நடுகைக்காரி!…. 39 …. ஏலையா க.முருகதாசன்.

![]()
தனக்கும் பாறுவுக்கும் உள்ள தொடர்பு பற்றி தமக்கை விபரமாக அறிஞ்சு வைச்சுக் கொண்டு
தங்களுடைய வீட்டுக்கு வந்து கோபமாக கதைச்சுவிட்டுப் போனதை நினைச்சவாறு அறைக்குள் போனவன் நெடுநேரமாகியும் வெளியே வராததால் இரவுச் சாப்பாட்டுக்காக தாய் கதவைத் திறந்து பார்த்தவள் அவன் நித்திரையாகியிருப்பதைக் கண்டதும் „ஞானம் எழும்பு இது என்ன புதுப்பழக்கம் செக்கல் பொழுதிலை படுத்து நித்திரை கொள்ளுறாய் இரவு எட்டு மணியாகுது சாப்பிட்டிட்டுப்படு எழும்பு’ என்று ஞானத்தை எழுப்புகிறாள் தாய்.
தமக்கை கதைதச்ச விதத்தை படுக்கையில் படுத்தபடியே எண்ணிய ஞானம் தன்னுடைய அப்பாவும் அம்மாவும் பாறுவைத் கல்யாணம் கட்டுவதற்குச் சம்மதித்தாலும் தனது மூத்த தமக்கை தனலட்சுமியும் மற்றைய அண்ணிமாரும் மச்சான்மாரும் எனக்கும் பார்வதிக்கும் போர்க்கொடி தூக்குவார்கள் என்பது நடந்தே தீரும்.அதையும் தாண்டியும் உடைத்தெறிந்துந்தான் பாறுவுக்கும் எனக்கும் கல்யாணத்தை நடத்த முடியம் என்று சிந்திச்சவன் அவனை அறியாமலே நித்திரையாகிவிட்டான்.
தாயார் இரவுச் சாப்பாட்டை சாப்பிட வரச்சொல்லி எழுப்பியதுந்தான் நாளைக்கு தெல்லிப்பழை யூனியனில் நடக்கப் போகிற இன்ரர்வியூவின்; ஞாபகம் மீண்டும் ஞானத்திற்கு வந்தது.
தகப்பனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்ட ஞானம் தமக்கை வந்து சொல்லிவிட்டுப் போன வார்த்தைகளால் தகப்பன் என்ன நினைச்சிருப்பாரோ என்ற தயக்கத்தில் அவரைப் பார்க்கத் தயங்கிக் குனிஞ்ச தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
தனக்கும் பாறுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்பது போல தாய்தகப்பன் நம்பும்படி தான் மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் விலாங்கு மீனைப் போல நடந்து கொள்கிறேனே என அவனுடைய மனம் குறுகுறுத்தது.
ஆனால் பாறுவுக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதை அவனுடைய தாய்க்கும் தகப்பனுக்கும் ஓரளவு தெரியுமென்பதை அவனும் உணர்ந்திருந்தான்.
„செல்வம் நாளைக்கு உனக்கு இன்ரர்வியூ இருக்குது யூனியனிலை, அதைப் பற்றி யோச,p கொக்கா வந்து சத்தம் போட்டதை ஒரு காதால் கேட்டு ஒரு காதால் விடு, அதை யோசித்துக் கொண்டிருக்காதை, நான் அறிஞ்சன் யூனியன் தலைவர் முருகையா மாஸ்ரர் அரசியல் கலந்த கேள்விதான் கேட்பாராம், அதுக்குச் சரியான பதில் சொல்வாய் என்று தெரியும்,சிவமகாராசா தமிழரசுக்கட்சிக் காங்கேசன்துறைத் தொகுதியின் முக்கியபொறுப்பாளராக இருப்பவர்,முருகையா மாஸ்ரர் சிறீலங்காக சுதந்திரக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதிப் பொறுப்பாளர்.இவை இரண்டு பேற்றையின்ரை கட்சிச் சண்டையிலை கேள்விகள் இடக்கு மடக்காக இருக்கும் கவனமாகப் பதில் சொல்.பசுபதியும் சிவஞானமும் கறாரான நேர்மையானவர்கள் அவர்களிருவரும் சங்கக்கடைகளில் நடக்கும் ஊழல்களை எப்படித் தடுக்கலாம்
எனக் கேள்விகள் கேட்பார்கள், புத்திசாலித்தனமாக பதில் சொல்,சரி நல்லாய்ச் சாப்பிட்டிட்டு எதையும் யோசிக்காமல் போய்ப்படு இஞ்ரப்பா எனக்குப் போதும் என்றவர்,புட்டும் மீன்குழம்பும் போட்டுச் சாப்பிட்ட வாழையிலையைத் தூக்கிக் கொண்டு வெளியே போய் போட்டுவிட்டு,முற்றத்து வாளியிலிருந்த தண்ணியில் கைகழுவுp வாய் கொப்பளிச்சிட்டு விறாந்தைக்கு வந்தவர்,அங்கு சிறிய காட்போட் மட்டையால் மூடி வைத்திருந்த செம்பிலிருந்த தண்ணியைக் குடிச்சதற்குப் பிறகு பாக்கு வெத்திலைத் தட்டத்தை எடுத்து மடியில் வைச்சபடி பாக்கு வெத்திலை போட்டுக் கொண்டிருந்தார்.
தகப்பன்,தாய் ஞானம் மூவரும் ஒன்றாகத்தான் சாப்பிடத் தொடங்கியவர்கள்.மகனுடன் தாய் கதைக்கட்டும் என்பதற்காகத்தான் தகப்பன் எழுந்து போனவர்.
அவர் எழுந்து போனதும்’ அம்மா அப்பா யாருடனும் அதிகமாக கதைப்பதில்லை, எப்படியம்மா யூனியனிலை உள்ளவையைப் பற்றி இவ்வளவு தெரிஞ்சு வைச்சிருக்கிறார் நம்ப முடியாமலிருக்கிறது „ என்கிறான் ஞானம்.
„கொப்பா யாருடனும் தேவைக்கு அதிகமாக வளவளாவென்று கதைக்க மாட்டார்.ஆனால் ஒருவர் சொல்வதை அலட்சியமாகக்;கேட்க மாட்டார்.;.ஒரு கிழமைக்கு முந்தி நான் சமையலுக்கு மிளகாய்த்தூள் வேணுமென்று சொல்லியிருப்பன், பின்னர் நானே அதை மறந்தும் விடுவன்.ஆனால் கொப்பா அதை ஞாபகத்தில் வைச்சிருந்து வீட்டில் செத்தல் மிளகாய் இல்லாவிட்டால்,கடையிலை போய் செத்தல் மிளகாயை வாங்கிக் கொண்டு வந்து வறுக்கச் சொல்லித் தரும் போது நான் கேட்பன் „இப்ப எதுக்கு செத்தல் மிளகாய் „என்று போன கிழமை சொன்னியளே மிளகாய்த்தூள் முடியப் போகுதென்று சொல்வார்.கொப்பாவுக்கு ஞாபக சக்தி அதிகம் „ என்று தாய் சொல்ல,தனக்கும் பாறுவுக்கும் உள்ள தொடர்பின் அதிஅந்தலை ஏதாவது தெரிந்திருக்குமோ’ என்று யோசித்த ஞானம் „ அம்மா….’ என்று தயங்க’ நீ தயங்குவதைப் பார்த்தால் கொக்கா வந்து துள்ளிக் குதிச்சுப் போட்டுப் போனதைப் பற்றி கேட்க நினைக்கிறியோ என்று „நினைக்கிறன் என்ற தாய்’ நானோ கொப்பாவோ அதைப்பற்றி எதுவுமே யோசிக்கவில்லை,நீ எங்களுக்குத் தெரியாமல் எதுவும் செய்ய மாட்டாய்,எங்களுக்குப் பொய்யும் சொல்ல மாட்டாய், இப்ப அதையெல்லாம் யோசிக்காமல் சாப்பிட்டிட்டு, முழிச்சிருந்து புத்தகம் ஏதாவது வாசிக்காமல் நேரத்தோடு நித்திரை கொள் „ என்று ஞானம் எதைக் கேட்க வேண்டுமென்று தயங்கினானோ அதைத் தாய் சொன்னதும்,தான் கேட்க நினைச்சதைத் தாய் சொன்னதும் திகைப்படைந்தாலும் தாயை நினைச்சு பெருமையடைஞ்சான்,அப்பாவுக்கு ஏற்ற அம்மாதான் என மனசுக்குள் மகிழ்ச்சியடைந்தான்.
நாளைக்கு யூனியனிலை நடக்கப் போற இன்ரர்வியூவுக்குப் போகும் தனது மகனின் மனதைக் குழப்பக்கூடாது என்பதற்காக தனக்கோ தனது கணவனுக்கோ எதுவும் தெரியாதது போல ஞானத்தின் தாய் நடித்தாள்.
ஆனால் தங்களுடைய மகன் பாறுவில் ஒரு ஈர்ப்புடனிருக்கிறான் என்பது ஞானத்தின் தாய்க்கும் தகப்பனுக்கும் நன்றாகவே தெரியும்.
அடுத்த நாள் காலமை ஐந்து மணிக்கே எழுந்த ஞானம் குளிச்சு முடிஞ்சு வந்து விறாந்தையிலிருந்த கதிரையில் உட்கார்ந்து கொண்டே என்னென்ன கேள்விகளைக் கேட்பார்களோ தெரியாது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
தாயார் கொண்டு வந்து கொடுத்த வேர்க்கொம்பு போட்டு வறுத்திடித்த கோப்பியை கொடுக்க அதை வாங்கிக் குடித்தவன், அறைக்குள் போய் நீளக்காற்சட்டையும் வெள்ளை அரைக்கைச்சட்டையும் போட்டுக் கொண்டு வர தாயார் „ ஞானம் இந்தா இதை கதிரையிலை இருந்தே சாப்பிடு „ என்று தோசை ஐந்தை வெள்ளித் தட்டில் வைத்துக் கொடுத்தவள் „மறக்காமல் தேவையான சேர்ட்டிபிக்கற் எல்லாத்தையும் கொண்டு போ’ என்று சொல்லியவாறு அடுப்படிக்குள் போகிறாள்.
சாப்பிட்டு முடிஞ்சதும், அறைக்குள் சேர்ட்டிபிக்கட்டுகளை எடுத்துக் கொண்டு கதிரையில் வைச்சவன்’ அம்மா அப்பா இரண்டு பேரும் இஞ்சை ஒருக்கா வாங்கோ’ என்று கூப்பிட அவர்களும் வருகிறார்கள்.
„ எனக்கு முன்னாலை சேர்ந்து நில்லுங்கோ’ என்றவன்:, அவர்கள் நின்றதும்;,அவர்களின் காலில் விழுந்து வணங்க, அவனைத் தூக்கி தோளில் தட்டிக்: கொடுத்தவர்கள், „முத்துமாரியம்மனை நினைச்சுக் கொண்டு கேள்விகளுக்கு பதில் சொல்’ என்று தாய் சொல்ல „அமைதியாக புத்திசாலித்தனமாகவும் பதில் சொல்ல வேணும் என்று தகப்பன் சொல்கிறார்.
வேகமாக அறைக்குள் போன தாய் போன வேகத்திலேNயு திரும்பி வந்து ஏற்கனவே ஞானம் நெற்றியில் பூசியிருந்த திருநீற்றுக்கு மேல் பூசிவிடுகிறாள்.’இரண்டு பேரும் சேர்ந்து சேர்ட்டிபிக்கட்டுகளை எடுத்துத் தாருங்கோ’ என்று ஞானம் கேட்க தகப்பனும் தாயும் சேர்ந்து எடுத்துக் கொடுக்கிறார்கள்.
தகப்பனிடமும் தாயிடமும் விடைபெற்றுக் கொண்டு ஞானம் சைக்கிளில் யூனியனை நோக்கிப் போனவன் நேரே தெல்லிப்பழைச் சந்திக்குப் போகாமல் சந்தையடி வடக்கு ஒழுங்கையால் பாறுவின் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.
பாறு தனது வீட்டுப் படலையடியில் ஞானத்திற்காக காத்துக் கொண்டிருந்தாள்.
(தொடரும்)
![]()