கதைகள்

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!…. ( சிறுகதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

கலி முத்திப் போயிட்டது என்பது சரியாத்தான் இருக்கு. எங்கும் நடக்காத கூத்தெல்லாம் இங்கதான் நடக்கு. பகவான் இதல்லாம் பாத்துண்டு சும்மா கண்ணை மூடிண்டுதானே இருக்கார். பாஞ்சாலிக்கு ஒரு சங்கடம் வரச்ச ஓடோடி வந்து உதவிசெய்தவர் இப்பல்லாம் எந்த இடத்தில் என்ன நடந்தாலும் கம்முன்னுல்லா இருக்கார்?இல்லன்னா இப்படி இருக்குமோ? இதெல்லாம் அரசியல் சம்பந்தப்பட்டது. பக்தி சம்பந்தப்பட்டிருந்தால் பகவான் வந்திருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது. இப்படியாகச் சொன்னபடியே பிரகாரத்தை சுற்றி வந்த சடகோபன் வெறும் வாயை மெல்ல அவல் வேண்டுமே என்பதற்காக ஊர் நடப்பை சபாபதியிடம் பேசிவந்தார்.திருவள்ளுவரே சொல்லியிருக்கார் செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று. அதனால் இன்று பிரசாதம் புளியோதரையாக்கும். நெய்மணக்க சுடச்சுட இருக்கும். இப்ப அம்பி ஒருத்தன் எடுத்துண்டு போறச்ச பார்த்தன். சீக்கிரம் வாரும் தீர்ந்துடப் போவுதுன்னு சபாபதியை உற்சாகப்படுத்திய படியே வேகமாக பிரகாரத்தை சுற்றினார்.அப்போது பகவானின் பிரகாரத்த சுத்தறச்ச எதுக்கு ஓய் திருவள்ளுவர பற்றிப் பேசுறீர் என்றதும் உடனே பதிலளித்த சடகோபன் எந்த லோகத்துல இருக்கிறீர்? அவரையெல்லாம் இப்ப நம்ம லிஸ்டில் சேத்து ரொம்ப நாளாச்சு. அவருக்கு பூணூல் போட்டு காவி உடுத்தி பட்டையும் அடிச்ச கதை தெரியாதா என்றதும் சபாபதி திருதிருவென முழித்தார்.பகவானை கும்புடறதால புண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ பிரகாரத்தை சுற்றிவந்து கைநிறைய பிரசாதத்துடன் இந்துக் கல்லில் அமர்ந்தபடியே அந்த கோபுரத்தை பார்த்தபடியே பிரசாதத்தை சாப்பிடும்போதே ஜன்ம சாபல்யாம் எல்லாம் தீர்ந்துபோன மனநிறைவு என்று சடகோபன் சொல்லவும் அது என்னவோ உண்மைதான் ஓய் சரியாகத்தான் சொன்னீர. சும்மாவா சொன்னார்கள் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதேன்னு என்று சடகோபன் முன் மொழிந்ததை சபாபதி வழி மொழிய பேச்சு திசைமாறியது.“சடகோபா என்னவோ அரசியல் பக்தி என்றெல்லாம் சொன்னாயே? கடவுள் அப்படியெல்லாமா வித்தியாசம் பாப்பாரு?”“என்ன அப்புடி கேட்டுபுட்ட. சாட்சாத் உண்மைதான் ஓய். பாப்பாரு ஆனா இப்பமாதிரி கண்டுக்காம இருக்க மாட்டார்”பதில் சொன்னார் சடகோபன்.“புரியமாட்டேங்குதே”“சரியான அபிஷ்டுங்கானும் நீர். சொல்றன் கேளும். பாஞ்சாலி துகிலுரியும்போது நடைபெற்றது கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடந்த அரசியல். அங்கே பாஞ்சாலிக்கு உதவ பகவான் வந்தார் ஆனால் ஓடோடி வரவில்லை. நீட் மாதிரி டெஸ்ட் வைத்துவந்தார்.”“சரிதான், சரிதான் இப்ப வெளங்குது.”“அப்ப பக்திக்கு எங்க எப்படி வந்தார்?”“என்ன ஓய் இவ்வளவு தற்குறியா இருக்கீர். பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்து தூணைப் பிளந்து உடனேயே வந்தது பற்றி கேள்விப் படவில்லையா?என்று சடகோபன் சொன்னதும் சபாபதி ஒம்ம சும்மா சொல்லப்புடாது எல்லாத்தையும் பிஞ்சர் டிப்லல்லா வெச்சுண்டு இருக்கீர் என்று புகழ்ந்தார். அதற்குத்தான் நூலப்படி நூலைப்படி என்கிறார்கள். வாசிப்பு அனுபவத்தை வளர்த்துக்கொள் என்று தலபாடா அடிச்சுக்குறோம். யார் கேக்குறா? முன்போல நூல்களும் விற்பதில்லை. எவரும் வாசிப்பதும் இல்லை என்று ஆதங்கப்பட்டார்.முன்பெல்லாம் கதாகாலட்சேபம் கோயில்கள்ல அடிக்கடி நடக்கும். உம்மப்போல நூல்களப் படிக்காதவங்களுக்கு கேள்வி ஞானத்தின் மூலமாவது நாலு நல்லது கெட்டது தெரியுமென்றார். ஆம ஓய். சரியாத்தான் சொல்றீர். சென்னையை கலாச்சார நகரம் மும்பையை வியாபார நகரம் டில்லியை அரசியல் நகரம் என்கிறார்கள். ஆனால் இங்கு நம்ம கலாச்சாரம் எப்படியெல்லாமோ போய்க்கொண்டுல்லா இருக்கு என்ற சபாபதி அங்கலாய்கவும்,“என்ன ஓய் பூடகமா என்னவோ புதிர் போடுறீர்?”“புதிரும் இல்ல புடலங்காயும் இல்ல. ஒடச்சே சொல்லுப்புடறன் கேளும். இப்ப ட்ரெண்டில இரப்பது சிலை கலாச்சாரம் ஓய்”“அப்படியா?”“அப்படியா நொப்படியான்னுட்டு. இப்பத்தான் எல்லாம் தெரிஞ்ச ஏகம்பரம்போல சொல்லிண்டிருந்தீர்?”“சரி சொல்லும் ஓய். யானைக்கும் அடிசறுக்கும்கறது தெரியாதோன்னோ?”“உமக்கு சறுக்குறது கெடக்கட்டும். இப்ப தம்ம கலாச்சாரமே சறுக்குதே”“என்ன ஓய் என்னவெல்லாமோ சொல்லி பீதியைக் கிளப்புறீர்” என்று பதறினார் சடகோபன்.சடகோபா, நான் பீதியையும் கெளப்பல பேதியயும் கெளப்பல. நம்ம கலாச்சாரத்தை மறந்திட்டா. கடலுக்குள்ள பேனாவுக்கு சில வைக்கப் போறாங்களாம். வடக்க ராமருக்கு கோயில் கட்டிக்கிறச்ச தெக்க நம்மளும் கடலுக்குள்ள ராமர்பாலம் இருக்கிறமாதிரி கடலுக்குமேல கடலுக்குள்ள தூக்க முடியாத வில்ல தூக்கி ஒடச்ச ராமச்சந்திர மூர்த்திக்கு நினைவுச்சின்னமா ஏன் வில்லையும் அம்பையும் வைக்கப்படாது?ஆனா இங்க இருக்கவங்க விடமாட்டங்களே. தமிழ்க்கடவுளான முருகனின் நினைவுச்சின்னமாக வேலைத்தான் வைக்கவேண்டும் என்று போராட ஆரம்பித்து விடுவார்களே என்று அசரீரி போல் பேச ஆரம்பித்தார் சபாபதி. பேனாவும கூர்மையானது வேலும் கூர்மையானது. இரண்டுமே கையோடு சம்பந்தப்பட்டது.அதற்கு வாய்ப்ப்பு இருக்கு ராஜா என்ற சடகோபன் மனுசங்களுக்கே அவங்க நினைவா நினைவுச்சின்னம் வைக்கும் போது நம் தமிழ்க்கடவுள் முருகனுக்கு நினைவுச் சின்னமாக வேலை வைக்க வேண்டும் என்று போராடத் தொடங்குவார்கள் என்றான்.அப்போது இடைமறித்த சபாபதி, சடகோபா ஒருவர் அதிகமாக விமானத்தில் பறந்தார் என்றால் அது கின்னஸ் புத்தகத்தில் அல்லவா இடம் பெறவேண்டும். அப்படியில்லாமல் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆகாயவிமானத்துக்கு சிலை வைத்தால் அவரை நினைப்பார்களா? அல்லது விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் பிரதர்ஸை நினைப்பா்களா? என்றார்.உடனே பலே பலே என்ற சபாபதி இத நான் இந்த ஆங்கில்ல நெனக்கலயே. இப்ப பேனாவுக்கு சிலை வச்சா எல்லாரும் பேனாவக் கண்டுபுடிச்ச லூயிஸ் வாட்டர்மேனை நெனப்பாங்களா இல்ல வேறயாரையாவது நெனப்பாங்களா? ஏன் கேக்குறன்னா பேனாவைப் புடுச்சு எழுதுனவங்க உலகம் முழுக்க இருக்காங்க.தமிழ் நாட்டிலயும் நிறையபேரு இருக்காங்க. அதுலயும் புகழ்பெற்றவங்களும் ரெம்பபேரு இருக்காங்க. ஆனா பேனாவ கண்டுபுடிச்சவரு வாட்டர்மேன் ஒருத்தர்தானே. அதனால புகழெல்லாம் அவருக்கல்லவா போய்விடும். இதத்தான் சொந்தச்செலவுல சூனியம் வைப்பது என்பார்களோ? என்றான்.சடகோபா இன்னொன்று செய்யலாம். பேனாவுக்கு பதிலா எழுத்தாணி வைக்கலாம். ஆனா அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு. தேரை இழுத்து தெருவுலவிட்ட கதை மாதிரி அதுலயும் வருகிற புகழ் வள்ளுவனுக்கும் கம்பனுக்கும் அல்லவா போய்விடும். நெனச்சது ஒன்னு நடந்தது ஒன்னுன்னு ஆயிடும். அப்புறம் வேலியில போறத வேட்டியில விட்ட கதை மாதிரியல்லவா முடியும் என்றார் சபாபதி.சபாபதி நான் ஒம்ம என்னவெல்லாமே நெனச்சன். நூலைப்படி நூலைப்படி என்று புத்தகத்தை படிச்சாதான் அறிவுன்னு நெனச்சன். படித்த அறிவு பட்ட அறிவு என்பதுபோல் நூலைப்படிப்பவர்கள்தான் அறிவாளி என்று எண்ணிவந்த எனது அறியாமையை அகற்றினீர் என்றார். ஆனால் நாம் பேசியதை நமக்குள் வைத்துக்கொள்ளும் ஓய். இதையெல்லாம் வெளியே சொன்னால் வீண்வம்பு என்றார்.அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் பேனாவை வைப்போமா எழுத்தாணி வைப்போமா என்று ஒருபக்கம் அரசியல் ரீதியான போராட்டமும் இன்னொரு பக்கம் வில்லை வைக்கலாமா வேலை வைக்கலாமா? என்ற மதரீதியான போராட்டமும் ஏற்பட்டு அரசியல்ஞானி சொன்னதுபோல் நாடே சுடுகாடாகிவிடும் என்றும் அறிவுரை வழங்கினார்.அதற்கு சபாபதியும் சடகோபா நமக்கு எதுக்கு ஓய் ஊர்வம்பு. நாடு எக்கேடு கெட்டால் நமக்கென்ன? இனம் மொழி என எது கெட்டால் நமக்கென்ன? கோயிலுக்கு வந்ததோமா பிரகாரத்தைச் சுற்றினோமா புளியோதரையை வாங்கிக்கொண்டு வந்து இப்படி இந்த கல்லில் உட்கார்ந்து கோபுரத்தை பார்த்தபடியே பகவானை நெனச்சுண்டு புளியோதரையே தின்றோமா என்றுதான் இருக்கவேண்டும். கோபரத்தை தரிசிச்சா கோடி புண்ணியம் பகவானை நினச்சா பாவ விமோச்சனம் என்றாலும் எவ்வளவு நேரம்தான் கோபுரத்தயும் பாத்துண்டு பகவானையும் நினச்சுண்டு இருப்பது?இந்த புளியோதரை தீரும் மட்டுமாவது லௌகீக விசயங்களை பேசிண்டு இருந்தா பொது அறிவும் வளருமோல்லியோ என்று சொல்லியபடி புளியோதரை தீர்ந்ததும் தொன்னையை அங்கேயே எறிந்துவிட்டு கையையும்  பிரகாரச்சுவரில் தேய்த்து சுத்தம் செய்தபின் நண்பர்கள் இருவரும்அங்கிருந்து கிளம்பினர்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button