கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!…. 43 ….(உண்மைக் கதை) …. ஏலையா க.முருகதாசன்

யோகமலர் என்னைக் காதலிச்சு பிறகு நான் அவளைக் காதலிச்சு அவளுக்கு தாலி கட்டி மனைவியாக்கி இப்ப அவளுடன் செரங்கூன் வரைக்கும் வந்து நிற்கிறன்.

பொதுவாக என்னைப் பற்றி சிறீலாங்கா நண்பர்கள் யாருக்குமே நல்ல அபிப்பராயம் இல்லை.ஊரில மனைவி பிள்ளைகள் இருக்கத்தக்கதாக மலேசியப் பெண்ணை இன்னொரு மனைவியாக்கியமையால் இவனும் ஒரு மனுசனா, இவன் என்ன காரணம் சொன்னாலும் எல்லாத்துக்கும் செக்ஸ்தான் காரணம் என்று கதைப்பது எனது காதில் விழத்தான் செய்தது.

ஜிஇ பக்ரறியில் வேலை செய்த நண்பர்கள் அனைவரும் முகத்துக்கு நேரே எதுவும் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் மனதுக்குள், ஊரிலை பெண்சாதி பிள்ளைகள் இருக்கத்தக்கதாக மலேசியக்காரியை இன்னொரு பெண்டாட்டியாக்கியிருக்கிறான் என்று சொல்லாமலா இருந்திருப்பார்கள்.

இன்றைக்கு என்னுடைய ஊரிலை இருந்துவந்த பொடியன் ஒருத்தன் என் காதுபடவும் யோகமலரின் காதுபடவும் அவனும் என்னைப் பற்றிக் கேவலமாகவே கதைக்கிறான்.

மனம் குழம்பிப் போயிருக்க நெருப்புக் காயத்திற்கு எண்ணை தடவும் மயிலிறாக யோகமலர் ஆறுதலாக இருக்கிறாள்.

எனது முகம் வாடியிருப்பதைக் கண்ட யோகமலர் „ என்னங்க ஏன் முகம் ஒருமாதிரியாயிருக்கு,எம்மைப்பற்றி அறிந்தவங்க சொல்றதைச் சொல்லத்தான் செய்வாங்க, அதுக்கெல்லாம் கவலைப்பட்டால் நிம்மதியாக வாழ முடியாதுங்க, விதியின் வழியில வாழுறோம் என நினைச்சிட்டு வாங்க’ என்றவள் தனது கைகளை எனது கைகளுக்குள் செருகியபடி நடந்தவள்’மகாராணி கடைக்குப் போவோம்ங்க’ என்று சொல்லிவாறு நடந்து கொண்டிருந்தாள்.

நான் மகாராணி புடவைக்கடைக்கும் முஸ்தாபா புடவைக்கடைக்கும் இரண்டு மூன் முறை வந்திருக்கிறன்.

ஊரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த அடுத்த கிழமையே பூன்லேறைவ்விலிருந்து எனது வீட்டுக் கட்டிடத்தின் முன் கட்டிடத்தில் இருந்த பெண்பிள்ளைகளின் தலைவியான விமலாவுடன் வந்திருக்கிறன்.

மகாராணி புடவைக்கடையில் மனைவிக்கு இரண்டு சாறிகளும்,முஸ்தபா கடையில் பிள்ளைகளுக்கு உடுப்பும் வாங்கி அனுப்பியிருக்கிறேன்.

மகாராணி கடையில் விற்கும் உடுப்புக்கள் தரமானவை.சிங்கப்பூரில் எல்லாப் பொருட்களின் தரக்கட்டுப்பாடுகளும் மிகவும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படுவது பற்றி ஒருமுறை பேச்சோடு பேச்சாக ஜிஇ பக்ரறியின் வேலைத்தளப்பிரிவு பொறுப்பாளர் அகமட் எனக்குச் சொல்லியிருந்தார்.

மகாராணி கடைக்குள் இருவரும் நுழைஞ்சதும், இன்முகத்தோடு கடைப்பணியாளர்கள் வரவேற்றனர்.

„ என்ன வாங்கப் போறீங்க’ என்று கடைப் பணியாளர்களில் ஒருவர் கேட்டதும், „சாறிகளைக்காட்டுங்க’ என்று யோகமலர் சொன்னதும், ஒவ்வொரு விலையிலுமுள்ள சாறிகளை எடுத்து மேசையில் பரப்பி வைச்சனர்.

„மடம் உங்களுக்கா’ என்று கேட்ட பணியாளுக்கு „அக்காவுக்கும் எனக்கும் சேர்த்து இரண்டு சாறிகள் எடுக்கப் போறம்’ என்று சொல்லிக் கொண்டே,சீலைகளைப் பார்த்த யோகமலர் „ இது அக்காவுக்கு நல்லாய் இருக்குமில்லீங்களா’ என்று ஒவ்வொரு சீலையாக எடுத்துக் காட்ட, எனது மனைவியின் நிறத்துக்கு ஏற்றதாக மாதுள முத்து கலரில் நீலக் கரையுள்ள ஒரு சீலையை எடுத்துக் காட்ட, „ ரொம்ப நல்லாயிருக்குங்க, எனக்கும் ஒரு சாறியைச் செலக் பண்ணுங்க’ என்றாள்.

„நீங்களே செலக்ட் பண்ணுங்கள் „என்று சொன்ன போது,’அக்காவுக்கு செலக்ட் பண்னின மாதிரி எனக்கும் செலக்ட் பண்ணுங்க „ என்று யோகமலர் விடாப்பிடியாகச் சொல்ல,மனைவிக்கு செலக்ட் பண்ணின அது போன்று இன்னொரு சீலையை யோகமலருக்கு எடுத்தன்.

நாங்களிருவரும் கதைச்சுக் கொண்டிருக்கும் ஒலித் தொனியை வைத்து கடைப்பணியாளர்’நீங்க யாழ்ப்பாணமா, நீங்க பேசுற ஸிலாங் யாழ்ப்பாணத் தமிழயாயிருக்குது „ என்று கேட்க „நான் சிறீலங்கா யாழ்ப்பாணத்திலையிருந்து இங்கை வேலைக்கு வந்தனான், இவ மலேசியாவில ஜோகூர்பாரு, இவாவை நான் மறி பண்ணியிருக்கிறன்’ என்று சொல்ல, „ஓ அப்படியா கொங்கிராயுலேசன்,யாழ்ப்பாணமும் மலேசியாவும் இணைஞ்சிருக்கு வேலை இடத்திலை சந்திச்சீங்களா, லவ் மறீஜ்தானே „ என்று மிகவும் இயல்பாகவும் இரசிப்புடனும் சொன்னதைக் கேட்டு யோகமலர் தலைகுனிந்து கண்களை மட்டுமே மேலுயுர்த்தி வெட்கத்துடன் சிரிக்கும் போதே அவளுடைய முகம் சிவக்கத் தொடங்கியதைக் கண்ட நான் இனி என்ன நடக்கப் போகுது என்பதை அறிஞ்சு கை விரல்களை யாருமே கவனிக்காத போது பிடிச்சன்.

எனது மனைவிக்கும், தனக்கும் சீலைகளை எடுத்து முடிச்ச யோகமலர்’ இனி உங்களுக்கு றவுசரும் சேர்ட்டும் எடுக்கணும்ங்க’ என்றவளுக்கு,’சேர்ட்டை பிறகு எடுப்பம், இப்ப றவுசருக்கு துணியை எடுப்பம் எனக்கு றெடிமேட் றவுசர் சரிவராது தைக்கவேணும், துணியை எடுத்துக் கொண்டு போவம்’ என்று சொல்லிய நான், „ எனக்குப் பொருத்தமான கலரை செலக்பண்ணும்படி அவளிடம் சொல்ல,யோகமலர் செலக்ட் பண்ணின துணிக்கலரைப் பார்த்து எனக்கு வியப்பு ஏற்பட்டது.

எனக்கு பிறவுன்கலர் பிடிக்கும்.’எனக்கு விருப்பமான கலரை எடுத்திருக்கிறியள்’ என்ன நான் „வைற்கலர்த் துணியொன்றையும் எடுப்பமா’ என்று கேட்க யோகமலர் „வைற்கலரா அது உங்களுக்குப் பிடிக்குமா, அது சீக்கிரத்தில டேர்ட்டியாகிடுமே’ என்றவள் „ உங்களுக்கு விருப்பமென்றால் எடுங்க’என்றாள்.

கடைப்பணியாளர் நாங்கள் வாங்கிய சீலைகள்,பிள்ளைகளின் உடுப்புக்கள் றவுசர் துணிகள் என எல்லாத்தையும் மடிச்சு அதற்கான பில்லை எழுதுவதற்காக கொஞ்சம் விலத்திச் செல்ல,யோகமலரின் காதுக்குள் …எடுக்கலையா என்று சொல்ல அவள் வெட்கத்துடன் „ என்னங்க நீங்க, அது இது என்று எல்லாம் நீங்கதான் எடுத்துத்தரப் போறீங்க,அளவுகளும் உங்களுக்கு தெரிஞ்சிடும்ங்க ஐயையோ நீங்க என்னங்க, சாதரண ஆளில்லைங், உங்களோட அக்கா என்ன பாடுபட்டிருப்பாங்க’என்றாள்.

யோகமலர் ஜிஇ பக்ரறியிலை வேலை செய்த போதே எனது சம்பளத்திலையிருந்து எனது செலவுக்கோ, தனக்குச் செலவழிக்கவோ எடுக்கக்கூடாது, முழுக்காசையும் மனைவிக்கு அனுப்பிவிட வேண்டும் என்றும் தனது சம்பளத்தில் குடும்பச் சிலவைச் சமாளிக்கலாம் என்றும் கண்டிப்பாகச் சொல்லியிருந்தாள்.

நாங்களிருவரும் தேவையானதை வாங்கட்டும் என்று யோகமலருக்கு தாலிகட்டிய வெள்ளிக்கிழமை காலை எங்களைச் சந்திச்ச யோகமலரின் அண்ணன்மாரும் அண்ணிகளும் குடுத்த ஐயாயிரம் சிங்கப்பூர் டொலர்களை வைச்சிருங்கள் என்று என்னிடமே யோகமலர் தந்திருந்தாள்.

அதிலிருந்து காசை கடைப் பணியாளரிடம் குடுத்துவிட்டு அவர் தந்த பையை வாங்கி கடையை விட்டு வெளிக்கிட எத்தனிக்கையில் „கொடுங்க எதுக்கும் சரிபார்ப்பம்’ என்று பையை வாங்கியவள், பையின் வாயைத் திறந்து கண்களால் எல்லாம் இருக்கின்றதா என்று பார்த்தவள் கையை உள்ளே விட்டு விரல்களால் வாங்கியவற்றை எண்ணியவளைப் பார்த்த கடைக்காரர் சிரித்துக் கொண்டே „ சார் நீங்க கெட்டிக்காரப் பெண்ணைத்தான் மனைவியாகச் செலக்ட் பண்ணியிருக்கீங்க’ என்றார்.

„ ஆமா வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம் அது இல்ல இது இல்லன்னு இங்க வந்தா போறப்போ சரிபார்த்திட்டு போயிருக்கணுமில்லையான்னு நீங்க சொல்லமாட்டீங்களா’ என்று சிரிச்சுக் கொண்டே யோகமலர் சொல்லிக் கொண்டே கடையைவிட்டு வெளிக்கிட்டு வீதியில் கால் வைக்க, „யோகி „ என்று ஒரு பெண் கூப்பிடும் குரல் வர திரும்பிப் பார்த்தோம்.

ஒரு அணும் பெண்ணும் வந்து கொண்டிருந்தார்கள்.’மாமா மாமி என்ன இங்க’ என்று முகமலர யோகமலர் சொல்ல,அந்த ஆணைப் பார்த்தன்.அவர் எனக்குத் தெரிந்தவராக இருக்கிறாரே என்ற நினைவில் சில விநாடிகளிலேயெ அவரைக் கண்டுபிடித்துவிட்டன்.

அவர் நான் ஜிஇயில் வேலை செய்த போது மொலக்ஸ் என்ற வானொலி தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு உதிரிப்பாகங்கள் செய்யும் பக்ரறியில் இரவில் வேலை செய்பவர்களுக்கு பொறுப்பாக இருந்தவர்.அவருடைய பெயர் மகேந்திரன்.

அவருக்கு கைலாகு குடுத்து „கலோ „ சொல்லி „ எப்படியிருக்கிறியள்’ என்று கேட்க, அவரும் நட்புடன் „ரொம்ப நல்லாயிருக்கேன்,நீங்க எப்படி இருக்கீங்க, நீங்க புதுமாப்பிளையாச்சே,மலேசிய தமிழ்நாட்டுப்

பெண் பெண்டாட்டியா வந்துட்டாங்க,சந்தோசந்தானே’ என அவர் இயல்பாக சிரித்துக் கொண்டு கேட்க நான் அமைதியாகவிருந்தன்.

மகேந்திரனின் மனைவி உற்சாகமானவர்.யோகமலரிடம் „என்ன யாழ்ப்பாணத்து மருமகளே , யாழ்ப்பாணத்துக்கு எப்ப போவீங்க’ என்று கேட்க தான் யாழ்ப்பாணத்துக்கு போகும் சூழ்நிலையில் இல்லை என்பதை யோகமலர் புரிஞ்சு வைச்சிருந்ததால் „அவரோட வேர்க்பெமிட் முடிய அவரு ஊருக்குப் போறப்போ நானும் போவன்’ என்று சொல்லி சமாளித்தாள்.நான் கல்hணம் முடிச்சு மனைவி பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது இவர்கள் இரண்டு பேருக்கும் தெரியவில்லைப் போலும் என்று யோசித்துக் கொண்டிருக்கையில்…..

„என்ன மாப்பிளை எங்கட மருமகள் யாழ்ப்பாணத்து பெண்கள் போல இருக்காளா’ என்று என்னைப் பார்த்துக் கேட்க,எல்லாப் பெண்களும் ஒரே மாதிரித்தானே என்று சொல்ல வாய் உண்ணிய போதிலும் „ யோகமலர் எனக்கு வரமாக கிடைத்திருக்கா’ என்று ஒற்றை வரியில் பதில் சொன்னன்.

„ ஆமா நீங்க இரண்டு பேரும் பஸ்ஸிலையா வந்தீங்க’ என்று மகேந்திரனையும் மனைவியையும் பார்த்து யோகமலர் கேட்க,’மோட்டர்பைக்கிளை வந்தனாங்க’ என்று யோகமலரின் மாமி சொல்ல,’சரிங்க மாமா மாமி,நாங்க புறப்படுறம் நாளைக்கு என்எம்பிக்கு முதன்முதலாக வேலைக்குப் போகப் போறம்,அப்புறம் கோமள விலாசில மசாலா தோசைக்கு ஓடர் கொடுத்திட்டு வந்திருக்கோம், அதையும் வாங்கிட்டுப் போகனும்’ என்று யோகமலர் சொல்ல,மகேந்திரன் மனைவியிடம் கண்களால் ஏதோ சொல்ல, அவரின் மனைவி வேகமாக மகாராணி கடைக்குள் நுழைய, மகேந்திரன் „வாங்க கிருஸ்ண பவானிலை ரீ குடிப்பம் என்று எங்களை கட்டாயப்படுத்தி கூட்டிச் சென்றார்.

கடைக்குள்ளை நாங்கள் வெறுமையாக இருந்த மேசையடியில் உட்கார்ந்திருந்தம்.

யோகமலரின் மாமி வரும் வரை காத்திருந்தம்.அவர் கிருஸ்ண பவான் கடைக்குள் நுழையும் போது அவரின் கையில் இரண்டு பைகள் இருந்தன.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *