பனை ஏறி பாச மனைவியை 82 வயதிலும் காப்பாற்றும் தாத்தா!
நெல்லை அருகே காரியாண்டியில் 80 வயதைக் கடந்த நிலையிலும் பனை மரம் ஏறி, கரம் பிடித்த ஆசை மனைவியை காப்பாற்றி வரும் துரைப்பாண்டி தாத்தா, அப்பகுதி மக்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார். ஓய்வு காலத்திலும் அவரது உழைப்பை கண்டு சுற்றுவட்டார மக்கள் பிரமித்து நிற்கின்றனர்.
இன்றைய இளைய சமுதாயம் 30 வயதிற்குள்ளாக ரத்த அழுத்தம், நீரழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறது. 40 வயதுக்கு மேல் நாட்பட்ட நோய்கள் எல்லாம் தாக்க தொடங்கி விடுகிறது. ஆனால் தள்ளாடும் 82 வயதிலும் தளராது பனை மரம் ஏறி தனது மனைவியை காப்பாற்றி, சுக ஜீவனம் நடத்தி வரும் துரைப்பாண்டி தாத்தா நாங்குநேரி வட்டாரத்தில் ஒரு நாயகனாகவே பார்க்கப்படுகிறார்.
நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகேயுள்ள காரியாண்டி கிராமம் நாடார் தெருவைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி (82). இவரது மனைவி வேலம்மாள்(78). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். தென்மாவட்டங்களின் கற்பக தருவாக கருதப்படும் பனைமரங்கள் முனைஞ்சிப்பட்டி சுற்றுவட்டாரத்தில் அதிகம் தென்படும். மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்று தர வேண்டும் என்பதற்கேற்ப தனது தாத்தாவின் வழியொட்டி 12 வயதிலே பனை மரம் ஏற துரைப்பாண்டி கற்றுக் கொண்டார்.
சிலுசிலுவென வீசும் காற்றுக்கு மத்தியில் நொங்கு, பனங்கிழங்கு, பதநீர், கருப்பட்டி என துரைப்பாண்டியின் இளமைக்காலம் காரியாண்டியில் கழிந்தது. பனை ஏறுவதை முழுநேர தொழிலாக கொண்ட துரைப்பாண்டிக்கு இளம் வயதில் பனைமரங்களே பாடம் சொல்லி தந்தன.
இளைஞராக உருவெடுத்தபோது, தென்மாவட்ட மக்களை அதிகம் வசீகரிக்கும் அரபி கடலோர காற்று துரைப்பாண்டியையும் துரத்தியது. திருமணமான நிலையில், துரைப்பாண்டி குடும்பத்துடன் மும்பையில் குடியேறினார். அங்கும் பனை மரம் ஏறும் வேலையை பார்த்து வந்துள்ளார்.
குறிப்பிட்ட காலம் மும்பையிலும், காரியாண்டியிலும் மாறி, மாறி அவரது வாழ்க்கை காய்ந்த பனை ஓலையாய் அல்லாடியது. ஆடி, ஆவணி மாதங்களில் மும்பைக்கு ரயில் ஏறி செல்லும் அவர், தை மாத வாக்கில் ஊருக்கு திரும்பி வருவது வழக்கமாக இருந்தது. மும்பையில் அவர் மல்லாடு, அந்தேரி, பாண்டூப், சாந்தவள்ளி என பல இடங்களில் பனை ஏறி பிழைப்பு நடத்தியுள்ளார்.
தனது குழந்தைகளின் திருமண வாழ்க்கைக்கு பின்னர், அவர்களை கரை சேர்த்த பெருமிதத்தோடு சொந்த ஊரான காரியாண்டியில் மீண்டும் துரைப்பாண்டி குடியேறிவிட்டார். தற்போது 82 வயதான துரைப்பாண்டி கடைசி காலத்தில் ஓய்வாக வாழலாம் என்று நினைத்த வேளையில் விதி அதற்கு வழி கொடுக்கவில்லை. உடனிருந்து பராமரிக்க யாரும் இல்லாததால் தனது பாச மனைவி வேலம்மாளை பட்டினி போட மனமில்லாமல் துரைப்பாண்டி தாத்தா, மீண்டும் பனை ஏறும் தொழிலில் களமிறங்கினார். இப்போது வரை யாரிடமும் கையேந்தாமல் பனை ஏறி பதநீர் எடுத்து, நொங்கு வெட்டி விற்பனை செய்து, தனது வாழ்க்கை ஜீவனத்தை நடத்தி வருகிறார்.
காக்கை கரையும் அதிகாலை வேளையில் பனை மரம் ஏறுவதை இப்போதும் வழக்கமாக கொண்டுள்ளார். வறுமையும், வயது மூப்பும் தள்ளாத வயதில் அவருக்கு தடைகளை ஏற்படுத்தினாலும், உழைப்பு என்ற ஒற்றை சொல்லால் அவற்றை ஓரம் கட்டி வருகிறார்.
இடுப்பில் அருவாள் மற்றும் சுண்ணாம்பு பெட்டி, பதநீர் குடுவையோடு, நெஞ்சுதோல் போர்த்தி காரியாண்டியில் பனை ஏற காத்திருந்த துரைப்பாண்டி தாத்தா இப்போதும் துடிப்போடுதான் பேசுகிறார். கூன் விழுந்த முதுகோடு இந்த வயதிலும் பனை ஏற்றம் குறித்து அவர் கூறுகையில், ‘‘எனது 12வது வயது முதல் பனை ஏறி வருகிறேன்.
அந்த காலத்தில் நாள் ஒன்றுக்கு 25 மரங்கள் கூட ஏறியுள்ளேன். இப்போது உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. மும்பையில் கூட 10 ஆண்டுகளுக்கும் மேலாக பனை ஏறியுள்ளேன். கடைசி காலத்தில் கூட எனது உழைப்பை நம்பியே நான் வாழ்க்கை நடத்தி வருகிறேன். இப்போது 2 அல்லது 3 பனை மரங்கள் மட்டுமே ஏற முடிகிறது. பனை மரத்தில் இருந்து நொங்கு வெட்டி விற்பேன். பதநீர் எடுத்து வந்தால், அதை காய்ச்ச வீட்டில் ஆளில்லை.
எனவே அதையும் விற்றுத்தான் தீர வேண்டியுள்ளது. . எனக்கு வீடு சொந்த வீடு என்றாலும், வயல்கள் இல்லை. எனவே தொடர்ந்து பனை ஏறும் தொழிலை செய்து வருகிறேன். முதியோர் பென்ஷன் எனக்கு மட்டுமே கிடைக்கிறது. எனது மனைவிக்கும் கிடைத்தால் ஓரளவுக்கு சிரமம் இன்றி வாழ முடியும்.
நெஞ்சுதோல் போடாமல் இப்போதெல்லாம் பனை ஏற முடிவதில்லை. பதநீர் குடுவை, அருவாள் பெட்டியோடு கூன் விழுந்த முதுகை கொண்டு இப்போது பனை மரத்தில் ஏறுவது மிகவும் சிரமமாக உள்ளது’ என்றார். நாங்குநேரி, ராதாபுரம் வட்டாரத்தில் ஒரு பழமொழி உண்டு. புள்ளைங்க கை விட்டாலும் பனை காப்பாத்தும் என்ற சொலவடை உண்மைதான் போலும்.
![]()