது கையில் ஒரு பொட்டலம் இருந்தது. அதை மகளை நோக்கி நீட்டினார். அவளால் அதை கைநீட்டி வாங்க முடியவில்லை. முன் வரிசையில் உட்கார்ந்திருந்த வித்யா அதை வாங்கி சுகந்தியிடம் கொடுத்தாள்.

“ அய், ரெண்டு பேரும் ராசியாகிட்டாள்வ” மொத்த வகுப்பறையும் கைக்கொட்டி ரசித்தது. சுகந்தியின் முகத்தில் வெட்கம். வித்யா கொடும்பால் சிரித்தாலும் சூம்பிச்சுருங்கிப்போன பேரிச்சம்பழமாக முகத்தை வைத்தவளாக இருந்தாள்.

சுகந்தி சொன்ன இரண்டு அப்பாக்கள் செய்தி நினைவு வந்தது. இவர் எத்தனையாவது அப்பா எனக் கேட்டுத் தெரிந்துகொள்ள அலாதிக்காட்டினாள் வித்யா. அதை அவளிடம் கேட்டுவிட நினைத்தாள். இதைத் தெரிந்து கொள்வதற்காகவேணும் சுகந்தியிடம் அவள் பேச வேண்டும் போலிருந்தது. பள்ளி முடிந்து வீடு திரும்புகையில் இத்தனை நாட்கள் செந்தட்டியென விலக்கி நின்றவளிடம் கொழுகொம்பைத் தேடும் சுரையைப்போல நெருங்கினாள்.

“ சுகந்தி “

அவளது இரத்தத்திலும் கொஞ்சம் உப்பு இருந்தது. அதைக்காட்டும் விதமாக நாசியோடு உதட்டைக் கோணிச் சுழித்தாள்.

“ உன் அப்பாவ இதுக்கு முன்னே நான் பார்த்திருக்கேன்”

அவளது நடை நின்றது, “ எங்கே பார்த்தே?”

“ எங்கேனு ஞாபகமில்ல. ஆனா பார்த்திருக்கேன்”

இருவரும் கசப்பை மறந்து நெருக்கியிருந்தார்கள். அப்பொழுதுதான் அப்பா கொடுத்துவிட்டுச் சென்ற தின்பண்டம் நினைவுக்கு வந்தது. புத்தகப் பையை முன் பக்கமாக இறக்கி ஊக்கால் குறுக்குவாக்கில் குத்தி பூட்டியிருந்த பையைத் திறந்து பொட்டலத்தை எடுத்து விரித்து வித்யா முன் நீட்டினாள், காரசேவு. “அள்ளிக்கோடி…”

வித்யா முன் விரல்களைப் பொட்டலத்திற்குள் நுழைத்து மூன்று விரல்களால், நான்கைந்து முறுக்குத் துண்டுகளை எடுத்து அதில் ஒன்றை வாய்க்குள் போட்டுக்கொண்டாள். கொடும்புக்குள் அதக்கி முன் பற்களால் கடித்தபடி கேட்டாள். “ வந்தது எந்த அப்பா?”

“ எந்த அப்பான்னா, என் அப்பாதான்!” அவளது இமைகள் அடித்துக்கொண்டன.

“ மறந்திட்டியா, நீதானே சொன்னே. உனக்கு ரெண்டு அப்பானு”

“ ஓ, அதுவா..” சுகந்திக்கு வாய் நிறைய சிரிப்பு வந்தது. மென்றிருந்த முறுக்கைச் சப்புக் கொட்டியபடி சிரித்தாள். அவள் அப்படியாகச் சிரிக்கையில் மேல், கீழ் அன்னத்தில் அரைத்திருந்த கூழ் தெரிந்தது.

“ என்னடி, கேட்கேன் சிரிக்கே…?”

“ அதெ நீ இன்னும் மறக்கலையா?”

“ பிறகென்ன நீ சொன்னது பொய்யா..?”

“ உண்மைதே” என்றவள் முழு பொட்டலத்தையும் முழுதாக விரித்து, முறுக்கை அள்ளி, பாதியை வித்யாவிடம் கொடுத்துவிட்டு, மீதத்தை வாய்க்குள் கொட்டி, சூடான நண்டை வாய்க்குள் கிடத்தி கொடும்புக்கும் அன்னத்திற்கும் மாற்றி சூட்டைத் தணித்துக் கொள்வதைப் போல கடித்து மென்றபடி சொன்னாள், “ இன்னைக்கு வந்தது என்னோட முதல் அப்பா “.

இவ்வளவு நேரம் தின்னாமல் கையிலேயே வைத்திருந்த முறுக்கை கொத்தாக வாய்க்குள் கொட்டிக்கொண்டாள் வித்யா. “ அப்ப இன்னொரு அப்பா?”

சுகந்தியின் கொடுவாய் வேகமாக மென்றன.

“ அவருதான் இவரென, வாழப்பழக் கதையாட்டம் சொல்லித் தொலைச்சிறாதேடி” என்றவள் பெருவெடிப்பில் சிரித்தாள்.

“ இல்ல. அவரை நான் இன்னொரு நாள் காட்டிவிடுறேன்” என்றாள். இருவரும் தோளோடு தோள் உரச நடந்தார்கள்.

“ ரெண்டாவது அப்பாவ முதல் அப்பாவுக்குத் தெரியுமா?”

“ தெரியுமோ தெரியாதோ தெரியல”

“ உன் அம்மா…” கேட்க நினைத்தக் கேள்வியை அவள் முழுமையாகக் கேட்டுவிடவில்லை. ஆனால், கேட்க வந்த கேள்வியைப் புரிந்தகொண்ட சுகந்தி அதற்கானப் பதிலைச் சொன்னாள். “ இவர் முதல் அப்பா, இவர் ரெண்டாவது அப்பாவெனக் காட்டிவிட்டதே என் அம்மாதானே “

“அம்மாவே காட்டிவிட்டாளா!” எனக் கேட்டவள் கொடும்பை நாக்கு குடையச் சிரித்தாள்.

“ ரெண்டாவது அப்பாவ எனக்கு எப்ப நீ காட்டுவிடுவே”

“ அதான் சொன்னேனே இன்னொரு நாளைக்குனு”

“ அதான் எப்பனு கேட்கிறேன்”

“அவரப் பார்க்கிறப்பதானே காட்டமுடியும்” என்றவள் முறுக்குக்கூழை நுனி நாக்கால் மேல் கீழ் உதடுகளுக்குள் சுழற்றி அள்ளி, நடு நாக்கால் சப்புக்கொட்டினாள்.

வித்யாக்கு அவளது இன்னொரு அப்பாவைப் பார்ப்பதைக் காட்டிலும் அவர் குறித்து விசாரிப்பதே அவளுக்குப் பிடித்த ஒன்றாக இருந்தது.

“ ரெண்டு அப்பால, எந்த அப்பாவ ரொம்பப் பிடிக்கும்…?”

“ ரெண்டு பேருமே பிடிக்கும்…”

“ ரொம்பப் பிடிக்கிறது?”

சுகந்தி யாரைச் சொல்வதென யோசித்தாள். அவளது நடை சற்றே நின்றது.

“ முதல் அப்பாவதான் ரொம்பப் பிடிக்கும்”

“ ரெண்டாவது அப்பாவ?”

“ எப்பவாச்சும்தான் பிடிக்கும்”

வித்யா, அவளது கேள்வியை அத்துடன் நிறுத்திக்கொள்ளவதா இல்லை. “ உன் அம்மாவுக்கு…?”

“ ரெண்டு அப்பாவுமே பிடிக்கும்..”

“ ரொம்பப் பிடிக்கிறது?”

“ ராத்திரியானா ரெண்டாவது அப்பா. பகல்ல மொத அப்பா”

வித்யாவின் உதடுகள் நெளிந்தன. யாருக்கேனும் இரண்டு அப்பாக்கள் இருப்பார்களா, அப்படியே இருந்தாலும் அதை வெட்கத்தை விட்டு வெளியே சொல்வார்களா?, சுகந்தி ஏன் இப்படியாக இருக்கிறாள்? இதை வேறு யாரிடம் இப்படியாகச் சொல்லித் திரியாதே, எனத் தலையில் கொட்டிச் சொல்லிவிட நினைத்தாள். ஆனால் இன்னும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியக் கேள்விகள் இருந்ததால் அவளது நடையொற்றி நடந்தவளாக இருந்தாள்.

“ உன் வீட்டுக்கு வரட்டா?”

“ ஏன்…?”

“ உன்னோட இன்னொரு அப்பாவை நான் பார்க்கணும்…”

“ நான்தான் ஒருநாள் காட்டுறேனு சொன்னேனே…”

“. இன்னைக்கே பார்க்கணும் போலிருக்கே..”

சுகந்திக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. இவள் கீழப்பட்டி, அவள் மேலப்பட்டி. இருவரும் அடுத்தடுத்த ஊர்தான் என்றாலும் அம்மாவிடம் முன்கூட்டியே சொல்லி வைக்காமல் இவளை எப்படியாம் வீட்டுக்கு அழைத்துச் செல்வது.

“ என்னடி யோசிக்கிறே, நான் உன் வீட்டுக்கு வரக்கூடாதா..?”

“ வாறேங்கிறீயா?”

“ வந்தா, உன் இன்னொரு அப்பாவைக் காட்டுவேதானே…?”

“ வீட்டில இருந்தாத்தானே காட்ட முடியும்”

“ இருந்தா பார்க்கேன். இல்லைன்னா, இன்னொரு நாள் பார்த்துக்கிறேன்”

சுகந்தியின் தலை தனியே ஆடியது.

வித்யா ஓடிப்போய் அவளது வீட்டில் பையை வைத்துவிட்டு, “ சுகந்தி வீட்ல என்னோட நோட்ஸ் இருக்கும்மா, அதை வாங்கிக்கிட்டு வந்திடுறேன்மா “ என அவளது அம்மாவிடம் சொல்லியபடி ஓடி வந்தாள்.

“ எப்படிடி திரும்பி வருவே?”

“ சுகந்தியே பெருவாரிக்கரை வரைக்கும் கொண்டுவந்து விடுறேனு சொல்றாள்ம்மா..”

“ சரி, சரி போ. நான் அது வரைக்கும் வாறேன். சுருக்காப் போயி சுருக்கா வரணும்”

“ சரிம்மா, வந்து நில்லு..” என்றவளாக, அவளுக்காகக் காத்திருந்த சுகந்தியை நோக்கி ஓடினாள்.

சுகந்தி தனக்கு இரண்டு அப்பாக்கள் உண்டு எனச் சொல்லிய அன்றைய தினமே வித்யா அவள் தெருப்பிள்ளைகளிடம் சொல்லிவிட்டிருந்தாள். அவள் சொன்னதை அத்தனை பேரும் காதில் வாங்கிக்கொண்டார்களே தவிர, யாரும் நம்புவதாக இல்லை. “ இரண்டு அப்பாக்கள் யாருக்கேனும் இருப்பார்களா, அப்படியே இருந்தாலும் அதை யாரேனும் வெளியே சொல்வார்களா?” என்று அத்தெரு பிள்ளைகள் கேட்பதாக இருந்தார்கள்.

தேர்ச்சக்கரத்திற்குள் தலையை விட்டது போலிருந்தது அவளுக்கு. சுகந்தி சொன்னது உண்மைதானா? கொஞ்ச நேரத்திற்குள் அதையும் பார்க்கத்தானே போகிறேன் என்றவளாக சுதிநடையில் நடந்தாள் வித்யா.

பெருவாரியில் இறங்கி ஏறியதும், அவளது ஊர் தெரிந்தது. கலைஞர் ஆட்சிக்காலத்தில் கட்டிய காலனி வீடுகளாக இருந்தன. எல்லா வீடுகளும் பார்க்க ஒன்று போல இருந்தன.

இருவரும் வீட்டு வாசலை அடைந்திருந்தார்கள். வீடு பூட்டியிருந்தது. தகரக் கதவின் விளம்பு உடைந்திருந்தது. அதற்குள் கையை நுழைத்தாள். சாவி இருந்தது. அதை எடுத்து கதவைத் திறந்தாள். தூரத்தில் அவளது அப்பா வருகிற அரவம் கேட்டது.

“ அப்பா வாராங்க”

“ ரெண்டாவது அப்பாதானே?”

“ அவரேதான்..” என்றவள் வாசலில் நின்று தூரத்தில் வந்துகொண்டிருந்தவரை பார்க்க நின்றார்கள்.

அவர் இடுப்பு வேட்டியை அவிழ்த்து கையில் பிடித்துக்கொண்டு தொடை வரைக்குமான கால்ச்சட்டையுடன் நடைபாதையை அகலவாக்கில் அளந்துகொண்டு வீட்டை நோக்கி வந்தவராக இருந்தார். அவரது கொழகொழத்த பேச்சு அவரது நடையை விடவும் வேகமாக இருந்தது.

அவர் பேசியதைக் கேட்கையில், வித்யாவிற்கு இரு காதுகளையும் பொத்திக்கொள்ள வேண்டும் போலிருந்தது. அவரையே திகைக்கப் பார்த்துக்கொண்டிருந்தவளைத் தன் பக்கமாகத் திருப்பிய சுகந்தி, “இவர்தான் என்னோட இன்னொரு அப்பா…” என்றவாறு அவளைப் பார்த்து சிரிப்பதா அப்பாவை நினைத்து வெடிப்பதா, எனத் தெரியாது நின்றாள்.

வித்யாவுக்கு வியப்பாக இருந்தது. இன்று காலையில் பள்ளிக்கு வந்து காரசேவு கொடுத்துச் சென்றவரைப் போலவே அவர் இருந்தார். நேர்த்தியாக உடுத்தி, தலைமுடியைப் படிய ஒடுக்கி, படித்த பட்டதாரியைப் போல காலையில் இருந்த அவர், இப்போது அதற்கு நேரெதிர் நிலையில் இருந்தார். இருவரின் உடல், முகம், குரல் ஒன்று போலவே இருந்தாலும் இருவரும் ஒருவரே என்றாலும் சுகந்தி சொல்வதைப் போல அவர் வேறு, இவர் வேறுதான். காலையில் பள்ளியில் பார்த்தவர் பெருமூளையில் பேசுபவராக இருந்தார். இவர் சிறுமூளையால் அல்லவா பேசுகிறார்.

“ வித்யா, என் ரெண்டாவது அப்பாவ நீ பார்த்திட்டேல?”

வித்யாவின் கண்கள் வியர்த்தன. இரண்டாவது அப்பா மீது அவள் கட்டிய கற்பனைக் கலயம் உடையவும் கரையவும் செய்தது. அவள் மீதே அவளுக்கு வெட்கம் வந்தது. சுகந்தியின் இரண்டாவது அப்பாவைப் பார்த்ததும் வித்யாவிற்கு அவளது அப்பா நினைவுக்கு வந்தார்.

சுகந்தியின் மீது தோளிட்டவாறே அவள் பெரும்வாரியை வந்தடைந்தாள். வாரியின் மறுகரையில், வித்யாவின் அம்மா நின்றிருப்பது தெரிந்தது.

“ சாரிடி சுகந்தி…”

“ ஏனடி சாரி?”

“ உனக்குப் போல எனக்கும் ரெண்டா அப்பானு சொன்னேல. அதுக்காக உன்ன நான் அடிச்சிட்டேன். என்ன மன்னிச்சிரடி”

“ நமக்குள்ளே என்னடி மன்னிப்பு”

இருவரும் வாரிக்கரையில் ஏறி, ஆசுவாசமாக பெருமூச்சு வாங்கினார்கள். வித்யா, சுகந்தியைப் பார்த்துச் சொன்னாள். “சுகந்தி, நீ சொன்னதைப் போல எனக்கு ரெண்டு அப்பா இல்லையடி. மூணு அப்பாக்கள்…”

சுகந்தியின் வாய் பெரிதென திறந்தது. “ என்னடி சொல்றே?”

“ ஆமாமடி, உன் அப்பா குடிக்க மட்டும்தான் செய்கிறார். என் அப்பாவுக்குக் கூட இன்னொரு பழக்கமிருக்கு. அப்ப, எனக்கு மூணு அப்பாக்கள்தானே?”

“ என்ன பழக்கமடி?” கேட்டாள் சுகந்தி.

“ நாளைக்கு என் வீட்டுக்கு நீ வரத்தான் போறே. அப்ப நான் காட்டி விடுறேன்…” என்றவளின் கண்களைச் சுகந்தி ஆழ்ந்து பார்த்தாள். இருவரின் கண்களும் ஒரே அப்பாவிற்காக ஏங்கியிருந்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *