அல்லைப்பிட்டியிலிருந்து அய்ரோப்பா வரையில் அயராமல் இயங்கும் கலை, இலக்கியவாதி ஷோபா சக்தி!

புகலிட இலக்கியத்தில் மிகுந்த கவனத்தைப்பெற்ற படைப்பாளி ! ! …. முருகபூபதி.

அன்ரனிதாசன் யேசுதாசன் என்ற இயற்பெயரைக் கொண்டவரும், படைப்பிலக்கியம், நாடகம், திரைப்படம் முதலான துறைகளிலும் கால்பதித்து இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவரும் மிகுந்த கவனத்திற்குள்ளானவருமான ஷோபா சக்தி இம்மாதம் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தருகின்றார்.
அவர் சம்பந்தப்பட்ட நாடகத்தின் பயிற்சிக்காக சிட்னிக்கு வரும் அவர், அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் நிகழ்விலும் கலந்து சிறப்பிக்கின்றார்.
இந்நிகழ்வை சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான தெய்வீகன் ஒருங்கிணைத்துள்ளார்.
இதற்கு முன்னரும் சிட்னியில் வெற்றிகரமாக மேடையேறி பல காட்சிகளைக்கண்ட Count & Cracking நாடகத்தில் நடிப்பதற்காக வருகை தந்திருக்கும் ஷோபாசக்தி, முதல் தடவையாக மெல்பனுக்கு வருகிறார்.
இம்மாதம் 23 ஆம் திகதி ( 23-07-2022 ) சனிக்கிழமை மாலை 5-30 மணிக்கு, மெல்பனில் Vermont South Learning Centre மண்டபத்தில் ( 1 Karobran Drive, Vermont South VIC 3133. ) ஷோபாசக்தியுடனான சந்திப்பு இடம்பெறும். அத்துடன் அவரது புதிய நாவல் ஸலாம் அலைக் நூலும் அறிமுகப்படுத்தப்படும்.![]()
சிறுகதை, நாவல், விமர்சனம், நாடகம், திரைப்படம் முதலான துறைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் ஷோபாசக்தி புலம்பெயர்ந்து வாழும் பல படைப்பாளிகளுக்கு மத்தியில் மிகவும் துணிச்சலுடன் கருத்தாடலிலும் ஈடுபடுபவர். இவருடன் கருத்தியல் ரீதியாக முரண்படுபவர்கள் கூட இவரது படைப்புகளை விரும்பிப் படிக்கிறார்கள்.
இலங்கை வடபுலத்தில் அல்லைப்பிட்டி கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவர், தனது இளம் பராயத்திலேயே தமிழ் தேசியப் போராட்டத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்தவர். அரசியல் முழக்கங்களை உருவாக்கி சுவர்களில் எழுத ஆரம்பித்து, அரசியல் துண்டறிக்கைகள், கவிதைகள், நாடகம் எனப் பரப்புரை எழுத்துகளை எழுதியவாறே எழுத்துத் துறைக்குள் நுழைந்தவர்.
தனது இருபத்தைந்தாவது வயதில் பிரான்ஸில் புகலிடம் பெற்றார். இங்கே ‘புரட்சிக் கொம்யூனிஸ்ட் கழகம் ’ என்ற சர்வதேச ட்ரொட்ஸ்கிய அமைப்போடு இவருக்கு கிட்டிய தொடர்புகளினால், செவ்வியல் இலக்கியங்களும் நவீன இலக்கியங்களும் இவருக்கு அறிமுகமாயின. அந்த நாட்களில் அரசியலில் மாத்திரமல்லாமல் கலை இலக்கியத்திலும் அக்கட்சியால் பயிற்றுவிக்கப்பட்டவர். பீற்றர் ஸ்வாட்ஸ், நிக் பீம்ஸ், ஸ்டீவ், ஞானா முதலான மிகச் சிறந்த ஆளுமைகளிடம் கற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும் வாய்ப்புக் கிடைத்து, தனக்கான எழுத்தைக் கண்டடைந்தவர்.
ஷோபா சக்தியின் படைப்புமொழி தனித்துவமானது. எவரது சாயலும் இன்றி வித்தியாசமான அனுபவங்களை பேசியது. அத்துடன் இவரது பிரதிகள் ஆங்கிலத்திலும் வெளியாகியதையடுத்து ஆங்கில வாசகர்களிடத்திலும் கவனத்திற்குள்ளானவர்.
தனது பிரதிகளுக்கும் கருத்தியல்களுக்கும் எதிர்வினையாற்றுபவர்களுக்கு வீச்சான மொழியில் பதில்தரக்கூடியவர்.
ஷோபா சக்தியின் பெரும்பாலான சிறுகதைகள், நாவல்கள் இலங்கையின் உள்நாட்டுப்போரையும் அதன் விளைவுகளையும் மாத்திரமின்றி, ஈழத்தமிழர்களின் புகலிட வாழ்வுக்கோலங்களையும் பேசியவை.
ஈழத்து இலக்கியத்தில் ஒரு கூறாக அமைந்த போர்க்கால இலக்கியங்களில், வரலாறுகளே அவற்றின் புனைவுகளுக்கு ஆதாரமாகின்றன. இது தொடர்பாக ஷோபா சக்தியின் கூற்று இவ்வாறு அமைகிறது: “ எந்த வகை இலக்கியமெனினும்அது நடுவு நிலையோடு இருக்க வேண்டும். அரசியலில் நடுவு நிலைமை என்பது எந்தப் பக்கமும் சாராது இருத்தலல்ல. எந்தச் சந்தர்ப்பத்திலும் உண்மையை மறைக்காது பேசுதலே அரசியல் நடுவுநிலைமை. செய்திகளே வரலாறாகின்றன, வரலாறே இலக்கியப் புனைவுகளிற்கு
ஆதாரங்களாகின்றன என்ற ‘பொயின்டை’ நான் விளங்கிக்கொள்கின்றேன். செய்திகளாயிருந்தாலும் வரலாறாயிருந்தாலும் அவை – அவற்றைக் கட்டமைப்பவரின் பார்வைக் கோணத்திலிருந்தே கட்டமைக்கப்படுகின்றன. ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு வரலாறுகள் சாத்தியமே. எடுத்துக்காட்டாக ஒரு வரலாற்று நிகழ்வுக்கு மூன்று விதமான வரலாறுகள் வெவ்வேறு பார்வைக் கோணம் கொண்ட மூன்று தரப்புகளால் கட்டமைக்கப்படுகின்றன என வைத்துக்கொள்வோம். ஓர் இலக்கியவாதிக்கு இந்த மூன்று வரலாற்றுக் கோணங்களுமே முக்கியமானவை. இந்த வரலாறுகளின் அடிப்படையில் இலக்கியவாதியால் இன்னொரு வரலாறைக் கட்டமைக்க முடியும். அது நான்காவது வரலாற்றுக் கோணம். இலக்கியவாதியின் தரப்பு அது. எழுதப்பட்ட அல்லது சொல்லப்பட்ட வரலாற்றை அப்படியே பிரதியெடுப்பதல்ல இலக்கியம். வரலாற்றின் நுண் அலகுகளிற்குள் ஊடுருவி வரலாற்றை மறு ஆக்கம் செய்வதே படைப்பிலக்கியம். இலக்கியத்தை உபவரலாறு என்பார்கள்.
“ ஷோபசக்தி நடித்த ‘ செங்கடல்’ திரைப்படம் சந்தைப்படுத்தும் நோக்கத்தை முதன்மைப்படுத்தாமல் தயாரிக்கப்பட்டது. வணிக நிறுவனங்களின் கட்டுகளிற்குள் நிற்காமல் சுயாதீனமாக உருவாக்கப்பட்டது.
இராமேஸ்வரத்திலிருக்கும் ஈழத்து அகதிகள் குறித்தும் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் குறித்தும் அந்தப் படம் பேசியது. அகதிகளையும் மீனவர்களையும் நடிக்க வைத்து உருவாக்கப்பட்ட மக்கள் பங்கேற்புச் சினிமா ‘செங்கடல்’.
ஷோபா சக்தி நடித்த தீபன் திரைப்படம், கேர்ன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றிருக்கிறது.![]()
![]()
ஷோபா சக்தி , கொரில்லா , ம் , BOX , இச்சா , ஸலாம் அலைக் முதலான நாவல்களையும், தேசத்துரோகி , எம்.ஜி.ஆர். கொலை வழக்கு , கண்டி வீரன் முதலான சிறுகதைத் தொகுதிகளையும் வேலைக்காரிகளின் புத்தகம் ,![]()
முப்பது நிறச்சொல் ஆகிய கட்டுரை நூல்களையும் மேலும் சில நேர்காணல் தொகுப்புகளையும் வரவாக்கியிருப்பவர். அத்துடன் சில திரைப்படச் சுவடிகளையும் எழுதியிருப்பவர்.
குழந்தைப் போராளி, புஸ்பராணியின் அகாலம் – ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள், குவர்னிகா (GUERNICA) – ( யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பு மலர் ) தனுஜா முதலான
குறிப்பிடத்தகுந்த, வாசகர் மத்தியில் மிகுந்த கவனிப்பினைப் பெற்ற வரவுகளின் பதிப்பாசிரியருமாவார்.
ஷோபாசக்தி, தனது பூர்வீக கிராமமான அல்லைப்பிட்டியை மீண்டும் வந்து பார்க்கவேண்டுமென்ற கனவோடு வாழ்ந்துகொண்டிருப்பவர்.
பல வருடங்களாக புகலிடத்தில் எழுத்து, இயக்கம், நாடகம், திரைப்படம் என அலைந்துழன்றுகொண்டிருந்தாலும், பிறந்த ஊர்மீதான நேசத்துடன் அங்கு செல்லக்காத்திருப்பவர்.
கலை, இலக்கியத்திற்கு அப்பால் சுவாரசியமான கதையாடலுக்கும் நெருக்கமானவர்.
இறுதியாக வெளிவந்துள்ள இவரது நாவல் ஸலாம் அலைக் , புலம்பெயர்நாடுகளில் அகதியாக அலைந்துழன்று கொண்டிருப்பவர்களின் வாழ்வுக்கோலங்களை பேசுகின்றது.
இந்நூலைத் திறந்தவுடன் வாசகரின் கண்ணில் தென்படுவது இந்த வரிகளே: ![]()
“ ஒருவருடைய இனக்குழு, மதம், தேசிய இனம், குறிப்பிட்ட ஒரு சமூகக் குழுவின் உறுப்புரிமை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் காரணமாகவோ அல்லது அவர் வெளிப்படுத்திய அரசியல் கருத்துக்களுக்காகவோ தனது நாட்டில் துன்புறுத்தப்படலாம் என்று நிரூபணமாகக் கூடிய அச்சத்தால், அவர் இன்னொரு நாட்டுக்குப் புலம்பெயர்ந்தால், அவரை ஓர் அரசியல் அகதியாகக கருதி, அவருக்கு பாதுகாப்பும் அடிப்படை உரிமைகளும் வழங்கப்படவேண்டும். “
Geneva Convention 1951
ஈழத்து இலக்கியத்தின் மற்றும் ஒரு பரிமாணமாகத் திகழும் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தை புதிய படைப்புமொழியால் உச்சத்திற்கு எடுத்துச்சென்ற ஷோபா சக்திக்கு எமது வாழ்த்துக்கள்.
—0—
![]()