கதைகள்

ஒரு காகத்தின் ஆதங்கம்!…. ( உணர்வூற்று உருவகச்சித்திரம் ) தவமணி மாணிக்கவாசகர் – மெல்பன்.

நாங்கள் காகத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் . எங்கள் குடும்பத்தில் ஐந்து அங்கத்தவர்கள் உள்ளனர். நாங்கள் மெல்பனில் உள்ள ஒரு யூக்கலிப்டஸ் மரத்தில் கூடுகட்டி வாழ்ந்து வருகின்றோம் .

எங்களுடன் அதே மரத்தில் புறா குடும்பத்தினரும் வாழ்ந்து வருகின்றார்கள் . நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம். ஆனால், தற்போது இருகுடும்பங்களும் நாளுக்கு நாள் முரண்பட்டு சில சமயங்களில் மனஸ்தாபங்களும் வருகின்றன .

நாம் குடியிருக்கும் அந்த யூக்கலிப்டஸ் மரத்தைச் சுற்றி நான்கு வீடுகள் உள்ளன. இரண்டு தமிழ் குடும்பமும் ஒரு முஸ்லீம் குடும்பமும் ஒரு ஆங்கில குடும்பத்தையும் சேர்ந்தவர்கள் அவற்றில் வசிக்கிறார்கள்.

நங்கள் அவர்களிடமிருந்தும் வெளி இடங்களுக்கு பறந்து சென்றும் எமக்குத் தேவையான உணவை பெற்றுக்கொள்வோம்.

தினமும் அதிகாலையில் நாங்கள் விடியலை நோக்கி “ கா… கா…. “ என கரைந்து பாடுவோம் . அப்பொழுது ஏனைய பறவைகளும் துயில் எழுந்து சத்தமிட்டு குரல் எழுப்புவார்கள். இதனால் சுற்றியுள்ள குடும்பத்தினர் தமது உறக்கத்தை இழந்துவிடுவதாகவும் நாம் அவர்களின் சுற்றாடலை அசுத்தமாக்குவதாகவும் கூறி எங்களை துரத்திவிடுவதற்கு விரும்புகிறார்கள்.

நங்கள் கூடுகட்டி வசிக்கும் மரத்தை வெட்டிவிடப்போவதாகவும் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், தமிழ் குடும்பத்தினர் இதனை விரும்பவில்லை .

எங்களுக்கு உள்ள ஆதங்கம் என்னவெனில், இந்த நாட்டில் மற்ற பறவைகள் , மிருகங்களை பாதுகாப்பது போன்று எங்களை எவரும் கவனிப்பதில்லை . எங்களை ஆதரிப்பதில்லை . எங்களின் சிலர் கறுப்பு நிறமாகவும் சிலர் கறுப்பும் வெள்ளையும் கலந்த நிறமாகவும் இருக்கிறார்கள் . இதனால் நாங்கள் அழகு இல்லாமல் இருப்பதாக கூறுகிறார்கள் .

அத்துடன் எங்களுக்கு கதைக்கவோ பாடவோ முடியாதென சொல்கிறார்கள். அத்துடன் நாங்கள் சில சமயங்களில் மக்கள் வீதிகளில் செல்லுமிடத்து அவர்களை துரத்தி கொத்துவதாகவும் முறைப்பாடுகள் சொல்லுகிறார்கள் .

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை நாம் மறுக்கிறோம். அவர்கள் எங்கள் கூடுகளை தாக்குவார்கள் என்பதால் நாங்கள் அவர்களை கலைக்கின்றோம்

நாங்கள் தற்போது இருக்கும் மேலை நாடுகளில் வாழும் மக்கள் கருப்பு நிறம்தான் நல்ல கலர் என கூறுகிறார்கள் . அவர்கள் வேலைக்கோ , திருமண அல்லது மரண வீடுகளுக்கோ போகும்பொழுது வெள்ளை – கருப்பு உடைகளை அணிகிறார்கள் .

எங்களின் பெருமையை தமிழ் குடும்பத்தினர் நன்கு அறிவார்கள். அவர்கள் எங்களுக்கு அண்மையிலேயே வசித்து வருவதில் எங்களுக்கு சந்தோசம். அவர்களது வீட்டின் முற்றத்திற்கு நாங்கள் செல்லும் போது, அவர்களது வானொலியில் ” கருப்புத் தான் எனக்கு பிடிச்ச கலரு ” என்ற பாட்டு ஒலிப்பதைக் கேட்பதுண்டு. அதை கேட்கும்போது நாம் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் .

அவர்கள் இந்து சமயத்தவர்கள். அதனால் எங்களை தெய்வமாக மதித்து நடத்துகின்றனர்

நாங்கள் சனீஸ்வரபகவானின் வாகனம் என்றும் அவர்களது இறந்த உறவினர்கள்தான் காகம் வடிவில் வருவதாகவும், முக்காலத்தையும் அறியும் சக்தி எமக்கு உள்ளதாகவும் நம்புகிறார்கள். சொல்லுகிறார்கள் .

அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த நீரை பிள்ளையார் காகம் வடிவில் வந்து தட்டி விட்டதாகவும் ஒரு கதையைக் கூறுகிறார்கள் .

மேலும் எங்களை அவர்கள் சனீஸ்வரனாக மதித்து சைவ உணவு படைத்து, நாங்கள் அதனை சாப்பிட்டதன் பின்பே சாப்பிடுவார்கள். கோவிலுக்கு போக முடியாதவர்கள் எங்களுக்கு உணவு தந்து வழிபாடு செய்வர்.

மேலும் நாங்கள் அவர்களுக்கு சந்தோச , துக்க செய்திகளை கொண்டுவரும் தூதுவர்களாகவும் விளங்குகிறோம் எனவும் நம்புகிறார்கள். நாங்கள் கா… கா… எனக் கத்தும் ஓசையில் வீட்டுக்கு விருந்தினர் வருவதையும், துக்க நிகழ்ச்சி ஏதோ வரப்போவதையும் முற்கூட்டியே ஆரூடமாகக் கூறுவோம் எனவும் நம்புகிறார்கள். இதனால்

சிலர் எங்களை கலைத்தும் விடுவர். இத்தகைய நன்மைகளை ஏனைய இனத்து பறவைகள் செய்வார்களா ?

நாங்கள் நல்லவர்கள். எங்களுக்கு உணவு கிடைத்தால் நாம் எங்கள் குடும்பத்தவரை அழைத்து அவர்களுக்கும் கொடுத்துத்தான் சாப்பிடுவோம். அது எமது பண்பாட்டுக்கோலம்.

இதனையே பாரதியார் ” காக்கை குருவி எங்கள் ஜாதி ” என்றும் திருவள்ளுவர் “ காக்கை கரைவ கரைந்துண்ணும் ” என்றும் பாடியுள்ளனர்.

அத்துடன் எங்கள் இனத்தில் ஒருவருக்கு மரணம் சம்பவிக்குமானால் நாங்கள் அவ்விடம் சென்று அமைதி காத்து அஞ்சலி செலுத்துவோம்.

தற்போது எங்கள் நிலைமை சற்று கஷ்டமாக உள்ளது. நாங்கள் வசிக்கும் மரத்தை தறிப்பதற்கு வீட்டு உரிமையாளர் திட்டமிடுகின்றார். நாங்கள் நிலத்தினை அசுத்தமாக்குவதாகவும் சொல்லுகிறார்கள்.

அத்துடன் நாட்டில் கொரோனோ பெருந்தொற்றினால் மாநிலம் சமூக இடைவெளிக்காக முடக்கப்பட்டிருப்பதனால் எங்களுக்கும் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளது.

எங்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை . மக்கள் வீடுகளில் கொண்டாட்டங்கள் நடத்துவதில்லை . கோவில்கள் யாவும் பூட்டப்பட்டுள்ளன. உணவகங்கள் மக்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

வீடுகளில் வெளியே இருந்து வரும் பறவைகளுக்கு உணவு போட மக்கள் தயங்குகின்றனர். பல வருடங்களுக்கு முன்னர் வந்த பறவை காய்ச்சல் மீண்டும் வந்து விடுமோ என பயப்படுகிறார்கள் போலும்.

மக்கள் தேவையற்று வெளியில் செல்வதும் குறைந்துவிட்டது. வெளியே செல்லும்போது வாய் மூக்கை மூடி மாஸ்க்குடன் செல்கின்றனர். எல்லோரும் தடுப்பூசி போடுகிறார்கள்.

இத்தகைய நிலைமையில் எங்கள் நிலைமை என்ன ஆகுமோ என்பதுதான் எங்கள் ஆதங்கம். கால ஓட்டத்தில் இதுவும் கடந்து செல்லும் என நினைத்து சனீஸ்வரனை நாமும் வணங்குகிறோம்.

—-0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *