யார் எழுத்தாளன்!…. கிறுக்கல்…13 …. சங்கர சுப்பிரமணியன்.

உலகில் தோன்றிய நிலயற்ற வாழ்வில் ஏதாவதொரு சித்தாந்தத்தில் நிலையாக நிலைபெற்று விட்டவர்களிடம் நிலையாமை தத்துவம் எடுபடாது. இவற்றையெல்லாம் எழுத்தாளர்கள் அனைவரும் எழுதுகிறார்களா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு சித்தாந்தத்தின் பிடிக்குள் சிக்குண்டு அதையே வலியுறுத்தும் வகையில் எழுதி நூலாக்குகிறார்கள்.நூலாசிரியர்கள் மானிடர்களின் அறிவுக்கண்களைத் திறக்கவேண்டும். அப்படியின்றி ஒரு நிறுவனத்துக்கு பணிபுரிவதுபோல் ஏதோ ஒரு சமுதாயத்துக்குதவாத கருத்தை வைத்து கதைகட்டி நூலென்றால் நூலாகிவிடுமா? எழுத்தாளர்களாகி விடுவார்களா?அதனால்தான் எத்தனையோ எழுத்தாளர்கள் நீர்க்குமிழிபோல் மறைந்து போகிறார்கள். அவர்கள் வெளியிட்ட நூல்களும் பேசப்படுவதில்லை. ஒரு எழுத்தாளரின்படைப்பை பார்க்கும்முன் வேறுபட்ட வகையில் இங்கு ஒன்றை பார்ப்போம். பிக்பாஸ் என்றொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. அதில் கமல்ஹாசன் புத்தக பரிந்துரை என்று ஒன்றை செய்வார்.
அதில் ஆடு ஜீவிதம் என்ற மலையாள நூலைப்பற்றி சொல்லியிருந்தார். அந்த நூலைப்படிக்காமலேயே அந்த நூலின் விமர்சனத்தை வைத்தே அது எத்தகைய சிறப்புவாய்ந்த நூல் என்பதை புரிந்து கொண்டேன்.எனக்கு அதிகமாக புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லை என்பதால் இதுபோன்று வெகுவாக பேசப்படும் நூல்களை மட்டும் படிப்பது வழக்கம்.என்னை சிறந்த வாசகன் என்று மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக நான் நூல்களை வாசிப்பதில்லை. நமக்கு பசி எடுத்தால்தான் சாப்பிடமுடியும். நமக்கு பிடித்தவைகளையே சாப்பிட முடியும். மற்றவர்கள் இவர் எது கொடுத்தாலும் சாப்பிடுவார் அல்லது சாப்பாட்டை ரசித்து சுவைத்து சாப்பிடுவார் என்று சொல்லவேண்டும் என்பதற்காக பிடிக்காத உணவை சாப்பிட முடியாதல்வா?உயிர்வாழ உணவு அவசியம். அதை தேவைப்படும்போதுதான் சாப்பிடமுடியும். அதுபோல் தேவை கருதி நூல் வாசிப்பவன். என்னைப்போன்றே பலர் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். விதிவிலக்காக எப்போதும் எதையாவது வாசித்துக் கொண்டே இருப்பார்கள். பசிக்கிறதோ இல்லையோ சிலர் எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.சிலர் எப்போதும் திரைப்படங்களை பார்த்துக்கொண்டே இருப்பார்கள். சிலர் எப்பவாவது நல்ல படம் என்று தெரியவந்தால் அப்படத்தை பார்ப்பார்கள். ஆதலால் எப்போதும் எதையாவது செய்து கொண்டிருப்பவர்களே சுறுசுறுப்பானவர்கள் மற்றவர்கள் எல்லாம் சோம்பேறிகள் என்று சொல்லிவிட முடியாதல்லவா?எனக்குத் தெரிந்த சிலர் திரைப்படம் பார்ப்பது தொலைக்காட்சியில் தொடர் பார்ப்பது போன்றவற்றை எல்லாம் பார்ப்பது இழிவானதுபோல் பேசி தம்மை உயர்வாக காட்டிக் கொள்வார்கள். அவர்களே திருட்டுத்தனமாக தாம் இழிவாக பிறரிடம் சொல்லியவற்றை எல்லாம் பாரப்பார்கள்.இனி அந்த ஆடு ஜீவிதம் என்ற நூலைப்பற்றி அறிவோம். இதை எழுதியவர் பென்யாமின் என்ற மலையாள எழுத்தாளர். இந்நூல் 2009 கேரள அரசு சாபித்திய அகாடமி விருதைப் பெற்றுள்ளது. இக்கதையின் நஜீப். மதப்பற்றும் இறைநம்பிக்கையும் உடையவன். அவனுக்கு பெரிதாக ஆசை ஒன்றும் கிடையாது. வீட்டை கொஞ்சம் பெரிதுபடுத்தி இருக்கும் சொற்ப கடனை அடைத்துவிட்டு ஒரு நிம்மதியான வாழ்க்கை.அதற்காக கல்ஃபை தேர்வு செய்தான். தமது மதத்தைச் சேர்ந்த ஒருவரிடமே பணியிலும் அமர்ந்தான். சவுதி பாலவனத்தின் ஆடுமேய்க்கும் அடிமை வேலைதான் அவனுக்கு கிடைத்த பணி. சரியான உணவோ குடிக்க குளிக்க தேவையான நீரோ இன்றி சுட்டெரிக்கும் பாலவனத்தில் ஆடுகளோடு தானும் ஆடாய் வாழ்கிறான். தனது கிராமத்தின் செழிப்பும் பசுமையும் அவனது நினைவுக்கு வருகிறது.தனது அன்பான குடும்பத்துடன் வாழ்ந்த வாழ்வை நினைக்கும்போது இங்கு ஆடுகள் துணை மட்டுமே துணையாய் இருந்து ஆறுதல் தருவது அவனுக்கு துன்பமளிக்கிறது. முடிவில் இந்த பாலைவன சிறைவாழ்க்கையில் இருந்து விடுபட ஓர் ஆபத்தான திட்டம் தீட்டுகிறான். இப்படியாக கதை நகர்கிறது. இந்நூல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளதோடல்லாமல் உலகளாவிய பல விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.மேலும் இந்நூல் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழிலும் இந்த நூல் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இறைப்பற்றும் மதநம்பிக்கையும் உடைய ஒருவன் அவன் பின்பற்றும் மதத்தை தழுவிய நாட்டுக்கே செல்கிறான். அங்கும் அவன் மதத்தைப் பின்பற்றும் முதலாளியிடம் பணியில் அமர்கிறான்.ஆனால் அவன் மதப்பற்றோ இறை நம்பிக்கையோ அவனை அடிமை வாழ்விலிருந்து மீட்டெடுக்கவில்லை. தன் மதத்தைச் சார்ந்தவன் என்பதால் அவனது முதலாளியோ அவனை அடிமைபோல் நடத்துவதை தவிர்த்து விடவுமில்லை. இந்த கருத்து மெல்லிழையாக அந்நூலில் நகர விட்டுருப்பதை மதத்தைக் காட்டிலும் மனிதாபிமானத்தின் மேல் ஈர்ப்பு
கொண்டவர்களுக்கு எளிதில் புரியும்.-சங்கர சுப்பிரமணியன்.(கிறுக்கப்படும்)
![]()