தானாடாது போனாலும்! ….. ( சிறுகதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

![]()
நெல்லை உரலில் இட்டு உலக்கையால் குத்தி அதன் சத்து சிறிதளவும் வீணாகாமல் அரிசியாக்கினார்கள். அந்த அரிசியை மண்பானையில் சோறாக்கினர். அம்மியில் வைத்து அரைத்த மசாலாவுடன்தோட்டத்தில் இயற்கை உரத்தால் வளர்ந்த காய்களுடன் சேர்த்து கறி சமைத்தனர். குடிப்பதற்கு கிணற்று நீர் ஆற்று நீர் என சுத்தமும் சுகாதரமான நீர். இந்தச் சூழலில் வாழ்ந்த வாழ்க்கையைப் போல் மனிதஉறவுகளும் கலப்படமின்றி இயல்பாய் இயங்கின. நல்லதையும் கெட்டதையும் முறையே பாராட்டவும் குறைகூறவும் பாகுபாடு பார்க்காத மனித மனம் மேம்பட்டிருந்தது.ஆனால் இன்று கலப்படம் மனிதன் உண்ணும் உணவுப் பொருட்களில் மட்டும் அல்ல மனித மனங்களிலும் கலப்படம் தலைகாட்டியுள்ளது. பிசிராந்தையாரை முன்பின் காணாத போதும் அவர் இறந்த செய்திகேட்டு உயிர்நீத்தான் கோப்பெருஞ்சோழன். இங்கு நட்பைக் காட்டிலும் அதையும் கடந்த மனிதம் உயிர்த்திருந்ததை நாம் அறிவோம்.சம்பந்தா சம்பந்தமில்லாமல் இன்று ஏன் செய்தித்தாள் படித்துக் கொண்டிருப்வர் தானாகவே புலம்பிக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணியபடியே கோகுலாம்பாள் கணவர் சடகோபனருகே வந்தவள்,“ஏங்க செய்தித்தாளை வாசிக்கீங்களா, இல்லன்னா பாட்டுப் பாடுறீங்களா?” என்றாள்.“கோகீ, என்னைப் பார்த்தா உனக்கு பாடறமாதிரியா தெரியுது? உனக்கும் வரவர வித்தியாசமே தெரியல. ஊர் உலகமே தலை கீழ மாறுகிறப்ப நீ என்ன செய்வ?”“அட நான் என்னங்க தலகீழ மாறிட்டேன். நீங்க குஷியானா பாடுவேளே அதைத்தான் சொன்னேன்.”“அட நீ ஒன்னு, இங்க நடக்கிற கூத்தப்பாத்து கொந்தளித்தால் உனக்கு பாடுவதாகத் தெரிகிறதா?” என்றார்.“அப்படி என்ன கூத்த கண்டுபுட்டேள், கொந்தளிக்க?”மனைவி கேட்ட கேள்விக்கு விளக்கம் கொடுக்கலானார். எப்பேர்ப்பட்ட நடிகர் நடித்தாலும் அந்த தியேட்டரில் சுமாரான கூட்டம்தான் வரும். ஆனால் நடிகர் சித்ராங்கன் நடித்த படத்துக்கு ரசிகர்களும் அவரது மன்றங்களும் எப்படியோ முதல்வாரத்தில் தியேட்டரை நிறைத்து விட்டார்கள். நம்ம எதிர்வீட்டு கோகுலனும் பார்த்துட்டு வந்து சொன்னான். படம் சுமார்தானாம். அவனது ரசிகர்கள்தான்ஆஹா ஓஹோவென்று பெரிது படுத்துகிறார்கள் என்றான்.அதைப் போலவே இந்த செய்தித்தாளிலும் வரலாறு காணாத மாபரும் திரைப்படம் என்று விளம்பரம் செய்துள்ளார்கள். இதைவிட சிறந்த படம் வந்தபோதெல்லாம் இப்படியொரு விளம்பரத்தைக் கண்டதில்லை. அதைத்தான் பும்பிக் கொண்டிருந்தேன் என்று விபரத்தை சொன்னார்.அதற்கு கோகிலம் நீங்க இன்னும் உலகம் புரியாத அப்பாவியா இருக்கீங்க. இப்ப நிலமையே வேறு. நாட்டில நடக்குற நடப்ப சொல்றன் கேளுங்க என்று படபடவென சொன்னாள். நம்ம முயல் மார்க் சோப்பு நாமெல்லாம் சிறு பிள்ளையா இருக்கும் போதிருந்தே இருக்கு. அவ்வளவு நுரை. இன்றைக்கும் துணி துவைத்தால் அவ்வளவு சுத்தமாக அழுக்கெல்லாம் போய் புதுத்துணி போன்றிருக்கும். ஆனால் இப்ப கொஞ்ச நாளா குயில் மார்க் சோப்புன்னு ஒன்னு வந்திருக்கு.ஆனா அந்த சோப்பைபற்றி அப்படிப் பெருமையாகப் பேசுறார் கடைக்கார கந்தசாமி. அதுமட்டுமில்ல நம்ம தெருவில இருக்குற நாலஞ்சு பொம்பளைகளும் அப்படித்தான் சொல்றாளுவ. நானும் அப்படி அந்த சோப்பில என்னதான் இருக்குன்னு பாப்போம்னு ஒரு சோப்பு வாங்கினேன். தேய்க்க தேய்க்க நுரையே வரமாட்டேங்குது. ரொம்ப நேரம்கழிச்சுதான் நுரையே வருது. ஆனால் சோப்பு சீக்கிரம் கரையுறதில்ல. அதனால்தான் அந்த சோப்ப பெருமையா பேசுறாங்க போலகிடக்கு என்று கோகிலம் சொல்லி முடித்ததும்,“கோகீ, ஒனக்குத்தான் விவரம் பத்தல என்பத நினைக்க ஆத்தாமயா இருக்கு. இந்த படத்தை பாராட்டுறனுவ எல்லாம் அந்த நடிகரோட ரசிகர்கள்தான். அதப்போலத்தான் இந்த சோப்பும்” என்றார்.“சோப்புக்கு ஏதுங்க ரசிகர் மன்றமும் ரசிகர்களும்? நீங்களும் உங்க விளக்கமும்.”“அட நீ ஒரு வெள்ளேந்தி. அந்த சோப்ப தயாரிக்கிறவங்க யாரு? நம்ம தெருவுல அந்த சோப்பபத்தி பெருமையா பேசியவங்க யாரு? கூட்டி கழிச்சு பாரு புரியும்” என்றார் சடகோபன்.“என்ன கூட்டலோ என்ன கழித்தலோ. சொல்லவருவத சுற்றி வளைக்காம சொல்லுங்க”திரும்பவும் மனைவிக்கு விபரமாகச் சொன்னான். கோகீ, நீ ஒரு வெள்ளேந்தி என்பது உண்மைதான். அவங்கள்ளாம் ஒரே இனம். தமிழில் படித்தாலும் தமிழே பேசினாலும் அவர்கள் வீட்டில் பேசுவது வேறு. நாம் அவர்களைத் தமிழராய் பாரத்தாலும் அவர்களில் சிலர் இப்படித்தான் இருப்பார்கள். பெரும்பாலானோர் எப்படி என்பதை நாம் பார்க்க வேண்டும். அதற்காக அவர்களைக் குறைகூறவும் முடியாது ஏனென்றால் குறுகிய மனதுக்கும் பரந்த மனதுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.இன்னும் உனக்கு புரியிற மாதிரி சொல்லனும்னா பரந்த மனதுக்காரர்கள் நான் சொன்ன திரைப்படம் நீ சொன்ன துவைக்கிற சோப்பு போன்றவற்றிற்கு கிடைக்கும் வரவேற்பு போன்றவையெல்லாம் யதார்த்தமென எளிதாக கடந்து செல்வார்கள். நீயும் நானும்தான் மாற வேண்டும் என்றான்.ஆமாங்க நீங்க சொல்றது உண்மைதான். தமிழ் நாட்டிலேயே வாழ்பவர்களின் ஒரு நிறுவனம் தமிழ்நாட்டிலேயே உற்பத்தியை தொடங்கினார்கள். தமிழ்நாட்டிலேயே பிரபலமாகி பெரிய வளர்ச்சியைக் கண்டதும் இப்ப அவர்களின் உற்பத்தி பொருளின் உறையில் தமது மொழிக்கும் மற்ற மொழிகளுக்கும் கொடுக்கப்பட்ட இடத்தை தமிழுக்கு தரவில்லையல்லவா? என்று நாட்டு நடப்பைச் சொன்னாள்.ஆம் என்று ஆமோதித்த சடகோபன் தான் ஆடாது போனாலும் தன் தசையாடும் என்பது இதுதான். ஆடிவிட்டுப் போகட்டும். பாராட்டாட்டா பரவாயில்ல. நல்லத யாராலும் குறைசொல்ல முடியாதுல்ல. இவ்வளவு பேசும் இவர்கள் வீட்டிலும் நமது திருக்குறளும் இருக்கும் முயல் மார்க் சோப்பும் இருக்கும் என்றதும் அவளும் ஆம் என்பதுபோல் தலையசைத்தாள்.-சங்கர சுப்பிரமணியன்.
![]()