கதைகள்

“லத்தி” …. சிறுகதை 2 …. அண்டனூர் சுரா.

இரண்டு பூதங்கள் நெருங்குவதைப் போலதான் அந்த நான்கு கால்களும் என்னை நெருங்கியிருந்தன. நான் பூப்பெய்த நாளன்று உட்கார்ந்திருந்ததைப் போல கால், தொடைகள் மார்போடு அணைய முழங்கால்களை இறுகக் கட்டியவளாய் குறுகி சுவரில் ஒடுங்கினேன்.

‘டக்,..டுக்….டக்…டுக்….’

பூட்ஸ்களின் அரவம்.

ஒரு கையில் டார்ச் லைட் இருந்தது. அதன் மண்டை போலீஸ்க்கே உரித்தான விழியைப் போலிருந்தது. டார்ச் ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாறி, இன்னொருவரின் கைக்கு மாறியது. அதை வாங்கிய கை வெளிச்சத்தை என் மீது அடிப்பதும் நிறுத்துவதுமாக இருந்தது.

ஈட்டி பாய்வதைப் போல பாய்ந்திருந்த வெளிச்சத்தினூடே அந்த இரண்டு உருவங்களையும் பார்த்தேன். நான்கு பூட்ஸ் கால்களும் என்னை நெருங்கியிருந்தன. பூட்ஸ்களின் நிறம் ஊட்டச்சத்து குறைபாட்டால் வெளிர்த்துபோன சவலைக் குழந்தையின் தோல் நிறத்தில் இருந்தது.

எனக்கும் பூட்ஸ் கால்களுக்குமிடையே இரும்புக் கம்பிகளான கிறில் கேட் இருந்தது. பெண்களுக்குக் கன்னித் திரையைப் போல விசாரணை கைதிகளுக்கு இந்த இரும்புக் கேட். கைதி தப்பித்திடக் கூடாது என்பதற்காக அமைக்கப்பட்ட கதவாக அது இருந்திருக்கவில்லை. விசாரணை கைதியிடம் போலீஸ்க்காரர்கள் எல்லை மீறி நடந்துவிடக்கூடாது என்பதற்காக அமைக்கப்பட்ட அடைப்பாக அந்தக் கிறில் இருந்தது. அதன் உள்ளேயும் வெளியேயும் தாழ்ப்பாள்கள் இருந்தன.

கிறில் கேட்டிற்கும் வெளியே அந்த நான்கு பூட்ஸ் கால்களும் நீண்ட நேரம் தொட்டு நின்றிருந்தன. நான் லாக்கப் அறைக்குள் சுவரில் ஒடுங்கியவளாய் குறுகி உட்கார்ந்திருந்தேன். பூட்ஸ் கால்கள் என்னை நெருங்கி வந்தன. நான் என்னையும் அறியாமல் சுவற்றுப் பல்லியாக ஊர்ந்து சுவரின் மூலைக்குச் சென்றிருந்தேன். டார்ச் லைட்டின் ஒளிக்கதிர் கம்பிகளுக்கிடையில் ஊடுருவி சுவரின் மீது ஒரு பெரிய வெள்ளொளி வட்டமாக விழுந்து, அங்குலம் அங்குலமாக ஊர்ந்தது.

நான் அந்த ஒளியின் வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் ஓர் எலி நகர்வதைப் போல நகர்ந்தேன். ஒளிவீச்சு என்னை விரட்டி ஒரு மூலையில் வைத்து என்னைப் பிடித்திருந்தது. நான் குறுகி தலையை மடிக்குள் புதைத்தவாறு உட்கார்ந்திருந்தேன். ஒளிவட்டம் என்னிடமிருந்து விலகி சுவரை அரைவட்டமடித்தது. நான் ஒளியின் ஓட்டத்தோடு சுவர்களைப் பார்த்தேன். இதற்கு முன்பு என்னைப் போல ஒரு பெண் அடைக்கப்பட்ட அறையாக அது இருக்கவில்லை. ஒரு பூதமோ, ஒரு காட்டு விலங்கோ அடைப்பட்ட அறையாக அது இருந்தது. சுவர்கள் நகங்களால் பிறாண்டிக் கிறுக்கப்பட்டிருந்தன.

டார்ச் அடித்துகொண்டிருந்த உருவம் டிப் டாப் உடையில் இருந்தது. தலையில் நெற்றி நீண்ட தொப்பி இருந்ததை டார்ச் விளக்கில் விழுந்த நிழலில் அவதானிக்க முடிந்தது. மேலாடை தோளிடத்தில் மூன்று பட்டைகள் இருந்தன. இடுப்பை இறுகப் பிடிக்கும் பெல்ட், அதற்குளிருக்கும் தொப்பை,…என அத்தனையையும் வெளிச்சம் தந்த நிழலில் உள்வாங்கினேன்.

ஓர் உருவம் டார்ச் லைட் வைத்திருந்தது. அதன் பின்னே நின்ற மற்றொரு உருவம் ‘கிளிப்’பிடப்பட்ட ஒரு தடித்த அட்டையை வைத்திருந்தது. அதற்குளிருந்த நான்கைந்து வெள்ளைக் காகிதங்களின். முனைகள் காற்றில் அளாவி சருகுகளுக்கே உரித்தான அரவத்தைக் கொடுத்தன.

ஒரு கை முரட்டுத்தனமாக கிறில் கேட்டைத் திறந்தது.

‘ கிரிச்…கிரிச்….கிரீச்….க்ளாங்க்…..’

பூட்ஸ்கள் நான்கும் லாக்கப்பிற்குள் நுழைந்தன.

‘டக்….டுக்….டக்…..டுக்…..’

கிறில் சாத்தப்பட்டது.

‘ கிளாங்க்….கிரீச்…கிரீச்…கிரீச்….’

உள்ளூரப் பூட்டு திணிக்கப்பட்டது.

‘டுடாங்’

பூட்டப்பட்டது.

‘டடச்’

நான் சுவரின் ஒரு மூலையில் ஒன்றிப்போயிருந்தேன். மலையாத்தம்மன் சுவாமியை வேண்டிக்கொண்டேன். எனது இரண்டு கைகளையும் முகவாய்க்குக் கொடுத்துக் கொண்டேன். கைகள் நடுங்கத் தொடங்கின.

நான்கு பூட்ஸ் கால்களும் என்னை நோக்கி வந்தன. என் இதயத் துடிப்பின் ஓசையும் பூட்ஸ்களின் காலடி அரவமும் ஒரே மாதிரியாக இருந்தன. எது இதயத் துடிப்பு, எது பூட்ஸ்களின் காலடியரவம் என என்னால் பிரித்தறிய முடியவில்லை. டார்ச் விளக்கு என் மேல் கவிழ்ந்து கிடந்தது. பூப்பு நீராடலின் போது தலையிலிருந்து பாதம் நோக்கி தண்ணீர் வழிவதைப் போல ஒளி வெள்ளம் என் மேனியில் மேலிருந்து கீழாக இறங்கியது.

அறையின் ஓரத்தில் ஒரு நாற்காலி கிடந்தது. அதை ஒரு கை நீட்டி இழுத்தது.

‘ கிடாக்…டடுக்….’

ஓர் உருவம் அதில் ஏறி உட்கார்ந்தது. கால் மேல் கால் கிடத்திக்கொண்டு ஆட்டியது. கால் ஆட்டலுக்கேற்ப அந்த நாற்காலியும் சேர்ந்து ஆடியது. இன்னொரு உருவம் நின்று கொண்டிருந்தது. எந்த உருவம் உட்கார்ந்திருக்கிறது, எந்த உருவம் நிற்கிறது என்று என்னால் பிரித்தறிய முடியவில்லை.

