அழகான கருப்பி!… ( சிறுகதை 1 ) … அண்டனூர் சுரா.

“அப்பா, என்னைய நீங்க ஏமார்த்திட்டீங்க. இனி நான் உங்கக் கூட பேசப்போறதில்ல. நான் சொன்னா சொன்னதுதான். பேச மாட்டேனா மாட்டேந்தான்.
இப்படியெல்லாம் நடக்குமுனு நான் எதிர்பார்க்கலப்பா. ஏன்ப்பா அமைதியா இருக்கீங்க? எதாவது பேசுங்களே. தீவளிக்கு போனஸ்ல எனக்கொரு தோடு வாங்கித் தர்றதா சொன்னீங்க, வாங்கித் தந்தீங்களா? வாங்கப்பா. எனக்கு இப்பவே தோடு வேணும். வேணும்னா வேணுந்தே.
எனக்கு பத்து வயசானப்ப மாரியம்மன் கோயில் திருநாளுல மாமா எனக்குக் காதுக்குத்தி ரெண்டு கிராம்ல தோடு போட்டுவிட்டுச்சு. அது ஒங்களுக்குப் பொறுக்கல. அதை வாங்கிட்டுப் போய் சோத்துக்கு வழியில்லேனு அடவு வச்சீங்க. அம்புட்டேதே. அதெ நீங்க திருப்பித் தரவேயில்ல. ஏன்ப்பா திருப்பித் தரல? அந்தத் தீவளி போயி மறுமறு தீவளி வந்திருச்சு. அதெ நீங்க திருப்பித் தரவே இல்ல.
ஒரு நாள் வாரச் சம்பளத்த வாங்கிக்கிட்டு போய் நவெயைத் திருப்பிக்கிட்டு வாரேனு வீராப்பு பேசிக்கிட்டு போனீங்க. நான் ஆசையோட காத்திருந்தேன். நீங்க நவெயோடுதே வருவீங்கனு. தலைய தொங்கப்போட்டுக்கிட்டு திரும்பி வந்தீங்க, எனக்கு அப்பவே தெரிஞ்சுப் போச்சு. நவெ வட்டி குட்டியாப்போட்டு பேரன் , பேத்தியெல்லாம் எடுத்து மூழ்கிப்போச்சுனு. இப்ப, உங்கள நான் விடப்போறதில்ல. எழுந்திருச்சி என் கூட வாங்க. அந்த மாதிரியே ஒரு நவெ எனக்கு வாங்கிக்கொடுங்க.
எழுந்திரிங்கப்பா, எழுந்திருங்க. அங்கே பாருங்க முத்துலிங்கம் வந்திருக்காரு. வேலு வாத்தியார் வந்திருக்காரு. பைனான்ஸ் சிவந்தபெருமாள் வந்திருக்காரு. யாராவது ஒருத்தர்கிட்ட பணம் கடனா கேட்டு வாங்குங்க. என்னைய நம்பி வாங்குங்க. எவ்ளோ வேணுனாலும் வாங்குங்க. நான் சம்பளமெடுத்து கட்டிருறேன்.
உங்கக் கையால எனக்கு நவெய போட்டுவிடுங்கப்பா. மாமா காதுக்குத்தி நவெயை மாட்டிவிட்டப்ப வலி தாங்க முடியல. நீங்க என் வாயில வாழப்பழத்த உரிச்சி வச்சப்ப, மாமா குத்துன காது வலிச்சாலும் உங்க அரவணப்பு மனசுக்கு இதமா இருந்துச்சு. என் தலைய முன்னே பின்னே திருப்பி என்னோட அழகெ ரசிச்சீங்க. ஞாபகம் இருக்காப்பா? நீங்க மறந்துருப்பீங்க. ஆனா எனக்கு இன்னும் ஞாபகமிருக்கு. வாங்கப்பா, அதே மாதிரி ஒரு நவெய வாங்கி என் காதில மாட்டிவிடுங்க. என்னழகெ ரசிங்க. நீங்கப் பெத்த பிள்ளெப்பா நானு. உங்க ரெத்தத்தோட நெழலு .
என்னைப் பொண்ணுக்கேட்டு கட்டிக்கொடுக்கலைனு கோபிச்சிக்கிட்டு போன மாமா வந்திருக்காரு. அவரை வாங்க தம்பினு கூப்பிடுங்க. உங்கக்கிட்ட எனக்குப் பிடிக்காத விஷயமே இதுதே. வீட்டுக்கு வருகிற யாரையும் உங்களுக்கு மதிக்கத் தெரியுறதில்ல. என்ன சொன்னாலும் எடுத்தறிஞ்சுப் பேசுவீங்க. நம்மள தேடி வருறவங்கள கூப்பிட பழகிக்கோங்கப்பா. உங்க வீராப்ப தூக்கிக் குப்பையில போட்டுட்டு கூப்பிடுங்க. மாமாவ நீங்க கூப்பிடவே இல்லையாம். அட மாமாவ விடுங்க. அத்தை வந்திருக்கிறாங்க பாருங்க. அவங்களையாவது கூப்பிட்டீங்க?. நீங்க கூப்பிடலைனு ரெண்டு பேருமே கோபிச்சிக்கிட்டாங்க. நீங்க என்க்கிட்ட பணம் கேட்டு அடம் பிடிக்கவும் தண்ணி குடிக்கவும் அம்மாவ அடிக்கவும்தான் லாயக்கு. மாமா, அத்தைய கூப்பிட வேண்டாம். அவங்க பிள்ளைங்களையாவது கூப்பிடுங்களே.
அப்பா, என்னை பார்த்திட்டு போன மாப்பிள்ளைக்கிட்டேருந்து எதுவும் தகவல் வந்துச்சாப்பா? என்னை அவருக்குப் பிடிச்சிருக்காமா? யாருக்கிட்டேயும் விசாரிச்சீங்களா? அவருக்கு என்னெ பிடிக்கிறதிருக்கட்டும். உங்களுக்கு அவரப் பிடிச்சிருக்கா? அந்த மாப்பிள்ளையைப் பத்தி அம்மா என்னப்பா சொன்னாள்? நம்ம ஊர்ல பொண்ணெடுத்த அத்தனை மாப்பிள்ளையையும் அம்மா பழிச்சவளாச்சே. எனக்கு வந்த மாப்பிள்ளையையும் பழிச்சிருப்பாளே. அம்மா எப்பவும் அப்படிதான்ப்பா.![]()
எனக்கு மாப்பிள்ளை பிடிக்கலைப்பா. மாப்பிள்ளெ அழகுதே. பத்தாம்ப்பு வரைக்கும் படிச்சிருக்காருதே. அவரைக் கட்டிக்கிட்டா நம்ம குடும்பத்துக்குப் பெருமைதே. ஆனா, அவரா வந்த மாப்பிள்ளையாச்சே, அதான்ப்பா பிடிக்கல. நீங்க பார்த்து ஒரு மாப்பிள்ளைய கொண்டுக்கிட்டு வாங்கப்பா. அவரு ஊமையா இருந்தாலும் நான் கழுத்த நீட்டுறேன்.
அப்பா, இனி நீங்க குடிக்க மாட்டீங்களா? குடிக்கணும். நல்லா குடிக்கணும். குடிச்சாலும் என் மீது நீங்க காட்டுற பாசம் குறையாதுப்பா. என்ன ஒன்னு, குடிச்சா குழறி குழறிப் பேசுவீங்க, இருக்கட்டுமே. குழறி பேசினாலும் நீங்க பேசுறது எனக்குப் பிடிக்கும்ப்பா. நான் சம்பாதிச்சு தாறேன். நீங்க நல்லாவே குடிங்க. ஒங்களாலே இனி வேலைக்குப் போவ முடியாது. வயசு ஆயிருச்சுல. அதனாலென்ன, உங்க மவ நானிருக்கேன். நீங்க கவலைப்படாதீங்க. நீங்க குடிச்சிட்டு எந்தக் கோலத்திலாவது வீட்டுக்கு வாங்க. உங்கள நான் திட்டமாட்டேன். சத்தியமா மாட்டேன்ப்பா. குடிகாரனா இருந்தாலும் எனக்கு நீங்க அப்பாப்பா!
அன்னைக்குக் குடிக்க பணம் தரலைனு கோபிச்சிக்கிட்டு போனீங்க. இந்தாங்கப்பா பணம். எவ்ளோ வேணுனாலும் குடிங்க. இந்த வார சம்பளம் எல்லாத்தையும் குடிச்சி அழிங்க. ஆனா தீவளிக்கு நவெ எடுத்துக்கொடுக்காட்டியும் அழகா ஒரு சுடிதார் எடுத்துக்கிட்டு வாங்க. கண்ணாடி வச்சது, சிக்னா வச்சதுனு சொல்லிக்கிட்டு பொம்மைக்குப் போடுற சுடிதார வாங்கிக்கிட்டு வராம, இந்தக் கருப்பிக்கு என்ன கலரு எடுப்பா இருக்குமோ அந்த கலர்ல எடுத்துக்கிட்டு வாங்க.
அப்பா, கணேசக் கோணாரு வந்திருக்காரு. என்னனு கேளுங்கப்பா. சந்தையில வாங்கப்போற மாட்ட பிடிச்சிக்கிட்டு வர்றேனு சொன்னீங்களாமே. உங்கள அழைச்சிக்கிட்டு போக வந்திருக்காரு. போங்கப்பா, போங்க. போயிட்டு மாட்டைப் பத்திரமா கொண்டுவந்து வீட்ல கட்டிட்டு பொறகு எவ்ளோ குடிக்க முடியுமோ குடிங்க. மாட்ட பிடிக்கிறத்துக்கு முன்னாடி தண்ணிக்குடிச்சீங்க அம்புட்டேதே. பெத்த அப்பனுங்கூட பார்க்க மாட்டேனாமா. மாடுக ரெண்டும் அம்பதாயிரம் போகுமாம். ஊர்க்குள்ள அதுதே பேச்சு. உங்கக் கட்டுப்பாட்ட மீறி மாடுக ரெண்டும் போனுச்சு, அவ்வளவேதே. நம்ம குடும்பம் ஆயுசு மட்டும் கணேசக் கோனாருக்குப் பண்ணெயடிக்கணும். அப்படியே சந்தையில நமக்குனு ஒரு கன்னுக்குட்டி பார்த்திட்டு வாப்பா. அக்காவுக்குப் பொங்கல் சீர் கொடுக்கிறப்ப கன்னுக்குட்டியும் கொடுப்போம். இதுக்கெல்லாம் ஏது பணமுனு கேட்குறீங்களா?. இருக்கேருக்குப்பா தீவளி போனஸ். இப்பதானே நவெ எடுக்கணுமுனு அடம் பிடிச்சேனு நினைக்கிறீங்களா? என்னப்பா பெரிய நவெ. அடுத்த தீவளி போனஸ்ல எடுத்துக்கலாம். இந்தத் தீவளி போனஸ்ல அக்காவுக்கு ரெண்டு கிராம்ல மூக்குத்தி ஒன்னு வாங்கிக்கொடுத்திட்டு மிச்சப் பணத்த தீவளி செலவுக்கு வச்சிக்கிருவோம்ப்பா.
அப்பா, அக்காவுக்கு ஆயுசு நூறு. இப்பதே அவளப் பத்தி பேசிக்கிட்டிருந்தோம். அதோ பாருங்களே அக்காவே வந்திட்டா. அக்கா குடும்பத்தோட வாறாள்ப்பா. வயித்துல பிள்ளைய சுமந்துக்கிட்டு வாயும் வயிறுமா வாறாள்ப்பா. மச்சான் அதான்ப்பா உங்க மருமகன், அவரும் வாராருப்பா. கூப்பிடுங்கப்பா.
தீவளி லீவுக்குத்தான் வருவேனு வீராப்பு பேசிட்டு போன தம்பி திருச்சியத் தாண்டி வந்துக்கிட்டு இருக்கானாம். அவன் வந்தவுடனே ஏன்டா அதுக்குள்ள வந்தே? எல்லா பாடத்தையும் பாஸ் பண்ணிட்டியா? படிக்கிறியா, இல்ல ஊர் சுத்திக்கிட்டு திறியிறீயானு கேட்காம, நாலு வார்த்த ஆறுதலா பேசுங்க. அவன் சின்னப்பய. காலேஜ்ல படிச்சா, மீசை மொளைச்சிட்டா, பெரிய ஆம்பளையா ஆகிவிடுவானாக்கும்? பொட்டிப் பாம்பாட்டம் அவன் நம்ம கொடங்கைக்குள்ளே வளர்த்திட்டோம்ப்பா. அவன்க்கிட்ட எப்படிப் பேசணுமுனு உங்களுக்குத் தெரிய மாட்டேங்குது. பேரன் பேத்தி எடுத்துட்டீங்க. சொந்த மகனுக்கிட்ட உங்களுக்குப் பேசத் தெரியல.
அப்பா, இன்னொரு சேதி சொல்லட்டா? எனக்கு நாளைக்குப் பொறந்த நாளு. போன வருசம் எனக்கு நீங்க ஒரு மிட்டாய்க் கூட வாங்கிக்கொடுக்க மாட்டேனுட்டீங்க. இந்த வருசமாவது வாங்கித்தாங்க. வேண்டாம்ப்பா, நான் உங்களுக்கு வாங்கித் தாறேன். நம்ம ஊரு ஐயங்கார் பேக்கரியில கேக் ஆர்டர் கொடுத்து உங்களுக்கு நான் ஊட்டிவிடுறேன். நீங்க எனக்கு ஊட்டி விடணும், சரியா. கூடவே எனக்கு முத்தமும் கொடுக்கணும். கொடுப்பீங்களா, கொடுப்பேனு சொல்லுங்களே. ஏன்தான் கடவுள் உங்கள இப்படிக் கல் நெஞ்சா படைச்சிருக்கானோ?
அப்பா, நான் எப்போதும் போற சிவகாசி பஸ் வருதுங்கப்பா. நான் வேலைக்குப் போகட்டா? ட்ரைவர் சன்னல் வழியா பார்க்கிறாருப்பா. கண்டக்டரும் பார்க்கிறாருப்பா. அட ரெண்டு பேருமே இறங்கி வாராங்கப்பா. நம்ம வீட்டுக்குதே வாராங்க. அவங்கள கூப்பிடுங்கப்பா. ரெண்டு அண்ணன்களும் தங்கமானவங்க தெரியுமா?
இனிமே என்னை நீங்க கண்ணம்மானுதே கூப்பிடணும், சரியா? கண்ணு ,கண்ணுனு கூப்பிடுறீங்களா, அதைக் கேட்டுட்டு என் தோழிங்க மூக்கு, வாயி, காதுனு கேலியா கூப்பிடுறாங்க. அதனாலே இனி நீங்க கண்ணம்மானுதே கூப்பிடணும். எனக்கு பேரு நீங்க தானே வச்சீங்க. பிறகு ஏன்ப்பா கண்ணு, ஆத்தா , ஆயானு கூப்பிடுறீங்க?
அப்பா, நம்ம சொக்கன் வந்திருக்கான்பா. அவனுக்கிட்ட இரவல் கொடுத்த கோடாளிய இன்னும் நீங்க வாங்கவே இல்ல. அப்பா, உங்கக்கிட்ட வெத்திலை வாங்கி போடுமே ரெங்கன் தாத்தா, அவரும் வந்திருக்காருப்பா. இனி அவருக்குச் சுண்ணாம்பு கூட கொடுக்காதீங்க . அவரு நேற்றைக்கு என்னை ஏய் மூக்கினு பட்டப் பேர்ச்சொல்லி கூப்பிட்டாருப்பா. அது மட்டுமா சொன்னாரு, நான் கருப்பியாம். எனக்கு மாப்பிள்ளையே கிடைக்காதாம். அதனாலே அவரை நான் கட்டிக்கிறனுமாம். அந்த கிழவாடிக்கு எவ்ளோ கொழுப்புனு பார்த்தீங்களா? ஆனா ஒன்னுப்பா. நான் உங்க மகங்கிறதனாலே எனக்கு எதாவது ஒன்னுனா அவருக்குப் பகீர்னு ஆயிடும்ப்பா. எனக்குப் பிடித்தமான தாத்தா அவருதான்ப்பா. அவரு வந்திருக்காரு. அவரையும் கூப்பிடுங்கப்பா.
அப்பா, எனக்கு சொல்லிக் கொடுத்த சாருங்க, டீச்சருங்க வந்திருக்காங்க. பள்ளிக்கூடத்த லீவு விட்டுட்டு வந்திருக்காங்க. என்னோட தோழிங்களும் வந்திருக்காங்க. அப்பா, ப்ளீஸ்ப்பா. அவங்கள கூப்பிடுங்க. அம்மா மட்டும் கூப்பிட்டா பத்தாது. நீங்களும் கூப்பிடுங்க.
அப்பா, தம்பி வந்துட்டான்ப்பா. புத்தகப்பைய வச்சிட்டு வெறுங்கையோட வாறான். ப்ளீஸ்ப்பா, அவனை திட்டிறாதீங்க. ஓடி வாறான்பா. அவனை மெதுவா வரச்சொல்லுங்க. அழுதுக்கிட்டு வாறான்ப்பா. அவனை என்ன, ஏதுனு கேளுங்க. படுத்துக்கிடந்தது போதும் எழுந்திரிங்கப்பா.
நம்ம ஊரு குடியான சனங்க எல்லாம் வந்திருக்காங்க. அவங்களுக்கு நீங்க மரியாதை கொடுக்குறீங்களா இல்லையாப்பா? நாளைக்கு நான் வெளியே தலைக்காட்ட முடியாது. எழுந்திருச்சி அவங்கள கும்பிடுங்க. வீட்டுக்கு வந்தோம் மதிக்கலைனு டீக்கடையில பேசிக்கிருவாங்க. ஏன்ப்பா, நான் சொல்கிற எதுவும் உங்கக் காதில விழலையா? என் மேல உங்களுக்குப் பாசமே இல்ல. அப்படிதானே, சொல்லுங்கப்பா“
![]()
கண்ணம்மா, என் செல்லமே. நான் பெத்த தங்கமே. நான் செத்து நீ இருந்திருந்தா நீ இப்படியெல்லாம் சொல்லி என்னைக் கட்டிப்பிடித்து அழுது தீர்த்திருப்பியே. நான் என்னத்தடா சொல்லி அழ? சொல்லுடா, நான் எதைச் சொல்லி அழ? நான் உன்னெ படிக்க வைக்காததச் சொல்லி அழட்டா? இந்தச் சின்ன வயசுல குடும்பப் பாரத்த ஏத்துக்கிட்டியே அதைச் சொல்லி அழட்டா? ஒரு நாளு கூட வீட்ல தங்காம வேலைக்குப் போவீயே, அதைச் சொல்லி அழட்டா? சொல்லுடா கண்ணு. நான் எதைச் சொல்லி அழ? இதோ என் கைல நவெ இருக்குடா. எங்கேடா உன் காது? இது உன் காது இல்லைடா. உன் காதில்ல. உன் காது இப்படி கருகிப்போயிருக்காது.
கண்ணம்மா, சமைக்கிறப்ப காய்கறி கருகிப்போனாலே உன்னால பொறுக்க முடியாதே. இதெ எப்படிடா பொறுத்துக்கிட்ட? கருப்பா இருந்தாலும் அழகா இருப்பீயே. இப்பப் பட்டாசுத் தீயில கருகிப்போயிருக்கீயே. ஆயா,ஆத்தா, கண்ணு, கண்ணம்மா…வ் ”..
அண்டனூர் சுரா.
![]()