பெண்களின் குரலாக ஒலித்த பத்மா சோமகாந்தன் ( 1934 – 2020 ) ஜூலை 15 நினைவு தினம்!…. முருகபூபதி.

பாடசாலைப்பருவத்தில் 1954 இல் மாணவியாக சுதந்திரனில் எழுதத்தொடங்கிய பத்மா, வீரகேசரி, ஈழகேசரி, தினபதி, தினக்குரல், உதயன், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் புதுமை இலக்கியம், சிற்பியின் கலைச்செல்வி, மற்றும் மல்லிகை, ஞானம், இலங்கை விகடன், தமிழகத்தில் வெளியான தாமரை, கல்கி, கலைக்கதிர் முதலானவற்றிலும், அமைப்புகளின் ஆண்டுமலர்கள், சிறப்புமலர்கள், நினைவு மலர்கள், மாநாட்டு, கருத்தரங்கு மலர்களிலும் எழுதியிருப்பவர்.
பின்னாளில் ஈழத்து இலக்கிய உலகில் பத்மா சோமகாந்தன் என பிரபல்யம் பெற்றவர்.
ஏழாம் வகுப்பு மாணவியாக இருந்த காலத்தில் எழுதத்தொடங்கியவர், உயர்வகுப்புக்குச்சென்றும் எழுதினார். திருமணமானதன் பின்னரும் எழுதினார். பிள்ளைகள் பெற்று குடும்பத்தலைவியானதன் பிறகும் எழுதினார். பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடும் காலப்பகுதியிலும் எழுதினார் இந்த அயற்சியற்ற ஆளுமை.
சுதந்திரன் பத்திரிகை 1954 இல் நடத்திய அகில இலங்கை சிறுகதைப்போட்டியில் முதல் பரிசுபெறுகிறார். இவருடன் போட்டியிட்ட, இரண்டு முக்கிய படைப்பாளிகள், இரண்டாம், மூன்றாம் பரிசுகளைப்பெற்றார்கள்.
அவர்கள்தான் டானியல், டொமினிக்ஜீவா ஆகியோர். பத்மா எழுதிய சிறுகதை இரத்தபாசம்.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில், பிரம்மஶ்ரீ ஏரம்பக்குருக்கள், ஶ்ரீமதி அமிர்தம்மாள் தம்பதியரின் செல்வப்புதல்வியாக பிறந்த பத்மாவுக்கும் சில சமூகப்பின்னணிகள் இருந்திருக்கின்றன. பெரியதந்தையார் பிரம்ம ஶ்ரீ தி. சதாசிவம் தற்காலத்திலிருக்கும் கல்விப்பணிப்பாளர் தகுதிக்குரிய வித்தியாதரிசகர். அத்துடன் கல்விமான். யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட ஆரிய திராவிட பாஷா விருத்திச்சங்கத்தின் ஸ்தாபகர். தாய்மாமன், பிரம்மஶ்ரீ மு.
சபாரத்தினம் அய்யர் அக்காலத்தில் வெளியான கவிகலாதீபம் என்ற பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தியவர்.
பத்மா பொதுப்பணிகளில் கலை, இலக்கியம் மற்றும் மகளிர் விவகாரங்களில் தொடர்ந்தும் உற்சாகமாக இயங்கினார். பயணங்கள் மேற்கொண்டார். பயிலரங்குகளில் உரையாற்றினார். இவரது பாரா முகங்கள் – சில பார்வைகள் நூலுக்கு தமிழக எழுத்தாளர் திலகவதி ( ஐ.பி.எஸ் ) முன்னுரை தந்துள்ளார்.
” இந்த நூல் வெறும் கேள்வி – பதில் கூறும் நூல் அல்ல. பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்த பிரச்சினைகளையும் அலசும் நூல். ஆசிரியர் பத்மா சோமகாந்தன் அவர்களின் பல்துறை அறிவையும் அனுபவங்களையும் விவேகத்தையும் அறிவிக்கும் நூல்” என்கிறார் இதற்கு அணிந்துரை எழுதியிருக்கும் செ. கணேசலிங்கன்.
இற்றைத்திங்கள் சிறுகதைத்தொகுதிக்கு அணிந்துரை எழுதியிருக்கும் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்த மூத்த படைப்பாளி பொன்னீலன்,” அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் என்ற புறநானூறில் இடம்பெற்ற பாடலை முன்னுதாரணமாக்கி, இன்றைய ஈழத்தின் துயர வரலாற்றை பதிவு செய்யும் கதைகளை எழுதி, இற்றைத்திங்கள் என்ற தலைப்பை குறியீடாக்கியிருப்பதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
நெஞ்சுக்கு நிம்மதி என்ற நூல் இளம்பெண்களது பிரச்சினைகளின் தீர்வுக்கான ஆலோசனைகளைக் கூறுகிறது. இதற்கு அன்னலட்சுமி இராஜதுரை முன்னுரை தந்திருக்கிறார்.
![]()
பத்மா சோமகாந்தன், தினக்குரல் ஞாயிறு இதழில் நூறுக்கும் மேற்பட்ட சாதனைப்பெண்கள் பற்றியும், கலைக்கேசரியில் 75 இற்கும் மேற்பட்ட இசை வல்லுனர்கள் பற்றியும் எழுதியிருப்பவர்.
இவை தவிர, பெண்ணின் குரல், சொல், அகவழி, சங்கத்தமிழ், பிரவாகினி ஆகிய இதழ்களில் ஆசிரியராகவும் இயங்கியவர்.
ஈழத்துச்சிறுகதை வளர்ச்சியில் பத்திரிகைகளின் பங்கு என்ற தலைப்பில் பத்மா சோமகாந்தன் எழுதிய கட்டுரை, முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1996 இல் கொழும்பில் நடத்திய இலக்கியப்பேரரங்கு விழாவில் வெளியிட்ட புதுமை இலக்கியம் மலரில் வெளிவந்துள்ளது.
கடவுளின் பூக்கள், வேள்வி மலர்கள், புதிய வார்ப்புகள், கரும்பலகைக் காப்பியங்கள், இற்றைத்திங்கள் முதலான சில சிறுகதைத்தொகுப்புகளை வரவாக்கியிருக்கும் அவர்,![]()
![]()
இந்நூல்களுக்காக தமிழ் நாடு லில்லி தேவசிகாமணி பரிசு, சென்னை இந்து நாளிதழின் பாராட்டு, சார்க் மகளிர் சங்கத்தின் பரிசு, வடக்கு – கிழக்கு மாகாண அமைச்சின் சாகித்திய பரிசு பெற்றிருப்பவர்.
சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியில் தொடங்கி, சாந்தி சச்சிதானந்தம் வரையில் 23 பெண் ஆளுமைகள் குறித்து பத்மா சோமகாந்தன் எழுதியிருக்கும் மற்றும் ஒரு நூல் ஈழத்து மாண்புறு மகளிர். ஆன்மீகம், மருத்துவம், தொழில் நுட்பம், அறிவியல், கல்வி, மேடைப்பேச்சு, சமூகப்பணி, ஒலிபரப்பு, இதழியல் ஊடகம், இலக்கியம், நடனம், இசை, நிருவாகம், பதிப்புத்துறை முதலான பல்துறைகளிலும் ஈடுபட்டு சாதனைகள் புரிந்த பெண்கள் பற்றி எழுதியிருக்கிறார். இது தவிர ஈழத்து தமிழ்ப்பெண் ஆளுமைகள் என்ற நூலையும் வரவாக்கியிருக்கிறார்.
” நமது வரலாற்றை எழுதும்பொழுது, இனிமேலும் நாங்கள் மகளிர் வகிபாகத்தை மறத்தல் கூடாது என்பதை பத்மா எழுதிய ஈழத்து மாண்புறு மகளிர் நூல் அழுத்தமாகச்சொல்கிறது.” என்று இந்த நூலுக்கு முன்வாசகக்குறிப்பு எழுதியிருக்கிறார் பேராசிரியர் கா. சிவத்தம்பி.
இன்றும் எம் மத்தியில் திருமதி பத்மா சோமகாந்தன் நினைவுகளாக வாழ்கிறார்
—0—
![]()