ஒர் உருவம் மிரட்டும் தொனியில் பேசியது. அப்பேச்சு இருட்டினைத் துளைத்து என் காதிற்குள் எதிரொலித்தது.

‘ கேட்கிற கேள்விக்கு ஒழுங்காப் பதில் சொல்லணும் என்ன?’

என்னையும் அறியாமல் நான் ‘இம்’ இட்டிருந்தேன்.

‘ உன் பேரன்ன…?’

‘ வாச்சாத்தி’

‘ வயசு?’

‘ இருபது’

‘ என்ன படிச்சிருக்கே?’

‘ பத்தாவது’

‘ பாஸா?’

‘ இம்?’

‘ உன் அப்பா பேரு?’

‘ மலையப்பன்’

‘ அம்மா?’

‘ பேச்சாயி’

‘ உன் அப்பா என்ன பண்றாரு?’

‘ செத்துட்டாரு’

‘ எப்ப?’

‘ அஞ்சு வருசத்துக்கு முன்னாடி’

‘ எப்படி?’

‘ செம்மரம் வெட்டினாருனு சந்தேகத்தின் பேர்ல விசாரணைக்கு அழைச்சிக்கிட்டு போயி சுட்டுக் கொன்னுட்டான்க….’

‘ கொன்னுட்டான்களா?’

‘ இம்…..’

கேள்வித் தொடுப்புகள் இத்துடன் நின்றிருந்தது. இரு உருவங்களும் ஒன்றையொன்று பார்த்துகொண்டன. தொண்டைக்குள் கனைத்துக் கொண்டன.

‘ ஒ அம்மா எங்கே?’

‘ விசாரணை கைதியா இருக்காங்க’

நாற்காலியில் அமர்ந்து கால் மேல் கால் கிடத்தியிருந்த உருவம் நின்றுக்கொண்டிருந்த உருவத்திடம் கேட்டது. ‘விசாரணை கைதியில இவளோட அம்மாவும் இருக்காளா?’

‘ ஆமாம் சார் ’ என்றது நின்ற உருவம்.

அந்த உருவங்களின் பேச்சுகளுக்கிடையில் நான் நுழைய வேண்டிய அவசியம் நேரிட்டது.

‘ என் அம்மா மட்டுமல்ல. அந்த அம்பது பேர்ல, என் தம்பியும் அண்ணனும் இருக்காங்க….’

‘ குடும்பமே இருக்கீங்க, இம்? ’ என்றவாறு அவ்விரு உருவங்களும் ‘கொல்’லெனச் சிரித்தன.

நான் ஒரு பதிலும் சொல்லாமல் நின்றுகொண்டிருந்தேன்.

‘ அடையாளம் சொல்லு?’

‘ என்ன அடையாளம்?’

‘ மச்சம்,தழும்பு,…எதாவது?’

நான் இருட்டறைக்குள் இருந்தவாறு என்னைத் துலாவினேன். நான் பள்ளியில் படிக்கும் பொழுது கிளாஸ் டீச்சரிடம் சொன்ன அடையாளங்கள் என் நினைவிற்கு வந்தன.

‘ கழுத்தில ஒரு மச்சம்’

தரையை நோக்கி விழுந்திருந்த டார்ச் வெளிச்சம் மேலே கீழே நகர்ந்து என் கழுத்தில் குவிந்தது.

‘ எங்கே?’

நான் கையைக் கொண்டுபோய் கழுத்துக் குழிக்கும் குரல்வளை முடிச்சிற்குமிடையே விரல் வைத்துக் காட்டினேன். டார்ச் வெளிச்சம் அங்கே, இங்கே எனப் பெயர்ந்து அங்குலமாக நகர்ந்து அவ்விடத்தில் குவிந்தது.

‘ கையை எடு ’ ஒரு குரல் மிரட்டியது.

நான் கையை எடுத்தேன். நான்கு கண்களும் என்னை மேய்ந்தன.

‘ இம், சார் ஒரு மச்சமிருக்கு…’ ஓர் உருவம் சொன்னதும் மற்றொரு உருவம் அதைக் குறித்தது. டார்ச் வெளிச்சம் என்னிடமிருந்து விலகி எழுத்தில் குவிந்தது.

‘ இன்னொன்னு?’

‘ இன்னொன்னா! நான் எதைச் சொல்வது?’ எனக்குள் துழாவினேன். மறைவான இடத்தில் இருக்கும் மச்சத்தைச் சொன்னால் காட்டச் சொல்வார்களோ, என்கிற பயம் என்னைக் கவ்வியது.

‘ கேட்கிறேன்ல…..’ அந்த உருவத்துடன் சேர்ந்து சுவரும் பேசியது.

‘ வயித்தில ஒரு மச்சம்’

‘ பொய் சொல்லக்கூடாது’

‘ பொய் சொல்லல, இருக்கு’

கொஞ்சநேரம் இரு உருவங்களுகிடையில் அமைதி நிலவியது. பிறகு கையில் வைத்திருந்த பேனா நழுவி கீழே விழுவதும் அதைக் குனிந்து எடுக்கும் அரவமும் கேட்டது.

‘ எங்கே காட்டு?’

ஓநாய் சப்புக்கொட்டுதல் போன்ற கட்டளை அது. காவல் நிலையத்திற்குள் சிறை கைதி ஆணாகவே இருந்தாலும் அவர்களின் கரகரத்தக் குரல் பெண்ணாகி விடுகிறது. போலீஸ் பெண்ணாக இருந்தாலும் அவர்களின் மென்குரல் கரகரப்பாகிவிடுகிறது. என்னிடம் கேட்டது ஆண் குரலா, பெண் குரலா எனக் கணிக்க முடியவில்லை. ஆனால் அது அதிகாரத்தின் துருப்பிடித்த உச்சக்குரல் என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது.

நான் உடுத்தியிருந்த ஆடை எனக்குள் கனத்தது. என்னையும் அறியாமல் அது அவிழ்ந்து விடுமோ, என்கிற பயம் என்னை மென்றது.

‘ காட்டுனு சொல்றேன்ல’

ஒரு கை இடுப்பினூடே நுழைந்து வயிற்றின் மையத்தைத் துலாவ, டார்ச் ஒளி வயிற்றை ஊடுருவியது.

‘ இம் சார், இருக்கு. எழுதிக்கிறுங்க. வயிற்றின் மையத்தில் ஒரு மச்சம்’

எழுதிய உருவம் பத்தி பத்தியாகக் கிறுக்கி, கடைசியில் ‘டக்’ என்று ஒரு புள்ளியை வைத்து ‘கிளிப்’பிட்ட அட்டையை பேனாவுடன் கீழே வைத்தது.

இரண்டு உருவங்களும் எழுந்து நின்றன. உடம்புகளை முறுக்கிக் கொடுத்தன.

ஒர் உருவம் விரல்களைச் சொடுக்கி ‘ ஏய், இங்கே வாடி….’ என அழைத்தது. ஒரு பூனை எலியைப் பார்த்து அழைக்கும்படியான அழைப்பு அது. நான் அந்த இடத்தை விட்டு நகராமல் அதே இடத்தில் நின்றிருந்தேன். டார்ச் வெளிச்சம் அணைக்கப்பட்டு லாக்கப் அறை கருவறை இருட்டைப் போல அடர்ந்து பயமூட்டுவதாக இருந்தது.

‘ சொல்றேன்ல. இங்கே வாடி…’

நான் இடத்தை விட்டு நகரவில்லை. கண்களை இறுக மூடி குலதெய்வத்தை மனதிற்குள் வேண்டிக்கொண்டேன்.

‘ நாளைக்கு உங்க ஊர் ஜனங்க எல்லாரையும் விடுவிக்க போறோம். அவங்க யார் யாரெல்லாம் சந்தன மரம் வெட்டப்போனாங்க. யாரெல்லாம் செம்மரம் வெட்டப்போனாங்கனு உண்மையச் சொல்லிட்டாங்க. நீயும் அவங்கள மாதிரி உண்மையச் சொல்லிட்டா அவங்கக் கூட நீயும் போயிடலாம், என்னா?.’

‘ எனக்கு அதெப் பத்தி ஒன்னும் தெரியாது’

‘ எதைப் பத்தி ஒன்னும் தெரியாது’

‘ சந்தன மரம், செம்மரம் வெட்டுறவங்களப் பத்தி ’

‘ யாரெல்லாம் காட்டுவேலைக்குப் போறாங்க?’

‘ தெரியாது’

‘ நீ போயிருக்கேனு உன் அம்மா சொல்லிருக்கா?’

‘ அவங்க சொல்லிருக்க மாட்டாங்க’

‘ நீ போனதில்ல?’

‘ இம், போனதில்ல’

‘ நீ என்ன வேலை பார்க்கிறே….?’

‘ ஆடு மாடு மேய்க்கிறேன்’

‘ உங்க ஊருக்கும் வெளியே ஓரிடத்தில செம்மரக்கட்டைகள மறைச்சி வச்சிருக்கீங்கனு தகவல் வந்திருக்கு…’

‘ எனக்குத் தெரியாது’

‘ வேற யாருக்குத் தெரியும்’

‘ தெரியாது’

‘ உனக்குத் தெரியும்…’

‘ தெரியாது’

‘ தெரியும்’

‘ தெரியாது’

‘ தெரியும்’

‘ சத்தியமா எனக்குத் தெரியாது. உங்களக் கும்பிடுறேன். என்னால முடியல. என்னை விட்டுருங்க. ப்ளீஸ்….’

பூட்ஸ் கால்களைப் பிடித்துகொண்டு கெஞ்சினேன். அவ்விரு உருவங்களிடமிருந்து விலகி சுவரின் மூலையில் ஒடுங்கினேன். இரு உருவங்களும் கேட்டைத் திறந்துக் கொண்டு காட்டுப் பூனைகளைப் போல கள்ளநடையில் வெளியேறின.

எனக்கு மயக்கம் வந்தது. வியர்த்துக் கொட்டியது. சுருண்டு அதே இடத்தில் விழுந்தேன். மயக்கத்தின் ஆழத்திற்குச் சென்று, கொடுங்கனவுகளின் நீட்சியில் சிக்கினேன். ஒரு பாதாளக்குகை வழியே கரை ஏறி மயக்கத்திலிருந்து மீண்டு விழிப்பு நிலைக்கு வந்தேன்.

மறுபடியும் இரண்டு உருவங்கள் அறைக்குள் நுழைந்தன. சற்றுமுன்பு வந்துப்போன உருவங்களல்ல. வேறொரு உருவங்கள். ஆனால் அதைப்போன்று பூட்ஸ், தொப்பி, பெல்ட், தொப்பை….

‘ உன் பேரென்ன வாசாத்தியா?’

‘ இம்’

‘ உனக்கு ஏன்ம்மா இந்த வேலை?’

‘ எனக்கு சத்தியமா எதுவும் தெரியாது’

‘ ஒரே பொய்யத் திரும்பத் திரும்ப சொல்லக்கூடாது’

‘ எனக்கு ஒன்னுமே தெரியாது’

ஓர் உருவம் டார்ச் லைட் அடித்தது. மற்றொரு உருவம் கேள்வித் தொடுத்தது. கேள்வித் தொடுப்பும் மிரட்டலும் ரம்பம் போல அறுக்கும் குரலில் இருந்தது.

‘ உண்மையச் சொல்லிவிடு. உன்ன விட்டுருறேன்’

‘ எனக்குத் தெரியாது..’

‘ பொய் சொல்றே’

‘ எனக்குத் தெரியாது…’

‘ நீ உண்மைய மறைக்கிற….’

‘ மறக்கல. எனக்குத் தெரியாது…’

‘ நீ மறைக்கிற ’

‘ மறைக்கல’

‘ மறைக்கிற’

‘ மறைக்கல’

‘ மறைக்கிற’

‘ உங்கள கும்பிறேன். நான் எதையுமே மறைக்கல. என்ன விட்டுருங்க……’

நான் கெஞ்சிக் கதறிக் கும்பிட்டு தட்டுத்தடுமாறி விழுந்திருந்தேன். அவ்விரு உருவங்களும் என்னிடமிருந்து நழுவி வெளியே சென்றிருந்தன.

கிறில் திறந்து சாத்தப்பட்டது.

நான் ஒரு பக்கமாக ஒடுங்கி, கால்களை வயிற்றுக்குள் சுருட்டிக்கொண்டு கிடந்தேன். தொலைவில் வல்லூறுகளின் கத்தலும் நரிகளின் ஊளையிடுதலும் கேட்பதாக இருந்தன. என் இதயம் திடும், திடும்…என இடித்தது. என் ஆடைகள் நனைந்து பிசுபிசுத்தன. என்னால் எழுந்திருக்க முடியவில்லை. உட்கார முடியவில்லை. வலி என்னை இறுகப் பிடித்திருந்தது.

என் அம்மாவையும் இப்படித்தான் விசாரணை செய்வார்களோ என்கிற கவலை என்னைப் பிய்த்து தின்றது. அம்மாவையும் அவளுடன் சேர்த்து கைது செய்த நமூர் பெண்களையும் விடிந்ததும் விடுதலை செய்துவிடுவதாகச் சொன்னார்களே. அவர்கள் தெரிந்ததைச் சொல்லிவிட்டார்கள்தானோ? தெரிந்ததைச் சொன்னால் விடுவித்து விடுவதாகச் சொல்வது உண்மைதானோ…? எனக்குள் தராசுத் தட்டுகள் ஏறி

இறங்கின. மலைவாழ் மக்களுக்குக் கிடைத்திருக்கிற வாழ்க்கையை நினைத்து என்னால் அழாமல் இருக்க முடியவில்லை.

மறுபடியும் கிறில் கேட் திறந்து சாத்தப்பட்ட சத்தத்தைக் கேட்டதும் ‘திடுக்’கென விழித்தேன்.

‘ வாச்சாத்தி?’

அலறியடித்துக்கொண்டு விளிம்பில் ஒடுங்கினேன்.

‘எழுந்திரடி’

ஓர் உருவம் என் கைகளைப் பிடித்து தூக்கியது. நான் கால்களைத் தரையில் இழுவிட்டுக்கொண்டு தொங்கினேன்.

‘ நில்லு. போயிடலாம்’

மெல்ல எழுந்து நிற்க முயன்றேன். முடியவில்லை.

‘ நீ வீட்டுக்கு போகணும்ல்ல’

‘ இம்’

‘ லாக்கப் விசாரணை கொடூரமா இருக்குல்ல?’

‘ இம்.’

‘ போலீஸ்க்காரங்க பொல்லாதவன்களா இருக்கான்கல்ல…?’

‘ இம்’

‘போலீசு கஷ்டடி விசாரணைய பொறுக்க முடியாது. நீ கல்யாணமாகாதப் பொண்ணு. கன்னி வேறு. உனக்கு ஏன் இந்தக் கஷ்டம். இம்…?. உனக்கு என்ன தெரியுமோ அதை சொல்லிவிடு. நீ விடிஞ்சதும் போயிடலாம்’

‘ எனக்கு எதுவுமேத் தெரியாது…’

‘ தெரியாது…?’

‘ சத்தியமாத் தெரியாது’.

‘ உனக்கு எல்லாம் தெரியும். நீ ஒருத்தருக்கிட்ட சொல்லிருக்கே….’

‘ நான் யார்க்கிட்டேயும் சொல்லல’

‘ சொல்லிருக்கே’

‘ சொல்லல’

‘ சொல்லிருக்கே’

‘ சொல்லல’

‘ சொல்லிருக்கே.’

‘ சொல்லல.’

‘ சொல்லிருக்கே…சொல்லிருக்கே….சொல்லிருக்கே….’

என் உடம்பில் வலு இல்லை. அடி வயிறு தீ தீண்டியதைப் போல தகித்தது. அடித்துத் துவைத்து பிழிந்த துணியைப் போல ஆகிவிட்டிருந்தேன்.

‘ அய்யோ, என்னை விட்டுருங்க. சொல்லிடுறேன், நான் சொல்லிடுறேன்.’

இரண்டு உருவங்களும் என்னிடமிருந்து விலகி நின்றன. என் உடம்பு சடசடத்து, வியர்த்துக் கொட்டியது.

‘ இம், அப்படி வா வழிக்கு. சொல்லு’

‘ யார் மரங்களை வெட்டச் சொன்னது?’

‘ யாருனு தெரியாது’

‘ திரும்பவும் நீ பொய் சொல்றே?’

‘ யாருனு தெரியாது. ஆனா அவர என்னால அடையாளம் காட்ட முடியும்.’

‘ அவர் எப்படி இருந்தாரு?’

‘ அவரொரு அரசியல்வாதி’

‘ ஆளுங்கட்சியா, எதிர்க்கட்சியா?’

‘ அது தெரியாது. ஆனா அவரு பெரிய அரசியல்வாதி’

‘ பெரிய அரசியல்வாதின்னா?’

‘ ரெண்டு மூனு காரோட வருவாரு’

‘ அவரை மட்டும்தான் உனக்குத் தெரியும். இம்?’

‘ அவர்கூட ஒரு போலீஸ் வருவாரு’

‘ ஆம்பளப்போலீஸா…பொம்பளப்போலீஸா?’

‘ ரெண்டு பேருக்கும் என்ன வித்தியாசமென எனக்குத் தெரியாது. அவரு போலீஸ்னு மட்டும்தான் தெரியும்’

‘ எந்த ஸ்டேசன்ல வேலை பார்க்கிறாருனு தெரியுமா?’

‘ தெரியாது. ஆனா, அவரையும் என்னால அடையாளம் காட்ட முடியும்.’

‘ அவங்க ரெண்டுப்பேரை மட்டும் தான் உனக்குத் தெரியும். இம்?’

‘ அவங்கக் கூட இன்னும் நாலைஞ்சு போலீஸ்க்காரங்க அப்பப்ப வருவாங்க’

‘ அவங்க யார் யார்னுத் தெரியுமா?’

‘ தெரியாது’

‘ ஆனா அவங்களயும் நீ அடையாளம் காட்டுவே?’

‘ இம். காட்டுவேன்’

அவ்விரு உருவங்களும் ஒரு நிமிடம் அமைதியாக நின்றன. பிறகு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டன. பிறகு மெல்ல என்னை நெருங்கி வந்தன.

‘ அவங்களத் தெரியுமா?’

என் தொடை இடைவெளி ‘விண்,விண்…’ என்றது. வலி அடிவயிற்றைப் பிளந்தது.

‘ தெரியும்….’

‘ தெரியுமா….?’

‘ தெரியும்…’

‘ தெரியாதுனு சொல்லு’

‘ தெரியும்…’

‘ தெரியாதுனு சொல்லு’

‘ தெரியும்…’

‘ தெரியாதுனு சொல்லு…, தெரியாதுனு சொல்லு…, தெரியாதுனு சொல்லு….’

 

– அண்டனூர் சுரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *