கதைகள்

நடுகைக்காரி!…. 40 …. ஏலையா க.முருகதாசன்.

தெல்லிப்பழைப் பலநோக்கக் கூட்டுறவுச் சங்கத்தில் நடக்கவிருக்கின்று இன்ரவியூவுக்கு போய்க் கொண்டிருந்த ஞானம் பாறுவைச் சந்திச்சுவிட்டுப் போனால் நிம்தியும்,மகிழ்ச்சியும்;;, புத்துணர்ச்சியும் கிடைக்குமென்ற எண்ணத்துடன்,அவளின் வீட்டை நோக்கிப் போனவன் கண்ணில் பாறு தன் வீட்டுப் படலையடியில் இரண்டு கைகளிலும் எதையோ வைச்சுக் கொண்டிருப்பதைக் காண்கிறான்.

பாறுவுக்கும், தனது காதலன் எப்படியும் தன்னைப் பார்க்காமல் இன்ரவியூவுக்குப் போகமாட்டார் என்ற எண்ணம் இருந்ததால் காலமை நேரேத்தோடை எழும்பி தோய்ஞ்சு,ஈரமெடுத்து தலையை நல்லாய் உலர்த்திக் காயவிட்டு,வீட்டிலை சுவாமி கும்பிட்டிட்டு ஒரு உள்ளங்கையில் திருநீற்றுடனும் இன்னொரு கையில் வெள்ளித் தேத்தண்ணிக் கோப்பையில் தேநீருடனும் படலையடியில் காத்திருந்தவளுக்க ஞானம் தன்னை நோக்கி வருவதைக் கண்டதும் தனது காத்திருப்பு வீண் போகவில்லை புளியடி வைரவர் தனக்கு உதவியிருக்கிறார் என நினைத்து மகிழ்ச்சியடைந்தாள்.

அவளருகில் வந்து ஞானம் ஒரு காலை ஊன்றி சைக்கிளில் இருந்தபடி இருக்க,’இன்ரவியூவுக்க தேவையான சேர்ட்டிபிக்கட் எல்லாத்தையும் எடுத்திட்டியளா என்று சொல்லிக் கொண்டவள் „குணியுங்கள் „ என்று சொல்ல அவனும் குனிஞ்சு கொள்ள’ இதைப் பிடியுங்கள் „ என்று தேத்தண்ணிக் கோப்பையை அவன் கையில் குடுத்துவிட்டு,தனது இடது உள்ளங்கையிலிருந்த திருநீற்றை வலது கைவிரல்களால் எடுத்துப் ஞானத்தின் நெற்றியில் பூசி விட்டவள் மிகுதித் திருநீற்றைத் தனது நெற்றியிலும் பூசிட்டு மிகுதியை வேலி கிடுகில் தட்டிக் கொட்டினாள்.

„ என்ன தந்த தேத்தண்ணியை வைச்சுக் கொண்டேயிருக்கிறியள், குடியுங்கள் வாறன் „என்றவள் வேகமாக முற்றத்தைக் கடந்து அடுப்படிக்குள் போனவள் அதே வேகத்தில் வாழையிலைக்குள் தோசைகள் இரண்டைச் சுற்றிக் கொண்டும், ஒரு செம்பில் தண்ணீரையும் கொண்டு வந்தவள்’ பொறுங்கள் இனிப் பிறகு தேத்தண்ணியைக் குடியுங்கள்,முதலிலை இந்தத் தோசைகள் இரண்டையும் சாப்பிடுங்கள்..ம்..கெதியிலை சாப்பிடுங்கள் „ என்று சொல்லியபடியே தேத்தண்ணிக் கோப்பையை வாங்கிய பாறு வாழையிலையிலை சுற்றிக் கொண்டு வந்த தேசையை ஞானத்திடம் குடுக்கிறாள் ஞானம் வாழையிலையை விரித்த போது இரண்டு தோசைகளுக்கும் மேலே தனித்தனியாக சம்பலை பரவி விடப்படடிருந்ததைக் கண்ட ஞானம் தோசையைச் சுருட்டிச் சாப்பிடத் தொடங்கினான்.

„உங்களுக்கு இப்படிச் சாப்பிடப் பிடிக்கும் என்று தெரிஞ்சுதான் தோசைகளுக்கு மேலை சம்பலைப் பரவி எடுத்துக் கொண்டு வந்தனான் „ என்று தோசை வைச்சிருந்த வாழையிலையை வாங்கியவள்,இந்தாங்க தண்ணி ஒரு மிடறு

குடியுங்கள் „ என்று தண்ணியோடு கீழை நிலத்திலை வைச்சிருந்து செம்பை எடுத்துக் குடுக்க அவனும் குச்சுவிட்டு குடுக்க, அதை வாங்கி மீண்டும் கீழை வைச்சுவிட்டு வாழையிலையோடு தோசையைக் குடுக்க,அவனும் அதை வாங்கி அடுத்த ; தோசையைச் சுருட்டி வேகம் வேகமாகச் சாப்பிடுவதைக் கண்ட பாறு இப்படி வாய்க்குள்ளை அடைஞ்சு சாப்பிடாதையுங்கோ, அவசரப்பட வேண்டாம் இன்ரவியூவுக்கு நேரம் கிடக்குது ஆறுதலாய்ச் சாப்பிடுங்கோ „ என்று பாறு சொல்ல,’ இப்பத்தானே கெதியிலை சாப்பிடுங்கோ „ என்று சொன்னனீங்கள் „ என்று ஞானம் சொல்ல’ ஐயோ வைரவரே நான் ஒரு கதைக்குச் சொன்னனான், அதுக்காக விக்கல் வரும் அளவுக்கு சாப்பிடுவதா’ என்று அவள் சொல்லி முடிக்க முந்தி ஞானத்திற்கு புரைக்கேற, அவன் பாறுவின் முகத்திற்கு நேரே இருமக்கூடாது என்று நினைச்சு முகத்தைத் திருப்பி இருமுகிறான்.

„இதுக்குத்தான் சொன்னனான் அவுக்கவுக்காய்ச் சாப்பிட வேண்டாம் என்று „ என்று சொல்லிக் கோண்டே கால்களால் கொஞ்சம் எம்பி நடு உச்சியைத் தட்டி விடுகிறாள்.

அவள் எம்பிய போது அவளின் மார்பு ஞானத்தின் தோளில் உரசவே பாறுவின் முகம் வெட்கத்தால் சிவந்து விடுகிறது.தலையைக் குனிஞ்சு கொண்டே „ இந்தாங்க தேத்தண்ணி ஆறப் போகுது கெதியிலை குடிச்சிட்டு கையைக் கழுவிப் போட்டு போங்கோ’ என்று சொல்லிக் கொண்டே அவன் குடுத்த வாழையிலையை மடிச்சு வேலியில் செருகியவள், செம்பை எடுத்து ஞானம் சாப்பிட்ட கைக்கு தண்ணியை ஊற்ற கையைக் கழுவிய ஞானம் கையை உதற „ இங்கை துடையுங்கள் எனத் தனது சட்டையின் கீழ் விழும்புப் பகுதியைக் காட்டியவள் அவன் கைகளால் சட்மைடயின் விளும்பைத் தூக்கப் போக„ஆ..அ…நீங்கள் குனிஞ்சு கையைத் துடையுங்கள் „என்றவள் வெட்கத்துடன் தலையைத் திருப்பினாலும் கடைக்கண்ணால் வீட்டைப் பார்த்தாள்.

„ஞானம் தனது சட்டையின் கீழ் விளும்புப் பகுதியில் கையைத் துடைச்சதை அம்மா கவனிக்கவில்லை என்பதுடன் முற்றத்தடியிலும் அம்மா இல்லை என்பதால் அவளுக்கு நிம்மதியாகவிருந்து.

தேத்தண்ணியைக் குடிச்சு முடிச்ச ஞானம்,’நான் கேட்க வேண்டும் நினைச்சனான், உங்கடை அப்பா அம்மாவுக்கு தெரியுமோ இண்டைக்கு எனக்கு இன்ரவியூ இருக்குது’ என்று அவன் கேட்க, „உங்கட மாமா மாமிக்குத் தெரியும், அது மட்டுமில்லை அம்மா இராத்திரிச் சொன்னவா ஞானம் தம்பிக்கு நாளைக்கு யூனியனிலை இன்ரவியூ இருக்குது என்று சொன்னனி, காலமை நேரத்தோடை எழும்பி கும்பிட்டிட்டு படத்தடியிலை கிடக்கிற திருநீற்றைக் குடு,போகேக்கிலை பூசிக் கொண்டு போனால் நல்லது என்று அம்மா சொன்னவா,பிறகு கேட்டா காலமை இஞ்சை வந்திட்டுத்தானே போவார் என்றும் கேட்டா, அதற்கு நான் தெரியாதம்மா அவர் ஏன் இங்கை வரப் போறார் „ என்று சொன்னன் ஆனால் என்னுடைய உள்மனம் நீங்கள் இங்கை வந்து என்னைப் பார்த்திட்:டுத்தான் போவீங்கள் என்று சொல்லிக் கொண்டேயிருந்தது „ என்று பாறு சொன்னாள்.

„இப்ப இந்த நேரம் ஆளையாள் தெரியாத ஒரு செக்கல் பொழுதைத் தாண்டிய இரவாயிருந்தால் எவ்வளவு நல்லதாயிருக்கும்’ என்று பூடகமாக ஞானம் சொன்னதைக் கேட்ட பாறு,’நினைச்சன் குனிஞ்சு என்னுடைய சட்டை விளிம்பிலை கையைத் துடைக்கேக்கிலை உங்கடை மூச்சுச் சூடு என்ரை துடையிலை படேக்கையிலை யோசிச்சன் உங்கடை மனநிலை இப்ப எப்படியிருக்கும் என்று’ என்று சொன்னவள், தனது சட்டையின் நெஞ்சுப்: பகுதியிலிருந்து நெருப்பெட்டியையும் ஒரு தாளில் மடிச்சு வைச்ச மூன்று கற்பூரக் கட்டிகளை எடுத்து „இந்தாங்க’ என்று ஞானத்தின் கையில் குடுத்தவள்,’இதிலை மூன்று கற்பூரக் கட்டிகள் இருக்கு,முதலிலை ஒரு கற்பூரத்தை போற வழியிலை இருக்கிற காளிகோவிலுக்கு கொழுத்திக் கும்பிட்டிட்டுப் பிறகு அடுத்த கற்பூரத்தை புளியடி வைரவருக்கு கொழுத்திக் கும்பிட்டிட்டு மூன்றாவதைக் கோண்டு போய் முத்துமாரியம்மனுக்கு கொழுத்திக் கும்பிட்டிட்டுப் போங்க’ என்று குடுக்கிறாள்.

„சரி நான் வாறன் „ என்ற ஞானம், பாறுவின் முகத்திற்கு நேரே தனது முகத்தைக் கொண்டு போக ஞானம் என்ன செய்யப் போகிறான் என்பதை உணர்ந்த பாறு’ என்ன நீங்கள் இப்ப பகல் நேரமென்று தெரியாதா உங்களுக்கு அதுவும் ஒழுங்கையிலை….அங்கை நின்ற அம்மா பார்த்திட்டா பெரிய பிரச்சினையாகிடும், அம்மாவுக்கு எங்கள் இரண்டு பேரிலையும் சந்தேகம் இருக்குது, அதை அம்மா வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறா….ஒழுங்கையிலை போறவை வாறவை கண்டால் என்ன நடக்கும்,வேலியளுக்கும் கண்ணிருக்கு…போங்கள் மூன்று இடத்திலையும் கற்பூரத்தைக் கொழுத்தி கும்பிட்டிட்டு இன்ரவியூவுக்கு போய் அவை கேட்கிற கேள்விக்கு வடிவாய்ப் பதில் சொல்றதை முதலில் செய்யுங்கள் „ என்று சொன்னவள், அவன் சைக்கிள் பெடலை மிதிக்கத் தொடங்க,’பொழுதுபட வாருங்கள் இப்ப நீங்கள் எதற்கு ஆசைப்பட்டியளோ அது கிடைக்குமென்று „சொல்ல அவனும் உற்சாகமாக் போகத் தொடங்கினான்.

நீங்கள் ஆசைப்பட்டது கிடைக்கும் என்று பாறு தான் ஏன் சொன்னேன் என்பதை, அப்படி நான் சொன்னால் அவர் அந்த நினைப்பில் சந்தோசமாக இன்ரவியூவில் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்வார் என்று மனதில் நினைத்தவள் அவர் ஆசைப்பட்டதைப் பின்னேரம் குடுக்க வேணும் என்றும் நினைச்சுக் கொள்கிறாள்.

கிழக்குப் பக்க ஒழுங்கையால் சைக்கிளில் போய் காங்கேசன்துறை வீதியில் ஏறியவன் மேற்குப் பக்கமாக உள்ள காளி கோவிலடியில் சைக்கிளை நிற்பாட்டி கற்பூரம் கொழுத்தி கும்பிட்டிட்டு,தெற்குப் பக்கமாக இருநூறு மீற்றர் தூரம் போனவன் வீதியின் மேற்குப் பக்கமாகவிருந்த புளியடி வைரவவர் கோவிலடியில் சைக்கிளை நிற்பாட்டியவன் கற்பூரத்தைக் கொழுத்திவிட்டு கண்ணை மூடிக் கொண்டு சிலவிநாடிகள் கும்பிட்டவன், கண்ணைத் திறந்த போது தனக்கு இடது புறத்தில் தெல்லிப்பழைப் பலநோக்கக் கூட்டுறுவுச் சங்கத்தின் துணைத் தலைவரான சிவமகாராசா கும்பிட்டுக் கொண்டு நிற்பதைக் காண்கிறான்.

ஞானம் கண்டும் காணாத மாதிரி சைக்கிளை எடுத்துக் கொண்டு தெல்லிப்பழைச் சந்திவரை வந்து கிழக்குப் பக்கமாகப் போய் தெல்லிப்பழை ரயில் நிலையத்தைக் கடந்து முத்துமாரியம்மன் கோவிலின் கிழக்குப்புற வாசலுக்கு வந்தவன் ஏற்கனவே

கற்பூரங்கள் கொழுத்தி புகைபிடிச்சுப் போயிருந்த கோவிலின் முதல் படிக்கு கீழேயிருந்த கல்லில் கற்பூரத்தை வைச்சுக் கொழுத்தியவன் கண்ணை மூடிக் கொண்டு „தாயே எங்களுக்கு குலம் தெய்வமாக நின்று வழிநடத்தி வருகிறாய், நான் இப்ப போற இன்ரவியூவில் எடுபட்டு வேலை கிடைக்க அருள் செய்யம்மா.நான் வேலையானால்தான் எத்தனை பேர் எதிர்த்தாலும் எனது காதலி பாறுவைக் கல்யாணம் செய்ய முடியும்.என்னையும் பாறுவையும் நீதானம்மா சேர்த்து வைக்க வேணும்’ என்று மனதில் நினைச்சுக் கும்பிட்டவன்,மனம் நெகிழ்ந்து கும்பிட்டதால், கண்களின் கசிவைக் கைகளால் துடைத்தபடி சைக்கிளை எடுத்துக் கொண்டு தெல்லிப்பழைப் பலநோக்கக் கூட்டுறவுச் சங்கத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *