சிங்கப்பூரில் சிலகாலம்!…. 42 …. ஏலையா க.முருகதாசன்.

தொலைபேசி றிசீவரைக் காதில் வைச்சபடியே, தொலைசியை கட்டிலில் எனக்கும் அவளுக்கும் நடுவில் வைச்சவள்,’சொல்லுங்க பெரியண்ணி எப்படியிருக்கீங்க , அப்பா அம்மா அண்ணாக்கள் சின்னண்ணி எல்லாரும் பக்கத்திலேதான் இருக்காங்களா’ என்று கேட்க,’ ஆமா நாங்க எல்லாருமே பக்கத்திலதான் இருக்கோம், இங்கையும் ஸ்பீக்கரை ஓன்பண்ணி கேட்டுக்கிட்டுத்தான் இருக்கோம், யோகி சரியா ஆறரை மணிக்கு நல்ல நேரத்தில் அவரு தாலி கட்டினாருதானே’ என்று மறுமுனையிலிருந்து கேட்க, „ஆமாங்க அண்ணி அது சரியா நடந்திச்சி, அண்ணி அவருடைய ஊரு சிறிலங்காப் பிள்ளை ஒன்று இந்தக் கொட்டலில் வேலை செய்யிறா, அவங்கதான் எங்க பின்னாலிருந்து தாலியைப் பூட்டிவிட்டாங்க,அவங்க பெயரு இராஜகுமாரி,இன்னொன்னு ஜிஇ லேருந்து பேர்சனல் மனேஜர் ரானும் அவங்க கஸ்பெண்டும்,அகமட்டும் அவங்க மனைவியும் வந்து ஆசீர்வதிச்சாங்க பூகொத்தும் ஓர்கிட் பூச்செடியும் கொடுத்தாங்க.என்வெலப்பில ஏதோ கொடுத்தாங்க அத இன்னும் ஓப்பின்பண்ணிப் பாரக்கலை’ என்று உற்சாக சொல்லிக் கொண்டிருக்கும் யோகமலரின் சின்னண்ணி’ அதான் நைட் உங்களுக்கு நேரமிருக்காதே அதைப் பார்க்க …என்று சொல்ல மறுமுனையில் எல்லாரும் சேர்ந்து பலமாகச் சிரிப்பது கேட்டது.
„பெரியண்ணா சின்னண்ணா உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க,என்னோட வாழ்வுக்காக எவ்வளவோ செய்யிறீங்க ….’ என்று கண்கலங்கிச் சொல்ல, „ ஏ அழாதை நீ எங்களுக்கிருக்கிற ஒரே தங்கச்சி உனக்குச் செய்யாமல்….ஆமா கசின் என்ன செய்யிறார்’ என்று பெரியண்ணன் கேட்க „ நீங்க கதைக்கிறதை சிரிச்சுக் கொண்டே கேட்டுக் கொண்டிருக்கிறார்’ என்று அவள் சொல்லி முடிக்கமுந்தி’ ஏ யோகி நீ ஒரே நைட்லே யாழ்ப்பாணத்து மருமகளாக மாறிவிட்டாயா, அவங்க பேசுற மாதிரி கதைக்கிறன்னு பேசுறாய்’ என்னு யோகமலரின் மைத்துனி முறையானவள் சொல்ல, „ஆமா நான் இனி யாழ்ப்பாணத்து அவங்க ஊரான தெல்யலிப்பழை…..’ என்றவள் என்னிடம் உங்க வீடு இருக்கும் இடப் பெயர் சொல்வீங்களே அது என்னங்க’ என்று கேட்டு „அம்பனை „ என்று நான் சொல்ல ஏ வனிதா ‘ நான் யாழ்ப்பாணத்து தெல்லிப்பழையில் உள்ள அம்பனை என்ற இடத்து மருமகளாகிட்டேன், இனி அவங்க பேசிற மாதிரித்தான் பேசுவேன் என்றவள்’ ஆமா அப்பா ஏதோ சொல்றாரோ என்னது அப்பா ஏதோ அம்பனைனு சொன்னீங்களே அது என்னப்பா’நம்ம ஊரான திருநெல்வேலயில தெல்லிப்பழை என்ற ஊரும் அப்புறம் நீ சொன்னியோ மருமகனோட இடம் அம்பனைனு அந்த இடமும் இருக்கம்மா, அம்பனைனா நிறைய அழகான பனைகள் இருக்கிற இடம்மென்னு சொல்வாங்க’ என்றவர், அவரைக் கேட்டுப் பாரு அப்படியான்னு’ என்று தகப்பனின் குரலைக் கேட்டவள் என்னைப் பார்த்து உங்க இடத்திலேயும் நிறையப் பனை இருக்கான்னு
கேட்க நான் ஓம் என்பது போல தலையாட்டினேன்…’ஆமாப்பா அவரும் அப்படின்னுதான் சொல்றாரு’ என்று யோகமலர் சொல்ல…
„நாளைக்கு நாங்க பேசிறம், இப்ப ஸ்பீக்கரை நிற்பாட்டிறம் நீயும் நிற்பாட்டு, வனிதா ஏதோ பேசனுமாம்’ என்று மறுமுனையில் பெரியண்ணி சொல்ல, ஸ்பீக்கரை நிற்பாட்டிய யோகமலர் காதிலை றீசீவரை வைச்சுக் கொண்டிருக்க மறுமுனையில் „ராத்திரி அது ஓகேயா’ என்று கேட்டு கலகலப்பாகச் சிரிப்பது எனக்கு மெதுவாகக் கேட்டது.
யோகமலலர் „ம்’…என்று முகம் சிவந்து வெட்கத்துடன் சொன்னதைக் கேட்டு மறுமுனையில் பேசியவள் என்ன கேட்டிருப்பாள் என்பதை ஊகித்துக் கொண்டன்.
தொலைபேசியை மேசையில் எட்டி வைச்சவள்,என்னை அணைத்து மடியில் படுத்துக் கொண்டே பிறேக்பாஸ்ருக்கு போகும்வரையும் என்னாங்க செய்வது’ என்று கேட்க , „ குளிச்சிட்டு வாறன், பிறகு ஒரு கோப்பி குடிச்சிட்டு பிறேக் பாஸ்ருக்குப் போவம் என்று சொல்லியபடி „நான் எழுந்து குளியலறைக்குப் போனேன்.
குளிச்சிட்டு வந்த போது யோகமலர் சுடிதார் போட்டுக் கொண்டு கண்ரீனனுக்குப் போவதற்கு ஆயத்தமாக நின்றாள்.
நான் உடைமாற்றிவிட்டு கட்டிலில் உட்கார்ந்திருந்தன்.எனக்கருகில் உட்கார்ந்தவளைப் பார்த்தன்.ஒரு புதிய அழகியாக எனக்குத் தெரிந்தாள்.என் மடிமீது ஏறி அமர்ந்து தனது தலையை என் நெஞ்சோடு சரிச்சு வைச்சிருந்தவள் விம்மி விம்மி அழதாள்.
காலைச் சாப்பாடு சாப்பிடப் போவதற்கு ஆயத்தமாக இருக்கும் போது அவள் திடீரென அழுதது ஏனென்று தெரியாமல், „ஏன் அழுகிறியள்’ என்று கேட்க,’ என்னோடு இங்கேயே இருந்துவிடுங்களேன், அக்கா பிள்ளைகளை மலேசியாவிற்கே கூப்பிடுவோம்ங்க „என்று அவள் சொல்லும் போது சாத்தியப்படாததை சொல்கிறாள் என்ற போதும் நான் அமைதியாக இருக்க அவள்’ அகங்காரியாக,திமிர்பிடிச்சவளாக இருந்த என்னைப் பார்த்தும் என் காதுபடக் கேட்கத்தக்கதாக „ இவளை யாருமே கட்ட மாட்டினம், இவள் கன்னிகழியாத கிழவியாக இருந்து சாக வேண்டியதுதான் என்று ஆணும் பெண்ணுமாய் பலர் சொல்லும் போது ஆண்கள் மீதும் கல்யாணத்தின் மீதும் எனக்க வெறுப்பு வந்து இனி எனக்குக்குத் திருமணமே நடக்காது நான் செய்யப் போவதில்லைன்னு மனசை வைராக்கியமாக்கி இருந்து போதுங்கதாங்;க மாரியம்மா சிறீலங்காவிலேருந்து இங்க உங்களை அனுப்பி வைச்சாங்க, ஆண்களை வெறுத்து திருமணமே இனி நடக்காது திருமண சுகம் இனிக் கிடைக்காது என்ற போது,என்னமோ தெரியலைங்க உங்கனப் பார்த்ததும் எனக்குள்ள எதோ நடந்தது போல இருந்தது.நீங்க திருமணமானவர்னு தெரிஞ்சும் என்னால உங்கள விட்டுவிலகிச் செல்ல முடியல, அது ஏன்னு இதுவரை புரியலங்க’ என்று சொன்னவள் தயக்கத்துடன் இப்பிறவியல எனக்கு திருமணத்தில கிடைக்கிற ராத்திரி கிடைச்ச அந்த சுகம் கிடைக்காமலே
முதிர்கன்னியாகி நரைவிழுந்து கிழவியாகி என் வாழ்வு முடிஞ்சுடுமோன்னு ஏங்கினேனுங்க..ஆனா அந்த அதுக்காகத்தான் அதை அனுபவிக்கத்தான் உங்களை விடாப்பிடியாக காதலிச்சு திருமணம் செய்தேன்னு பிளீஸ் நினைக்காதீங்க தாலி கட்டிய மனைவியாக உங்களோட ஒரு இரவு வாழ்ந்த வாழ்க்கையே போதுமுங்க இப்ப செத்தாலும் அது சந்தோசம்ங்க„ என்று அழுதழுது கதைச்சவள் என்னை இறுக கட்டிப்பிடிச்சாள்.
„ அவள் வெளிப்படையாக கதைச்சது எனக்கு பிடிச்சுக் கொண்டதால் ,நான் உங்களை பிழையாகவே நினைக்கவில்லை,நீங்களும் எனக்கு இன்னொரு நல்ல மனைவிதான், இனிமேல் எதையும் நினைச்சு அழவே கூடாது,முதலிலை பிறேக் பாஸ்ட்டை முடிப்பம் „ என்ற நான் அவளின் கண்களை துடைத்துவிட்டன்.
அவளின் கண்கள் சிவந்திருந்தன,’ கண்கள் சிவந்திருக்கு போய் முகத்தைக் கழுவிப் போட்டு வாங்க’ என்று சொல்ல, அவளும் முகத்தை கழுவிவிட்டு வந்தாள்.
அன்று காலைச்சாப்பாடு சாப்பிட்ட நாங்கள் அந்தக் கொட்டலோடு இருந்த கொட்டலுக்கு சொந்தமான பூங்காவில் நேரத்தைக் கழித்தோம்.
மத்தியானச் சாப்பாடு முடிஞ்சதும் இருவரும் நித்திரை கொண்டோம்.கட்டிலில் இருவரும் படுத்தவள் வெட்கத்துடன் „ அது இரவில மட்டுந்தான் „ என்றாள்.
என் மனமும் உடலும் அதுக்கு விடாப்பிடியாக தவிச்சுக் கொண்டிருந்தாலும் அவள் எனக்கு நல்ல மனைவியாக கட்டுப்பாட்டை வலியுறுத்தியதால் இருவரும் அமைதியாக நித்திரை கொண்டம்.
இருவரும் நித்திரை கொண்டெழும்பி முகம் கழுவிய பின் மாலைத் தேத்தண்ணிக்காக கன்ரீனுக்குப் போனோம்.தேத்தண்ணி கோப்பியுடன் கேக் வகைகள் சீன மலேய் பலகாரங்களும் இருந்தன.
வசதியான தரமான கொட்டலில் வீடு போன்ற அறை,மெதுமையான கட்டில், வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த அத்தனை பொருட்களும் வெளிர் நீல நிறத்தில் இருந்தமை, சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்த இடத்தில் விதி எனக்கு ஒரு அழகிய பெண்ணை மனைவியாக்கியமை, அவளுக்கு தாலிகட்டியமை, இரவு நேர மகிழ்ச்சி என இவையெல்லாம் ஒரு வேளை கனவோ என மனம் எண்ணியது.
விதம் விதமான பலகாரங்களில் ஒவ்வொன்றையும் எடுத்த உருசித்துப் பார்த்தோம்.
பிறகும் கொட்டல் பூங்காவிலிருந்த போது, எம்மைக் கன்ரீனில் சந்தித்த கொழும்பு தமிழ்க் குடும்பத்தினர் எமக்கு முன்னாலிருந்த இருக்கையில், „கலோ’ என்று சொல்லியவாறு வந்து உட்கார்ந்தனர்.
நாங்களும் கலோ என்று சொன்னம்.அந்தப் பெண் „நீங்கள் சிறீலங்காவுக்கு போகிற போது உங்கடை வைபை கூட்டிக் கொண்டுதானே போவீங்க, இல்லாட்டி மலேசியாவில இருப்பீங்களா’ என்று கேட்க,’ மலேசியாவில இருக்க மாட்டோம்ங்க சிறீலங்காவில அவரு ஊரான தெல்லிப்பழைக்கே அவரோட
போயிடுவேணுங்க, எனக்கு அங்க போறதுதாங்க விருப்பமங்க „ என்று தாமதிக்காமல் யோகமலர் பதில் சொன்னாள்.அவளுக்கே தெரியும் என்னோடு அவளால் சிறீலங்காவுக்கு வரமுடியாதென்பது.
கொழும்புக் குடும்பத்தினர் அங்கை இங்கை என்று விபரம் அறிந்து அவர்கள் எம்மைப்பற்றி அறிவதில் ஆர்வம் காட்டாமல் இருக்க வேண்டுமென்பதற்காகவும் வாய்தடுமாறித்தன்னும் என்னையறியாமலே கதைப்பராக்கில் நான் கல்யாணம் செய்தவன் என்பதை அவர்கள் ஊகித்து அறிஞ்சு கொள்ளாமல் இருப்பதற்காகவும் அவர்களுடன் இயல்பாக பேசுவதைத் தவிர்த்த போதிலும்,பணக்காரர்கள் மட்டுமே வந்து தங்கக்கூடிய இந்தக் கொட்டலில் நாங்களும் தங்கியிருப்பதை வைச்சு நாங்களும் பணக்காரர்கள் என அவர்கள் நினைச்சு விட்டார்கள்.
அதனால் அடுத்த கேள்வியாக எங்களைப் பார்த்து’ நீங்கள் எப்படியும் வருசத்திலை இரண்டு மூன்று தடவையாவது மலேசியாவுக்கு வந்து போவீர்கள் „என்று சொல்ல நாங்கள் இருவரும் வலிஞ்சு புன்னகைத்து ஓம் என்பது போல தலையாட்ட,யோகமலரின் தோள்பக்கமாக கையைப் போட்டுக் கொண்டு கதைச்சுக் கொண்டிருந்த நான் நாங்கள் எழும்பிப் போவம் என்பதை உணர்த்த மெதுவாக அவளின் தோளில் விரல்களால் அழுத்த அவள் என்னைத் திரும்பிப் பார்க்க என் கண்களில் உள்ள குறிப்புணர்ந்து அவளாகவே „ எனக்கு கொஞ்சம் தலைவலியா இருக்குங்க றூமக்கு போவமா’ என்று என்னைப் பார்த்து கேட்க, அவர்களுக்கு சொறி என்று சொல்லிவிட்டு எழுந்து போனம்.
மூன்று வேளை நல்ல சாப்பாடும், கோப்பி தேத்தண்ணி விதம் விதமான பலகாரங்கள் எனவும் சொகுசான கட்டிலில் அந்தச் சுகமும் நல்ல நித்திரையுடன் சனி ஞாயிறு நாட்கள் கழிந்தன.
ஞாயிறன்று யோகமலர் „ ஏங்க நாளைக்கு பிறேக்பாஸ்ட்டை முடிச்சிட்டு நம்ம வீட்டுக்குப் போனால் நல்லதுங்க, வீட்டுக்குப் போனம்னா அங்க எல்லாத்தையும் அறேஞ்பண்ணி வைக்கலாம்.ரியூஸ்டே மோர்னிங் என்எம்பி பேர்சனல் மஜேரைச் சந்திச்சு அவங்கட்டை ஜிஇ பேர்சனல் மனேஜர் கொடுத்த கடிதத்தை கொடுத்தம்னா நாம இரண்டு பேரும் வேர்க் பண்ற இடம் எது என்ன வேலைனு சொல்வாங்க’ என்று சொல்ல அவள் சொல்வதுதான் சரி அப்பத்தான் ஸ்றஸ் இல்லாமலிருக்கும் என்று நினைச்ச நான் „ அப்படியே செய்வம் „ என்றன்.
திங்கட்கிழமை காலை காலைச்சாப்பாட்டை முடிச்சுக் கொண்டு எங்கள் இரண்டு பேருடைய சூட்கேசையும் எடுத்துக் கொண்டு, றிசப்பசனிஸ்ட் இருந்த இடத்துக்குப் போய், எங்களிடம் குடுத்திருந்த கதவைத் திறக்கும் எலக்ரோனிக் காரட்டைக் குடுத்து அவர்களிடம் விடைபெறும் போது,பொலித்தீனால் சுற்றிய ஒரு சிறிய கூடைக்குள் லிச்சிப் பழங்கள் சொக்லேட்டுகள் வைச்சு அதை அழகாக றிபனால் கட்டி அதில் „பெஸ்ட் விஸஸ்’ என்று எழுதிய கார்ட் ஒன்றை கட்டித் தந்தார்கள்.
அவர்களுக்குத் தாங்யூ சொல்ல,’எங்கள் கொட்டலில் பெஸ்ட் நைட்டைக் கொணடாடும் நியூ கப்பிள்சுக்கு இப்படி அன்பளிப்பு செய்வது இந்த கொட்டலின்
பண்பு „ என்று அவர்கள் சொல்ல மீண்டும் தாங்யூ சொல்லிவிட்டு அங்கிருந்து எங்களுடைய வீட்டுக்கு ராக்சியில் வந்து சேர்ந்தம்.
கொட்டலில் தங்கியிருந்த போது, வெள்ளிக்கிழமை நான் அதைக் கவனிக்கவில்லை, ஆனால் சனிக்கிழமை இரவும்,ஞாயிற்றுக்கிழமை இரவும் யோகமலர் நாமிருவரும் கட்டிலில் படுப்பதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னதாக ஒரு ரபிலற்றைப் போட்டு தண்ணீர் குடிப்பதைப் பார்த்த நான் „என்ன ரபிலற் „ என்று கேட்க,தயக்கத்துடன் „இது கருத்தரிக்:காமல் இருப்பதற்கு’ என்றாள்.’இதை எப்படி வாங்கினீங்கள் „ என்று கேட்க, „பெரியண்ணியைக் கட்டாயப்படுத்தி வாங்கினேனுங்க, நீங்க எனக்குப் போதுமுங்க எங்களுக்கு குழந்தை வேட்டாம்ங்க’ என்றாள்.நானும் அவள் ரபிலற் போடுவதை சரியென்று மனசால் ஏற்றுக் கொண்டு அமைதியாக இருந்தன்.
திங்கட்கிழமை வீட்டுக்கு வந்த நாங்களிருவரும்,சூட்கேசுகளைத் திறந்து தோய்ப்பதற்கென ஊத்தை உடுப்புக் கூடைக்குள் வைச்சுவிட்டு, தேத்தண்ணி போட்டுக் குடிச்சம்.
சமையலுக்குரிய சாமான்களையும் பாத்திரங்களையும் யோகமலரின் அண்ணன்மார் ஏற்கனவே வாங்கி வைச்சிருந்தனர்.
மத்தியானம் என்ன சாப்பிடுவம் என்று நான் கேட்க’ நான் சமைக்கிறேனுங்க „ என்று யோகமலர் சொல்ல,’வேண்டாம் மத்தியானம் சிறங்கூனுக்குப் போய் அங்கை இருக்கிற கோமள விலாசில சாப்பிடுவம், அதற்குப் பிறகு, அங்கை கடைகளுக்குப் போயிட்டு இரவுச் சாப்பாட்டுக்கு ஏதாவது வாங்கி வருவம் „ என்று நான் சொல்ல, „வேண்டாம்ங்க என் கையால உங்களுக்குச் சமைச்சு தாரேனுங்க,எதுக்குங்க றெஸ்ரோறன்ட் சாப்பாடு என்று அவள் சினுங்க, கட்டாயப்படுத்தி அவளைச் சிறங்கூனுக்குக் கூட்டிக் கொண்டு போனன்.
சுறங்கூனுக்குப் போகும் போது அவள் வெளிர் பிங்நிற சீலை உடுத்திக் கொண்டு வந்தாள்.நான் கட்டாயப்படுத்தி கண்ணுக்கு மையை10ச வைச்சதுடன், மெல்லிய றோஸ் கலரில் லிப்ஸ்ரிக்கும் நிகக் கலரில் கியூரெக்சும் பூச வைச்சன்.
„உங்களுக்காகத்தான் இதெல்லாம் செய்யிறேனுங்க அக்கா இப்படியெல்லாம் பூசுவான்னு சொல்;;லியிருந்தீங்க’என்று வீட்டைவிட்டு வெளிக்கிடும் போது சொன்னாள்.
சிறங்கூனுக்குப் போனவுடன் மத்தியானச் சாப்பாடு சாப்பிடுவதற்காக கோமள விலாசுக்குள் போனம்.அங்கே கூட்டம் அதிகமாக இருந்தது. அரைவாசிக்கு மேல்வெளிநாட்டு; வெள்ளைக்காரர்கள்.அவர்கள் கையால் கஸ்டப்பட்டுச் சாப்பிட்டாலும் இரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
எங்களுக்கு ஏதாவது இருக்கை தென்படுகிறதா என கண்களால் துழாவினோம்.எங்கள் இருவரையும் பார்த்த உணவு பரிமாறும் பணியாள்
எமக்கருகில் வந்து „ நீங்க ரெண்டுபேரும் உட்கார்ந்து சாப்பிட இடம் இருக்குங்க வாங்க „ என்று சொல்லி, அப்பொழுதுதான் சாப்பிட்டு முடிச்சு அந்த மேசையைவிட்டு எழுந்து போய்க் கொண்டிருந்த மேசையடிக்கு கூட்டிக் கொண்டு போய், வேகமாக மேசையை சுத்தம் செய்துவிட்டு எங்களை உட்காரச் சொன்னவர் „சொல்லுங்க என்ன லஞ்ச் சாப்பிடப் போறீங்க’ என்று கேட்க,யோகமலர் „றைஸ் சாப்பிடுவமா’ என்று என்னைப் பார்த்துக் கேட்க,’சரி’ என்று தலையாட்ட „சோறு „ என்று பணியாளரிடம் யோகமலர் சொல்ல, அவர் அங்கிருந்த யொக்கிலிருந்து எவர்சசில்வர் பேணியில் தண்ணீரை வார்த்துவிட்டு சோறு கொண்டு வருவதற்காக போய்விட்டார்.
அவர் சென்ற ஐந்து நிமிடங்களுக்குள் பெரிய இரண்டு தட்டில் சோறும் பல சிறு சிறு எவர்சில்வர் கிண்ணங்களில் விதம் விதமான கறிகளுடனம் அப்பழமும், பாயாசமும் இன்னொரு பெரிய கழுத்து ஒடுங்கிய எவர்சில்வர் சட்டியில் சோறும் கொண்டு வந்து வைச்சார்.
இரவுச் சாப்பாட்டையும் கோமள விலாசிலேயே வாங்கிக் கொண்ட போய் சாப்பிடுவம் என்று நினைத்த நான் பணியாளரிடம் „இப்பவே ஓடர் பண்ணினால் மூன்று மணியத்தியாலத்திற்கு பிறகு கொண்டு போவதற்கு மசாலாத் தோசை தரமுடியுமா என்று கேட்க,’ முடியுமுங்க எத்தனை தோசை வேணும்ங்க „ என்று கேட்க மூன்று என்று சொன்னன்.
ஒருவரால் ஒரு தோசைதான் சாப்பிட முடியும், கோமள விலாஸ் தோசை அவ்வளவு பெரிய தோசை.அவர் பெயர் கேட்க,எனது பெயரைச் சொல்லிவிட்டுச் சாப்பிடத் தொடங்கினம்.
எங்களுக்கு இரண்டு மேசைகள் தள்ளி மூன்று இளைஞர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.அதில் ஒரு இளைஞர் அடிக்கடி எங்களையே பார்த்தபடி சாப்பிட்டக் கொண்டிருந்தான்.
அவன் திடீரென்று எழுந்து எங்களுடைய மேசையடிக்கு வந்தவன் என்னைப் பார்த்து „நீங்கள் அப்புத்துரையின் இரண்டாவது மகளின் கஸ்பெண்டதானே,முருகதாசன்தானே,உங்களுக்கு பூரணம் மச்சாள்தானே அவரின் மகள் மணி இங்கைதானே வேலை செய்கிறா அவருடைய தாய் கடிதம் ஒன்று தந்துவிட்டவா அதைக் குடுக்க வேணும் உங்களை எங்கையாவது கண்டால் குடுக்கச் சொன்னா, நீங்கள் மணியிட்டை குடுப்பீர்கள் என்றும் சொன்னா,என்னைத் தெரியுந்தானே தெல்லிப்பழை ஸ்ரேசனடி பிள்ளையார் கோவிலுக்குப் பக்கத்திலை இருக்கிற வைரமுத்துவின் மகன்தான் நான், செம்பவான் சிப்யாட்டிலை வேலை செய்கிறன், லீவுக்குப் போய் வந்தனான்,உங்களுக்கு நான் தூரத்துச் சொந்தம், பூரணக்கா வீட்டை போன போது இந்தக் கடிதத்தை தந்துவிட்டவா…..’ என்றவன் „நான் போகேக்கிலை உங்கடை வைபும் பிள்ளைகளும் உங்கடை மச்சாள்காரி ஒருத்தியும் பூரணக்கா வீட்டை வந்திருந்தவை’ என்று அவன் சொன்னதும் எனக்குப் பகீர் என்றது, முகம் சுருங்கியது.
அதை அந்த இளைஞனும் யோகமலரும் கவனிச்சுவிட்டனர்.எனது முகம் சுருங்கியதைக் கண்ட அவன் இவ்வளவு நேரமும் எதேச்சையாக கதைச்சவன் யோகமலரை உற்றுக் கவனிச்சதையும், அவளின் கழுத்திலிருந்த தாலியை குறிப்பாக கவனிச்சதையும் கண்ட நான் அவனை அந்த இடத்திலிருந்து போகச் செய்வதற்காக „சாப்பிட்டுக் கொண்டிருந்த நீங்கள் இடையிலை எழும்பி வந்திருக்கிறியள் போய்ச் சாப்பிடுங்கள் நாங்களும் சாப்பிட்டு முடிச்சிட்டு வெளியிலை போய் நின்று கதைப்பம் „ என்றவுடன் அவன் தனது மேசைக்குப் போய் நண்பர்களுடன் இருந்து கதைச்சுக் கதைச்சு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
எனக்கு உற்சாகமே போய்விட்டது, யோகமலரின் கழுத்திலிருந்த தாலியை அவன் பார்த்த பார்வையும் பூரண மச்சாள் வீட்டிலை எனது மனைவி பிள்ளைகளைப் பார்த்ததாக அவன் சொன்னதையும் இணைச்சுப் பார்த்து மிகவும் குழம்பிப் போனன்.மனச்சாட்சி என்னைப் பிசைந்ததை உணர்ந்தன்.
நான் சங்கடப்படுவதை உணர்ந்த யோகமலர் எனது கையை ஆதரவாகத் தடவி „ஏங்க அந்த ஆள் சொன்னதை நினைச்சு பதட்டப் படாதீங்க, அக்காவைப் பார்த்ததாக ஆள் சொன்னது நோர்மல், என் கழுத்துத் தாலியை அந்த ஆள் கவனிச்சுப் பார்த்ததையும் கவனிச்சேனுங்க யோசிக்காம சாப்பிடுங்க „ என்று ஆறுதல்படுத்தி யோகமலர் பேசியதால் கொஞ்சம் நிம்மதியாகியது மனம்.
நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவனும் அவனுடைய நண்பர்களும் எழுந்து போய்விட்டார்கள்.
அந்த இளைஞன் எழுந்து போனது எனக்கு நிம்மதியாகவிருந்தது.நாங்கள் சாப்பிட்டிட்டு கோமள விலாசைவிட்டு வெளியே வந்த போது அந்த மூன்று இளைஞர்களும் வெளியே நின்றிருந்தார்கள்.அவர்களில் என்னுடன் கதைச்ச இளைஞன் எனக்கருகில் வந்து „ இந்தக் கடிதத்தை மணியிடம் கொடுக்க வேணும்….’ என்று இழுத்தான்.
நான் உடனேயே „எனக்கு நேரமில்லை வேணுமென்றால் அவாவின்ரை இடமான ரோபாயோ அட்ரஸ் தாறன் கொண்டு போய்க் குடுங்கள்’ என்று சொல்லி அட்ரஸை எழுதிக் குடுத்துவிட்டு இங்கிருந்தே அங்கை போவதற்கு பஸ் இருக்குது „ என்று சொல்லிவிட்டு நானும் யோகமலரும் மகாராணி புடவைக் கடையை நோக்கி நடக்கத் தொடங்கினம்.
அப்பொழுது அந்த இளைஞன் „ ஊரிலை சொந்தப் பெண்சாதி இருக்கத்தக்தாக இஞ்சை ஒருத்தியை வைச்சிருக்கிறார் போல’…என்று சொல்வது மெலிதாக காதில விழ,’ அவங்க எங்களைப் பற்றித்தாங்க சொல்றாங்க’ என்று யோகமலர் சொல்ல அவளின் கையை அழுத்திப் பிடிச்சுக் கொண்டு நடந்த நான்’ ஊர் உலகம் சொல்றதைக் காதில வாங்கத் தேவையில்லை,கவலைப்படாதீர்கள்’ என்று சொல்லிக் கொண்டே யோகமலரை கூட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தன்….
(தொடரும்)
![]()