ஆண்கள் கழிவறையில், குழந்தைகளுக்கு டயாபர் மாற்றும் அறை!
பெங்களூரு சர்வதேச விமானநிலையத்திற்குள், ஆண்கள் கழிவறையில் இடம்பெற்றிருந்த அறை குறித்த புகைப்படம், சமூகவலைதளங்களில் வைரலாக பரவி பேசு பொருளாக மாறியது
தற்கால வாழ்க்கைச்சூழலில் குழந்தை வளர்ப்பில் ஆண்களுக்கு பங்கு உண்டு என உணர்த்தும் வகையில், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமானநிலையத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில், குழந்தைகளுக்கு டயாபர் மாற்றும் அறை இடம்பெற்றுள்ளது.
இது குறித்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்த சுகாடா என்ற பயனர், ‘இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஆண்கள் கழிப்பறையில் காணப்பட்ட டயாபர் மாற்றும் நிலையம். குழந்தை பராமரிப்பு என்பது ஒரு பெண்ணின் பொறுப்பு மட்டுமல்ல.’ என பதிவிட்டிருந்தார்.
பாலின சமத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவரது பதிவுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கான கமெண்டுகள் குவிந்தன. மேலும் விமானநிலைய நிர்வாகத்தின் முயற்சிக்கு ஏராளமானோர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
ஒரு டிவிட்டர் பயனர், ” பெரும்பாலான சர்வதேச விமான நிலையங்களில் இதைப் பார்த்திருக்கிறேன் ! ஆனால் இந்தியா படிப்படியாக, பாலின சமத்துவ கட்டமைப்பில் இணைவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” எனவும், மற்றொருவர், ”இது விதிவிலக்கு என்பதை விட எல்லா இடங்களிலும் வழக்கமாக இருக்க வேண்டும்”, ”அழகானது” என பதிவிட்டுள்ளனர்.
சமீபத்தில் தான் தெற்காசிய, இந்திய அளவில், சிறந்த விமானநிலையமாக, பெங்களூரு சர்வதேச விமான நிலையம் தேர்வாகி சர்வதேச விருது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
![]()